நல்வாழ்வுத் திட்டம் நீட்டிப்பு; 7,200 வடகிழக்கு வட்டாரவாசிகள் பயன்பெறுவர்

நல்வாழ்வுத் திட்டம் நீட்டிப்பு; 7,200 வடகிழக்கு வட்டாரவாசிகள் பயன்பெறுவர்

1 of 3
படம்: வடகிழக்குச் சமூக மேம்பாட்டு மன்றம்
படம்: வடகிழக்குச் சமூக மேம்பாட்டு மன்றம்
படம்: வடகிழக்குச் சமூக மேம்பாட்டு மன்றம்

05 Apr 2026 - 12:52 pm

2 mins read

நடமாடும் நல்வாழ்வு அங்காடித் (வெல்னஸ் ஆன் வீல்ஸ்) திட்டத்தின்மூலம் வடகிழக்கு வட்டாரவாசிகள் 7,200 பேர் பயன்பெறுவர்.

கடந்த 2024, 2025ஆம் ஆண்டுகளில் செயல்படுத்தப்பட்ட இத்திட்டம், 2026 ஏப்ரல் முதல் 2028 ஏப்ரல் வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.

வடகிழக்குச் சமூக மேம்பாட்டு மன்றமும் ஹாவ் ரென் ஹாவ் ஷி லிமிடெட் நிறுவனமும் இணைந்து இதற்கு ஏற்பாடு செய்துள்ளன.

அன்றாடம் தேவைப்படும் மளிகைப்பொருள்களையும் சுகாதாரப் பராமரிப்புப் பொருள்களையும் குடியிருப்புப் பகுதிகளுக்கே நேரில் கொண்டுசென்று, குடியிருப்பாளர்கள் எளிதாக அவற்றைப் பெற உதவி வழங்கப்படும். இதன்மூலம் அவர்களின் அன்றாடச் செலவுகளைக் குறைக்கவும் உதவி கிட்டும்.

உணவுப்பொருள்கள், பெரியவர்களுக்கான அணையாடை (டயப்பர்) போன்ற மருத்துவப் பொருள்கள் உள்ளிட்டவற்றை அந்த நடமாடும் நல்வாழ்வு அங்காடியில் பெறலாம்.

இத்திட்டத்தின்மூலம் ஈராண்டு காலத்தில் வடகிழக்கு வட்டாரக் குடியிருப்பாளர்கள் ஏறக்குறைய 7,200 பேர், குறிப்பாக நீல ‘சாஸ்’ அட்டை வைத்துள்ளோர் பயனடைவர் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

“‘நடமாடும் நல்வாழ்வு அங்காடித் திட்டத்தின் மூலம், குடியிருப்பாளர்களுக்கு அவர்களது அக்கம்பக்க வட்டாரங்களிலேயே ஆதரவு கிடைப்பதை எளிதாக்குகிறோம். இன்றியமையாப் பொருள் விநியோகங்களை அவர்களின் வசிப்பிடங்களுக்கு அருகிலேயே கொண்டுசெல்வதன் மூலம், அவர்களது அன்றாடத் தேவைகளுக்கு எங்களால் சிறப்பாக ஆதரவு வழங்க முடியும்; அதே வேளையில், பரிவும் பிணைப்பும் மிக்க ஒரு சமுதாயத்தையும் கட்டியெழுப்ப முடியும்,” என்று வடகிழக்கு வட்டார மேயர் பெய் யாம் கெங் கூறினார்.

அடுத்த கட்டத்தில், தெம்பனிஸ் குழுத்தொகுதி, தெம்பனிஸ் சங்காட் குழுத்தொகுதி, செங்காங் குழுத்தொகுதியில் செங்காங் சென்ட்ரல் ஆகிய பகுதிகளில் உள்ள மூன்று இடங்களுக்கு ஒவ்வொரு மாதமும் அவ்வப்போது இந்த நடமாடும் நல்வாழ்வு அங்காடி நடவடிக்கை இடம்பெறும்.

சனிக்கிழமை (ஏப்ரல் 4) இடம்பெற்ற தொடக்க நிகழ்ச்சியின்போது, சமுதாய, குடும்ப மேம்பாட்டு அமைச்சர் மசகோஸ் ஸுல்கிஃப்லி முன்னிலையில், இந்தத் திட்டத்திற்கு நீண்டகாலமாக, அர்த்தமுள்ள பங்களிப்பை வழங்கிவரும் பங்காளி அமைப்புகளுக்குச் சான்றிதழ்கள் வழங்கப்பட்டன.

குறிப்புச் சொற்கள்
சிங்கப்பூர்நல்வாழ்வுதெம்பனிஸ்செங்காங்தெம்பனிஸ் சங்காட்