புவாங்கோக் வட்டாரத்தில் கூட்டுரிமை வீடு (condominium) ஒன்றில் தீ மூண்டது.
அதன் காரணமாக சுமார் 100 பேர் வீடுகளிலிருந்து வெளியேறவேண்டிய நிலை ஏற்பட்டது. இச்சம்பவம் ஞாயிற்றுக்கிழமை (அக்டோபர் 6) நிகழ்ந்தது.
ரிவர்வேல் லிங்கில் உள்ள பார்க் கிரீன் (Park Green) அடுக்குமாடி கூட்டுரிமை வீட்டுக் கட்டடத்தில் தீ மூண்டதாக இரவு 8.35 மணியளவில் தங்களுக்குத் தகவல் கிடைத்ததென சிங்கப்பூர் குடிமைத் தற்காப்புப் படை ஃபேஸ்புக்கில் தெரிவித்தது.
நான்காம் தளத்தில் உள்ள வீடு ஒன்றின் வரவேற்பறையிலும் சமையலறையிலும் தீ எரிந்துகொண்டிருந்ததாக குடிமைத் தற்காப்புப்படை குறிப்பிட்டது.
தீயணைப்பாளர்கள் தண்ணீரைப் பீய்ச்சியடிக்கும் இரண்டு குழாய்களைக் கொண்டு தீயை அணைத்ததாகத் தெரிவிக்கப்பட்டது. சம்பவம் நிகழ்ந்தபோது வீட்டில் யாரும் இல்லை என்றும் யாருக்கும் காயம் ஏற்படவில்லை என்றும் தெரிவிக்கப்பட்டது.
தீ காரணமாக வீட்டின் மற்ற பகுதிகளும் சேதமடைந்தன.
சீன ஊடகமான சாவ்பாவ் பதிவேற்றம் செய்த காணொளியில் தீ மூண்ட வீட்டிலிருந்து கரும்புகை வெளியானது தெரிந்தது. தீக்குப் பின்னால் உள்ள காரணத்தை அறிய சிங்கப்பூர் குடிமைத் தற்காப்புப் படை விசாரணை நடத்தி வருகிறது.