$6 மி. மதிப்பிலான பொருள்கள் திருட்டு; காவல்துறை விசாரணை

2 mins read
0dc17b8a-f11a-4cb9-a4e1-d6b6c63357e9
ஈசூன் சமூக மருத்துவமனையிலிருந்து 2014க்கும் 2022க்கும் இடையே பொருள்கள் எடுக்கப்பட்டதாக விசாரணையில் தெரியவந்தது. - படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

கூ டெக் புவாட் மருத்துவமனையின் முன்னாள் மூத்த அதிகாரி ஒருவர் எட்டாண்டுக் காலத்தில் $6 மில்லியன் மதிப்பிலான பொருள்களைத் திருடி, அவற்றை மூன்றாம் தரப்பினரிடம் விற்றதாகக் கூறப்படுகிறது.

இந்த விவகாரத்தைக் காவல்துறையினர் விசாரித்து வருகின்றனர். கையாடிய பொருள்களில் பால்மாவும் அடங்கும்.

இதன் தொடர்பில், சென்ற ஆண்டு தேசிய சுகாதாரப் பராமரிப்புக் குழுமத்திடம் பொதுமக்களில் ஒருவர் தகவல் தெரிவித்ததைத் தொடர்ந்து, அந்த சந்தேகத்துக்குரிய திருட்டுச் சம்பவம் வெளிச்சத்துக்கு வந்தது.

இணைய வர்த்தகத்தளமான ‘ஷாப்பி’யில், ஈசூன் சமூக மருத்துவமனையின் முகவரியைக் கொண்ட முத்திரையுடன் பால்மாவு விற்கப்பட்டதன் தொடர்பிலான சந்தேக நடவடிக்கை குறித்து அவர் குழுமத்திடம் தகவல் தெரிவித்திருந்தார்.

அதனைத் தொடர்ந்து, பால் மாவு, சத்துணவுப் பொருள்கள் உட்பட, ஈசூன் சமூக மருத்துவமனை பணம் செலுத்தி வாங்கிய ஏறக்குறைய $5.5 மில்லியன் பெறுமானமுள்ள இருப்புகள் 2014ஆம் ஆண்டுக்கும் 2022ஆம் ஆண்டுக்கும் இடைப்பட்ட காலத்தில் மருத்துவமனையின் அறை ஒன்றிலிருந்து எடுக்கப்பட்டதாக விசாரணையில் தெரியவந்தது.

அந்தப் பொருள்களின் சில்லறை விலை குறைந்தது $6 மில்லியன் என மதிப்பிடப்பட்டது.

2022ஆம் ஆண்டு செப்டம்பரில் தான் இழந்த குறைந்தது $6 மில்லியனை மீட்க, கூ டெக் புவாட் மருத்துவமனை முன்னாள் மூத்த சில்லறை விற்பனை நிர்வாகி ரே சூ தியோங் ஹியான்மீது வழக்கு தொடுத்தது.

அவர் 2008ஆம் ஆண்டு பிப்ரவரி முதல் 2022ஆம் ஆண்டு ஜூன் மாதம் பதவிநீக்கம் செய்யப்படும்வரை கூ டெக் புவாட் மருத்துவமனையில் பணியில் இருந்தார்.

மருத்துவமனை இருப்பில் உள்ள பொருள்களை அகற்றியதாக அல்லது அவற்றை மற்ற அதிகாரிகளிடம் அகற்றச் சொன்னதாக 42 வயதான திரு சூ மீது மருத்துவமனை குற்றம் சுமத்தியதை நீதிமன்ற ஆவணங்கள் காட்டின.

அத்துடன், $6 மில்லியன் மதிப்பிலான திரு சூவின் சொத்துகளை முடக்குவதற்கான உத்தரவையும் மருத்துவமனை பெற்றது.

ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் கேட்ட கேள்விகளுக்குப் பதில் அளிக்கையில், இவ்விவகாரம் தொடர்பில் புகார் செய்யப்பட்டுள்ளதைக் காவல்துறையினர் உறுதிப்படுத்தினர். விசாரணை தொடர்வதாகவும் அவர்கள் கூறினர்.

குறிப்புச் சொற்கள்