சிங்கப்பூரின் பாதுகாப்பை வலுப்படுத்திக் கட்டிக்காப்பதில் முக்கியப் பங்காற்றிய 981 உள்துறைக் குழு அதிகாரிகளின் பங்களிப்பை உள்துறை அமைச்சின் தேசிய தின விருது விழா நவம்பர் 13ஆம் தேதி சிறப்பித்தது.
ஆண்டுதோறும் நடைபெறும் இவ்விருது விழாவில் இவ்வாண்டு உள்துறை, சட்ட அமைச்சர் கா. சண்முகம் சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்டு, நான்கு பிரிவுகளில் விருது பெற்றவர்களின் சேவையைப் பாராட்டினார்.
செயல்திறன் பதக்கத்தைப் பெற்ற 253 பேரில் ஒருவரான சிங்கப்பூர்க் குடிமைத் தற்காப்புப் 3வது படைப் பிரிவின் அதிகாரி கேப்டன் ஷவித்தியா ஷண்முகம், வேலையிடத்தில் செயல்பாட்டுத் தயார்நிலையை மேம்படுத்தியதற்காக விருது பெற்றார்.
சிங்கப்பூர்க் குடிமைத் தற்காப்புப் படையுடனான தமது பயணம் அதிகளவில் தமக்கு மனநிறைவை அளித்துள்ளதாக அவர் கூறினார்.
“நான் சேர்ந்த புதிதில் இப்பணியின் மூலம் சிறந்ததொரு தாக்கத்தை ஏற்படுத்த விரும்பினேன். இந்த விருது, அந்த இலக்கை மறுஉறுதிப்படுத்தி, மேலும் சிறந்து விளங்க எனக்கு ஊக்குவிப்பாக உள்ளது,” என்று பகிர்ந்துகொண்ட கேப்டன் ஷவித்தியா, விருதைத் தமது குழுவினருக்கும் அர்ப்பணித்தார்.
தமது பத்தாண்டுச் சேவையில், முன்னணியில் செயல்படும் ரோட்டா கொமாண்டராக (Rota Commander) செயல்பட்டது, அபாயகரமான பொருள்கள் பிரிவில் பணியாற்றியது, ‘ஆபரேஷன் லயன்ஹார்ட்’ காத்திருப்புக் குழுவின் தயாரிப்பை வழிநடத்தியது, பொங்கோல் தீயணைப்பு நிலையத்தின் மேம்பாட்டுத் திட்டத்தை மேற்பார்வையிட்டது எனப் பல பணிகளில் இவர் ஈடுபட்டுள்ளார்.
“வேலையிடப் பொறுப்புகளை நானே செய்வதற்கும் எனது குழுவினருடன் அவற்றைப் பகிர்ந்து செய்வதற்கும் இடையே சரிசமத்தை ஏற்படுத்துவது அவசியம். திறம்படத் திட்டமிடலுடன் ஒருங்கிணைப்பில் கவனம் செலுத்தும் அதே வேளையில், எனது குழுவின்மேல் நான் முழு நம்பிக்கை வைத்து அவர்களை ஊக்குவிப்பேன்,” என்றார் கேப்டன் ஷவித்தியா.
செயல்திறன் பதக்கத்தைப் பெற்ற மற்றொருவரான உட்லண்ட்ஸ் காவல்துறைப் பிரிவின் மூத்த புலனாய்வு அதிகாரி அஷோக் குமார் வேலாயுதம், பொதுக் குற்றவழக்குகளை விசாரிப்பதில் மேற்கொண்ட அவரது பெரும் முயற்சிகளுக்காக அங்கீகரிக்கப்பட்டார்.
தொடர்புடைய செய்திகள்
அவரது பணியில் பல்வேறு குற்ற வழக்குகளைக் கையாள்வது, பலதரப்பட்ட பங்குதாரர்களுடன் ஒத்துழைப்பது, அனைத்துத் தரப்பினருடனும் யதார்த்தமாகவும் கவனமாகவும் பழகுவது போன்றவை அடங்கும்.
2022ல் மண்டாய் விலங்கியல் தோட்டத்தில் நினைவுப்பொருள் விற்கும் கடையிலிருந்து சுற்றுலா வந்திருந்த தம்பதியர் திருடியதன் தொடர்பான சம்பவத்தை விசாரிப்பதில் அவர் ஈடுபட்டிருந்தார். மேலும், அவர் உதவிச் செயல்பாட்டு அதிகாரியாகப் பணிபுரிந்து கொவிட் கிருமிப்பரவலின்போது அச்சூழ்நிலைக்கேற்ற செயல்பாட்டுத் திட்டத்தை உருவாக்கிய திட்டமிடல் குழுவிலும் பங்காற்றினார்.
“ஒரு புலனாய்வு அதிகாரியாக, ஒவ்வொரு வழக்கையும் தெளிந்த மனநிலையுடன் அணுகுவது அவசியம். நிகழ்வுகளை ஒன்றிணைத்து நீதியை உறுதிப்படுத்தக் கிடைக்கும் ஒவ்வொரு தகவலும் முக்கியமானது,” என்று அவர் கூறினார்.
“நமது பணியானது மக்களின் வாழ்க்கையில் தாக்கத்தை ஏற்படுத்தக்கூடும் என்பதை நான் எப்போதும் புதிய அதிகாரிகளுக்கு நினைவூட்டுவேன். வழிகாட்டுதலின்மூலம், தனிப்பட்ட திறன்களை உருவாக்குவதுடன் ஒட்டுமொத்த அணியின் திறனையும் பலப்படுத்த முடியும் என்று நான் நம்புகிறேன்,” என்று புதிய அதிகாரிகளுக்கு வழிகாட்டியாகவும் செயல்படும் திரு அஷோக் கூறினார்.
செயல்திறன் பதக்கத்தைப் பெற்றது வேலையில் தமது அர்ப்பணிப்பைத் தமக்கு நினைவூட்டுவதாகவும் அதில் மேன்மேலும் சிறந்து செயல்படத் தமக்கு ஊக்கமளிப்பதாகவும் அவர் சொன்னார்.

