சிங்கப்பூரில் பதிவு செய்யப்பட்ட பயணப் படகு ஒன்று பாத்தாம் சென்று கொண்டிருந்தது. அந்தப் படகில் மே 5ஆம் தேதி பிற்பகல் நேரத்தில் தீ மூண்டுவிட்டது.
என்றாலும் அதிலிருந்த 68 பேருக்கும் எந்தப் பாதிப்பும் இல்லை என்று தெரிவிக்கப்பட்டது. சிங்கப்பூர் கடல்துறை துறைமுக ஆணையம் நேற்று அறிக்கை ஒன்றை வெளியிட்டது.
குயீன் ஸ்டார் 2 என்ற அந்தப் பயணப் படகு, கூசுத் தீவுக்கு அருகே சென்று கெண்டிருந்தபோது பிற்பகல் 12.30 மணியளவில் அதில் தீ மூண்டுவிட்டது என்று தனக்குத் தகவல் கிடைத்ததாக ஆணையம் தெரிவித்தது.
சிங்கப்பூர் குடிமைத் தற்காப்புப் படை, கடலோர காவல்துறை படை ஆகியவற்றோடு சேர்ந்து படகுகளை அனுப்பி ஆணையம் உதவியது.
தீ மூண்ட பயணப் படகை இழுத்துவர இழுவைப் படகு ஒன்றையும் ஆணையம் அனுப்பி வைத்தது.
அந்தப் பயணப் படகு இருந்த இடத்தை தற்காப்புப் படை சென்றடைந்தபோது முன்னதாகவே தீயை பயணப் படகில் இருந்த ஆறு ஊழியர்கள் அணைத்துவிட்டனர்.
அதேவேளையில், அதிலிருந்த 62 பயணிகளும், அப்போது ஹார்பர்ஃபிராண்ட் படகு முனையத்திற்குச் சென்று கொண்டிருந்த மற்றொரு கலனில் ஏறி இருந்தனர்.
அந்தப் பயணிகளில் சிங்கப்பூரர்கள், இந்தோனீசியர்கள், மலேசியர்கள் ஆகியோரும் இதர நாட்டினரும் அடங்குவர்.
தொடர்புடைய செய்திகள்
யாருக்காவது உதவி தேவைப்படலாம் என்பதைக் கருத்தில்கொண்டு அதிகாரிகளை அந்தப் படகு முனையத்திற்கு ஆணையம் அனுப்பி வைத்தது.