சிங்கப்பூர் நீரிணைக்கு அருகில் ‘ஃபர்ஸ்ட் மார்கோக்ஸ்’ எனும் பெரிய சரக்குக் கப்பலும் ‘லூசிங் யுவான்யு 108’ என்ற சீன மீன்பிடிப் படகும் மோதிக்கொண்டன.
செப்டம்பர் 17ஆம் தேதி நடந்த அச்சம்பவம் தொடர்பில் சமூக ஊடகங்களில் காணொளி ஒன்று வெளியிடப்பட்டுள்ளது.
சிங்கப்பூரிலிருந்து புறப்பட்டு மலாக்கா நீரிணையை நோக்கிச் சென்ற அந்தச் சரக்குக் கப்பல், மீன்பிடிப் படகை நெருங்குவதை அந்தக் காணொளியில் பார்க்கலாம்.
மேலும், படகின் சிப்பந்திகள் எச்சரிப்பதையும் அச்சரக்குக் கப்பலின் முன்பகுதி மீன்பிடிப் படகின் வலப்பக்கத்தின்மீது பலமாக மோதுவதையும் அதில் காண முடிந்தது.
கப்பல் மோதிய வேகத்தில் படகு சாய்ந்து, அதனுள் கடல்நீர் புகுந்ததையும் சிப்பந்திகள் உயிர்தப்ப படகைப் பிடித்துக்கொள்வதையும் அது காட்டியது.
காணொளியின் இறுதியில் சூழல் சற்று சீரடைந்ததாகத் தெரிந்தாலும், சிப்பந்திகளின் அலறல் சத்தம் தொடர்ந்து கேட்டது.
கடல்சார் வரலாற்று ஆய்வாளர் பேராசிரியர் சால்வேடார் ஆர். மெர்கோக்ளியானோ இச்சம்பவம் குறித்து எக்ஸ் தளத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார்.
அதில், சிங்கப்பூர் கடல் பகுதி உலகிலேயே மிகச் சிக்கலான, சுறுசுறுப்பான கடல்வழிப் போக்குவரத்து வட்டாரங்களில் ஒன்று என அவர் தெரிவித்தார்
மேலும், சம்பவத்தின்போது ‘ஃபர்ஸ்ட் மார்கோக்ஸ்’ சரக்குக் கப்பல் அனைத்துலகக் கடல்துறை அமைப்பால் நிர்வகிக்கப்படும் சரியான கடல்வழிப் போக்குவரத்துப் பாதையிலேயே சென்றது என்றார்.
எனினும், வலப்புறத்திலிருந்து ‘கேஸ் ஐரிஸ்’ எனும் மற்றொரு கப்பல் அப்பாதைக்குள் நுழைந்ததால் மோதல் அபாயம் உருவானதாகப் பேராசிரியர் கூறினார்.
“அதே நேரத்தில் சீன மீன்பிடிப் படகும் அப்பாதையில் நுழைந்ததால், அது இரு பெருங்கப்பல்களுக்கு இடையே சிக்கிக்கொண்டது. படகு இடப்பக்கம் சற்றுத் திரும்பியிருந்தால் விபத்தைத் தவிர்த்திருக்கலாம்,” என்றும் அவர் குறிப்பிட்டார்.
இச்சம்பவம் குறித்து மேலதிக விவரங்களைப் பெற சிங்கப்பூர்க் கடல்துறை, துறைமுக ஆணையத்தை ஆசியாஒன் தொடர்புகொண்டுள்ளது.
