‘கம்ஃபர்ட் டெல்குரோ’ (ComfortDelgro) டாக்சிச் சேவை நிறுவனம், தனது ஓட்டுநர் ஒருவர் மீது சட்ட ஒழுங்கு நடவடிக்கை எடுக்கவுள்ளதாக அறிவித்துள்ளது.
ஜூலை 18யின்போது பயணி ஒருவரின் சக்கர நாற்காலியைச் சாலையோர நடைபாதை மீது தூக்கியெறிவது போன்ற சம்பவத்தை அடுத்து அந்த டாக்சி நிறுவனம் இவ்வாறு கூறியுள்ளது.
சம்பவம் குறித்து விசாரணை நடைபெற்று வருவதாகத் தெரிவித்த நிறுவன பேச்சாளர், ஓட்டுநரின் செயல் ஏற்கத்தகாதவை என்றும் நிறுவனத்தின் நல்ல தரத்தைப் பிரதிபலிப்பதில்லை என்றும் கூறினார்.
டாக்சியின் பெண் ஓட்டுநருக்கும் அவரது குடும்பத்தைச் சேர்ந்த பயணிகள் இருவருக்கும் இடையிலான தனிப்பட்ட வாக்குவாதம் இந்தச் சம்பவத்திற்கு வித்திட்டதாக காம்ஃபர்ட் டெல்குரோ மற்றோர் அறிக்கையில் தெரிவித்தது.
கட்டணம் தரும் பயணிகள் இதில் சம்பந்தப்படவில்லை என்று குறிப்பிட்ட பேச்சாளர், உரிய ஒழுங்குமுறை நடவடிக்கை எடுக்கப்படும் எனக் கூறினார்.
எஸ்ஜி ரோடு விஜிலாண்டே ஃபேஸ்புக் குழுவில் பரவிய காணொளி ஒன்றில், பாதசாரிகள் சாலையைக் கடக்கும் நடைபாதையில் நீல நிற டாக்சி ஒன்று நின்றவண்ணம் காணப்பட்டது.
இதனைப் படமெடுத்துக்கொண்டிருந்த கேமரா கொண்டுள்ள கார், டாக்சிக்குப் பின்னால் நின்றபோது டாக்சியிலிருந்து சிவப்பு நிற பை வெளியே வீசப்பட்டதைக் காணொளி காண்பிக்கிறது.
டாக்சியின் பின்னிருக்கையிலிருந்து வெளியேறிய பயணி, கீழே குனிந்து, முன்னிருக்கையிலிருந்து வெளியேறும் மூதாட்டி ஒருவருக்கு அந்தச் சிவப்புப் பையைத் தந்துகொண்டிருந்தார். அந்நேரத்தில் சக்கர நாற்காலியை டாக்சியின் பின்பக்கத்திலிருந்து அகற்றி சாலையோரத்தில் தூக்கி எறிந்தது, காணொளியில் பதிவானது.