அண்மைய மாதங்களில் பல கிளைகளை மூடிய புகழ்பெற்ற ‘ஏபிசி நாசி கன்டார்’ உணவகத்தில் சட்டவிரோத வேலை நியமனம் குறித்து மனிதவள அமைச்சு விசாரணை மேற்கொள்கிறது.
வெளிநாட்டு ஊழியர் வேலை நியமனச் சட்டத்தின்கீழ், அந்த விசாரணை நடத்தப்படுவதாக ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்சின் கேள்விக்குப் பதிலளிக்கையில் அமைச்சின் பேச்சாளர் குறிப்பிட்டார்.
லிட்டில் இந்தியா, லெவண்டர், யூனோஸ் போன்ற வட்டாரங்களில் அமைக்கப்பட்டிருந்த அந்த உணவகத்தின் பத்துக்கும் மேற்பட்ட கிளைகள் இப்போது செயல்படவில்லை என்று ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் அறிகிறது. அவற்றில் சில கடைகள் கைவிடப்பட்டுள்ளன. சிலவற்றில் புதுப்பிப்புப் பணிகளுக்கான அறிவிப்பு காணப்படுகிறது. சில இடங்களில் வேறு வர்த்தக நிறுவனங்கள் செயல்படுகின்றன.
சிராங்கூன் ரோட்டில் சிட்டி ஸ்குவேர் கடைத்தொகுதிக்கு எதிரே அமைந்திருந்த கிளை, தார்ப்பாய் (tarpaulin) கொண்டு தாறுமாறாக மூடப்பட்டுள்ளது. சமையற் பகுதியில் எவ்விதச் சாதனங்களும் காணப்படவில்லை. ‘சாஸ்’ போத்தல்கள் சிதறிக் கிடந்தன.
முஸ்தஃபா சென்டருக்கு அருகே உள்ள டெஸ்கர் ரோடு கிளையில் புதுப்பிப்புப் பணிக்கான அறிவிப்புப் பலகை வைக்கப்பட்டுள்ளது. இந்த ஆண்டின் நான்காம் காலாண்டில் கடை மீண்டும் திறக்கப்படும் என்று அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.
கிட்டத்தட்ட இரண்டு மாதங்களாக அந்தக் கடைகள் மூடிக்கிடப்பதாக அக்கம்பக்கக் கடைகள், ஹோட்டல்களின் ஊழியர்கள் கூறினர்.
டெஸ்கர் ரோடு கிளை அமைந்திருக்கும் கடையை மாதம் $46,000க்கு வாடகைக்கு எடுத்துக்கொள்ளும்படி அதன் உரிமையாளர் கேட்டதாகவும் தாங்கள் அதை நிராகரித்துவிட்டதாகவும் மற்றோர் உணவகத் தொடரின் நிர்வாகத்தினர் கூறினர்.
‘ஏபிசி’ உணவக இயக்குநரின் பதிவுசெய்யப்பட்ட முகவரிக்கு ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் சென்றபோது அங்கு யாரும் இல்லை. தீபாவளிக்குப் பிறகு அங்கு யாரும் வரவில்லை என்று பக்கத்து வீட்டினர் கூறினர்.
தொடர்புடைய செய்திகள்
சட்டவிரோத வேலை நியமனத்தைக் கடுமையாகக் கருதுவதாக மனிதவள அமைச்சு ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்சிடம் கூறியது.
நிறுவனங்கள் உரிய வேலை அனுமதியின்றி வெளிநாட்டு ஊழியரைப் பணியமர்த்திய குற்றம் நிரூபிக்கப்பட்டால் $5,000 முதல் $30,000 வரையிலான அபராதமோ 12 மாதங்கள் வரையிலான சிறைத்தண்டனையோ இரண்டுமோ விதிக்கப்படலாம்.
மீண்டும் மீண்டும் குற்றம் செய்தால் கடுமையான தண்டனையும் கட்டாயச் சிறைத்தண்டனையும் விதிக்கப்படலாம்.
வெளிநாட்டினர் உரிய வேலை அனுமதியின்றிச் சிங்கப்பூரில் வேலை செய்த குற்றம் நிரூபிக்கப்பட்டால் $20,000 வரையிலான அபராதமோ ஈராண்டுகள் வரையிலான சிறைத்தண்டனையோ இரண்டுமோ விதிக்கப்படலாம். அத்தகையோர் சிங்கப்பூரில் வேலை பார்க்கவும் தடை விதிக்கப்படும்.