புக்கிட் தீமா விரைவுச்சாலையில் ஒரு காரும் மோட்டார்சைக்கிளும் மோதிக்கொண்ட விபத்தில், இருவர் மருத்துவமனைக்குக் கொண்டுசெல்லப்பட்டனர்.
விபத்து செவ்வாய்க்கிழமை காலை (நவம்பர் 11) நிகழ்ந்தது.
சிங்கப்பூர்க் குடிமைத் தற்காப்புப் படையும் காவல்துறையும் தீவு விரைவுச்சாலையை நோக்கிச் செல்லும் புக்கிட் தீமா விரைவுச்சாலையில் காலை சுமார் 7.30 மணிக்கு விபத்து நேர்ந்ததாய்த் தகவல் கிடைத்ததாகத் தெரிவித்தன.
27 வயது மோட்டார்சைக்கிளோட்டியும் அவரின் பின்னால் அமர்ந்திருந்த 26 வயதுப் பெண்ணும் இங் டெங் ஃபோங் பொது மருத்துவமனைக்குக் கொண்டுசெல்லப்பட்டனர். இருவரும் அப்போது சுயநினைவுடன் இருந்தனர்.
கார் ஓட்டுநரான 55 வயது ஆடவர், புலனாய்வில் உதவிவருவதாகக் காவல்துறை தெரிவித்தது.
சிங்கப்பூருடனான ஜோகூரின் நிலவழிக் குடிநுழைவுச் சோதனைச்சாவடிகளுக்கு அருகில் நேரும் அண்மைச் சம்பவங்களைக் கண்காணித்துவரும் ஃபேஸ்புக் பக்கமொன்றில் விபத்தின் தொடர்பில் ஒரு காணொளி பதிவிடப்பட்டது. அதில் கறுப்பு வாகனம் முதல் தடத்தில் அவசரகால விளக்குகள் ஒளிர்ந்த நிலையில் இருந்ததைக் காணமுடிந்தது.
காருக்கு முன்புறம் மோதிய மோட்டார்சைக்கிள் உட்பட இரண்டு மோட்டார்சைக்கிள்கள் காணப்பட்டன.
ஒருவர் கீழே கிடந்தார். இன்னொருவர் தலைக்கவசத்துடன் தரையில் அமர்ந்திருந்தார்.
தொடர்புடைய செய்திகள்
மேலும், மூவர் சம்பவ இடத்தில் கூடியிருந்தனர்.

