பாதிப்புக்கு ஆளாகும் அபாயம் உள்ள மூத்தோரின் உடல்நலன், சமூக ரீதியான நலன் ஆகியவற்றை மேம்படுத்தும் நோக்கில் 7.3 மில்லியன் வெள்ளி மதிப்பிலான புதிய திட்டம் தொடங்கப்படவுள்ளது.
இத்திட்டத்தை டிபிஎஸ் அறநிறுவனம் வரும் ஜூன் மாதம் முதல் தொடங்கும். இதுகுறித்து டிபிஎஸ் வங்கி சனிக்கிழமை (மார்ச் 29) அறிவித்தது.
சமூக அளவில் தனிமையை அனுபவிப்பது, ஊட்டச்சத்து குறைபாடுகள் ஆகியவற்றைக் கையாள்வது இத்திட்டத்தின் இலக்குகளாகும்.
இதன்கீழ் 60 வயதைத் தாண்டிய 6,000 மூத்தோருக்கு வாரந்தோறும் ஊட்டச்சத்து மிகுந்த உணவு வழங்கப்படும். அங் மோ கியோ, பிடோக், குவீன்ஸ்டவுன் உள்ளிட்ட 12 வட்டாரங்களில் உள்ள மூத்தோருக்கு ஈராண்டுகளுக்கு ஊட்டச்சத்து உணவு வழங்கப்படும்.
அதோடு, மாதந்தோறும் நடக்கும் உறவாடல் நடவடிக்கைகள், பலனளிக்கும் பொழுதுபோக்கு நடவடிக்கைகள் (enrichment activities) போன்றவற்றின் மூலம் தொண்டூழியர்கள், முத்தோருடன் நட்பு வளர்த்துக்கொள்வர். டிபிஎஸ் வங்கியில் பணியாற்றும் ஊழியர்கள் தொண்டூழியர்களாகச் செயல்படுவர்.
மூத்தோர் தங்களிடையே அடிக்கடி பழகிக்கொள்ள வகைசெய்ய தாங்கள் சமூகப் பங்காளிகளுடன் இணைந்து செயல்படப்போவதாகவும் டிபிஎஸ் அறநிறுவனம் தெரிவித்தது.
மூத்தோருக்கான இந்த முயற்சி, சிங்கப்பூரின் 60வது பிறந்தநாளைக் (எஸ்ஜி60) கொண்டாட டிபிஎஸ் மேற்கொள்ளும் நடவடிக்கைகளில் ஓர் அங்கமாகும். சனிக்கிழமையன்று காத்திப் வட்டாரத்தில் நடைபெற்ற ‘கம்யூனிட்டி பாப்-அப் மார்க்கெட்’ (Community Pop-Up Market) நிகழ்ச்சியில் டிபிஎஸ்ஸின் புதிய திட்டம் குறித்து அறிவிக்கப்பட்டது.
டிபிஎஸ் அறநிறுவனம் ஏற்பாடு செய்த அந்நிகழ்ச்சியில் சட்ட, உள்துறை அமைச்சர் கா.சண்முகம், அவரின் சக நீ சூன் குழுத்தொகுதி நாடாளுமன்ற உறுப்பினர்களான லூயிஸ் இங், கேரி டான் ஆகியோர் கலந்துகொண்டனர்.
தொடர்புடைய செய்திகள்
வீட்டு, ஊட்டச்சத்துத் தேவைகள் மட்டுமின்றி ஆதரவில்லாமல் இருப்பது, தனிமை ஆகிய முக்கியப் பிரச்சினைகளையும் கையாள்வது டிபிஎஸ் வங்கியின் இலக்கு என்று டிபிஎஸ் அறநிறுவனம், டிபிஎஸ் குழுமத்தின் உத்திபூர்வ விளம்பர, தொடர்புகள் பிரிவு ஆகியவற்றின் தலைவரான கேரன் குய் நிகழ்ச்சியில் குறிப்பிட்டார். சனிக்கிழமை அறிவிக்கப்பட்ட டிபிஎஸ் அறநிறுவனத்தின் முயற்சி, சிங்கப்பூரின் சமூக இணக்கத்தை மேலும் வலுப்படுத்தும் என்று தான் நம்பிக்கை கொண்டுள்ளதாகவும் அவர் கூறினார்.