ஹவ்காங்கில் சனிக்கிழமை (அக்டோபர் 4) நள்ளிரவுக்குச் சில நிமிடங்கள் கழித்து நடந்த விபத்தை அடுத்து 33 வயது ஆடவர் மருத்துவமனைக்குக் கொண்டுசெல்லப்பட்டார்.
ஹவ்காங் அவென்யூ 8ல் ஹவ்காங் அவென்யூ 7க்கும் ஹவ்காங் ஸ்திரீட் 52க்கும் இடைப்பட்ட சாலைச் சந்திப்பில் நடந்த இவ்விபத்தில் இரு கார்களும் ஒரு லாரியும் சம்பந்தப்பட்டதாகக் கூறப்பட்டது.
இவ்விபத்து குறித்து ஞாயிற்றுக்கிழமை (அக்டோபர் 5) 12.05க்குத் தகவல் கிடைத்ததாகக் காவல்துறையும் சிங்கப்பூர் குடிமைத் தற்காப்புப் படையும் கூறின.
விபத்து தொடர்பான விசாரணையில், கார் ஓட்டுநரான 29 வயது ஆடவர் உதவி வருவதாகக் காவல்துறை தெரிவித்தது.
மற்றொரு காரின் ஓட்டுநரான 33 வயது ஆடவர் சுயநினைவுடன் செங்காங் பொது மருத்துவமனைக்குக் கொண்டுசெல்லப்பட்டதாக அதிகாரிகள் கூறினர்.
காயமடைந்ததாகக் கூறப்பட்ட மற்றொருவர் மருத்துவமனைக்குச் செல்ல மறுத்துவிட்டதாகக் குடிமைத் தற்காப்புப் படை குறிப்பிட்டது.
சமூக ஊடகங்களில் பதிவேற்றப்பட்ட படத்தில் வெள்ளை ‘கெட்கோ’ காரின் முன்புறம் சேதமடைந்திருப்பதைக் காண முடிகிறது.
டிக்டாக் காணொளி ஒன்றில் கறுப்பு காரின் பின்புறம் பலத்த சேதமடைந்திருப்பதையும் அவ்வழியே சென்றவர்கள், ஓர் ஆடவர் காரிலிருந்து இறங்க உதவுவதையும் பார்க்க முடிகிறது. பின்னர் அந்தக் காணொளியில் வெள்ளை ‘கெட்கோ’ காரும் அதன் அருகே ஆடவர் ஒருவர் காவல்துறை அதிகாரியிடம் பேசிக்கொண்டிருப்பதும் தெரிகிறது.
தொடர்புடைய செய்திகள்
கூடுதல் விவரங்களுக்கு ‘கெட்கோ’ நிறுவனத்தை அணுகியிருப்பதாக ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் கூறியது.