ஜூன் மாதம் 7,000 பிடிஓ வீடுகள் விற்பனை

ஜூன் மாதம் 7,000 பிடிஓ வீடுகள் விற்பனை

3 mins read
fffdc2eb-11fa-4485-887f-690608ef192e
2025ஆம் ஆண்டு அக்டோபர் மாதத்தில் பெர்லாயர் ரெசிடென்சசில் 880 வீடுகள் விற்கப்பட்டன. - படம்: வீடமைப்பு வளர்ச்சிக் கழகம்

ஜூன் மாதத்தில் ஏறத்தாழ 7,000 தேவைக்கு ஏற்ப கட்டப்படும் (பிடிஓ) வீடுகள் விற்பனைக்கு விடப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

பெர்லாயர், அங் மோ கியோ உட்பட பல்வேறு வட்டாரங்களில் இந்த வீடுகள் கட்டப்படுகின்றன.

பெர்லாயர் வட்டாரத்தில் பழைய கெப்பல் கிளப் இருந்த இடத்தில் கிட்டத்தட்ட 2,000 பிடிஓ வீடுகள் கட்டப்படுகின்றன.

அங் மோ கியோ வட்டாரத்தில் உள்ள இரண்டு பள்ளிகளுக்கு அருகில் புதிய பிடிஓ வீடுகள் விற்பனைக்கு விடப்படும்.

ஜூன் மாதத்தில் மொத்தம் ஏழு பிடிஓ திட்டங்கள் விற்பனைக்கு விடப்படுவதாகத் தெரிவிக்கப்பட்டது.

புதிய செம்பவாங் நார்த் வட்டாரத்தில் உள்ள இரண்டு வீடமைப்புத் திட்டங்களும் இதில் அடங்கும்.

அங் மோ கியோ, பீஷான், புக்கிட் மேரா, செம்பவாங், உட்லண்ட்ஸ் ஆகிய வட்டாரங்களில் கட்டப்படும் 6,900 பிடிஓ வீடுகள் தொடர்பான விவரங்களை வீடமைப்பு வளர்ச்சிக் கழகம் (வீவக) புதன்கிழமையன்று (பிப்ரவரி 4) வெளியிட்டது.

புக்கிட் மேரா வட்டாரத்தில் உள்ள புதிய பெர்லாயர் குடியிருப்புப் பேட்டையில் இரண்டாவது பிடிஓ திட்டம் அமைகிறது. இது கிரேட்டர் சவுதர்ன் வாட்டர்ஃபிரன்டின் ஒரு பகுதியாகும். அங்கு 1,960 வீடுகள் கட்டப்படுகின்றன.

இந்த வீடுகள் தெலுக் பிளாங்கா சாலையில், தெலுக் பிளாங்கா எம்ஆர்டி நிலையத்துக்கு அருகில் அமைந்திருக்கும். இக்குடியிருப்புப் பேட்டையில் ஈரறை, மூவறை, நாலறை வீடுகள் கட்டப்படுகின்றன.

கட்டப்படும் வீடுகளில் பெரும்பாலானவை ஈரறை மற்றும் நாலறை வீடுகளாகும்.

ஜூன் மாதம் விற்பனைக்கு விடப்படும் பிடிஓ வீடுகளுடன் சேர்த்து, பெர்லாயர் வட்டாரத்தில் பழைய கெப்பல் கிளப் அமைந்திருந்த இடத்தில் ஏறத்தாழ 7,000 வீவக வீடுகளும் 3,000 தனியார் வீடுகளும் கட்டப்படுகின்றன. 2025ஆம் ஆண்டு அக்டோபர் மாதத்தில் பெர்லாயர் ரெசிடென்சசில் 880 வீடுகள் விற்கப்பட்டன. அதுவே அவ்வட்டாரத்தின் முதல் குடியிருப்புப் பேட்டையாகும்.

அங் மோ கியோ வட்டாரத்தில் வரும் ஜூன் மாதத்தில் மொத்த 1,050 வீடுகள் விற்பனைக்கு விடப்படும்.

அங் மோ கியோ அவென்யூ 2ல், சிஎச்ஐஜே செயின்ட் நிக்கலஸ் பெண்கள் பள்ளிக்கு அருகில் 480 மூவறை, நாலறை வீடுகள் கட்டப்படுகின்றன.

அங் மோ கியோ அவென்யூ 1ல் 570 ஈரறை, நாலறை வீடுகள் விற்கப்படுகின்றன.

அவை மேஃபிளவர் உயர்நிலைப் பள்ளிக்கும் பீஷான்-அங் மோ கியோ பூங்காவுக்கும் அருகில் அமைந்திருக்கும்.

செம்பவாங் நார்த் வட்டாரத்தில் மொத்தம் 2,000 வீடுகள் கட்டப்படுகின்றன.

அவை செம்பவாங் டிரைவ், சுங்கை செம்பவாங் ஆகிய இடங்களில் அமைந்திருக்கும்.

அங்கு ஈரறை, மூவறை, நாலறை, ஐந்தறை வீடுகள் கட்டப்படுகின்றன.

உட்லண்ட்ஸ் வட்டாரத்தில் உட்குரோவ் அவென்யூவுக்கும் சிலேத்தார் விரைவுச்சாலைக்கும் அருகில் உள்ள இடத்தில் ஈரறை, மூவறை, நாலறை, ஐந்தறை வீடுகள் விற்பனைக்கு விடப்படுகின்றன.

பீஷான் வட்டாரத்துக்கு உட்பட்ட அப்பர் தாம்சனில் 1,210 பிடிஓ வீடுகள் கட்டப்படுகின்றன.

இவை மெக்ரிட்சி நீர்தேக்கத்துக்கு அருகில் உள்ள லேக் வியூ வட்டாரத்தில் கட்டப்படும் முதல் வீவக வீடுகள்.

470 ஈரறை வீடுகளும் 740 நாலறை வீடுகளும் கட்டப்படுகின்றன.

அந்த வட்டாரத்தில் இரண்டு புளோக்குகளைக் கொண்ட 50 வீவக வாடகை வீடுகளும் அமைந்திருக்கும்.

குறிப்புச் சொற்கள்