இவ்வாண்டுக்கான சிங்கப்பூரின் பொருளியல் வளர்ச்சி மேம்படக்கூடும் என்று ஆசிய வளர்ச்சி வங்கி (ADB) கணித்துள்ளது.
மின்சாரப் பொருள்கள், நிதிச் சேவைகள் ஆகியவற்றுக்கான தேவை அதிகரித்து வருவதைத் தொடர்ந்து ஆசிய வளர்ச்சி வங்கி இவ்வாறு கணித்துள்ளது.
பிலிப்பீன்ஸ் தலைநகர் மணிலாவில் இயங்கும் அந்த வங்கி, இவ்வாண்டுக்கான சிங்கப்பூரின் மொத்த உள்நாட்டு உற்பத்தி 2.6 விழுக்காடு வளர்ச்சியடையும் என்று கணித்துள்ளது. அந்த விகிதம் 2.4 விழுக்காடாக இருக்கும் என்று ஆசிய வளர்ச்சி வங்கி கடந்த ஏப்ரல் மாதம் கணித்திருந்தது.
சிங்கப்பூரின் மொத்த உள்நாட்டு உற்பத்தி இரண்டிலிருந்து மூன்று விழுக்காடு வளர்ச்சியடையும் என்று வர்த்தக, தொழில் அமைச்சு அண்மையில் கணித்திருந்தது. அதற்கு சுமார் ஒரு மாதத்துக்குப் பிறகு ஆசிய வளர்ச்சி வங்கியின் முன்னுரைப்பு இடம்பெற்றுள்ளது.
அந்த விகிதம் ஒன்றிலிருந்து மூன்று விழுக்காட்டுக்குள் பதிவாகும் என்று வர்த்தக, தொழில் அமைச்சு முன்னதாகக் கணித்திருந்தது.
கடந்த ஆகஸ்ட் மாதம், சிங்கப்பூரின் எண்ணெய் சாரா ஏற்றுமதி ஆண்டு அடிப்படையில் 10.7 விழுக்காடு கூடின. மின்சாரப் பொருள்களின் ஏற்றுமதி 35.1 விழுக்காடு கூடியது அதற்கு முக்கியக் காரணம்.
“தொழில்நுட்ப ஏற்றுமதிகளை சார்ந்திருக்கும் அதிக வருமானம் பதிவாகும் ஆசிய நாடுகளின் வளர்ச்சியில் ஏற்றுமதி முக்கியப் பங்கு வகிக்கும்,” என்று தனது ஆக அண்மைய ஆசிய வளர்ச்சிப் போக்கு அறிக்கையில் ஆசிய வளர்ச்சி வங்கி குறிப்பிட்டது.
இவ்வாண்டு முற்பாதியில் உலகளவில் மின்சாரப் பொருள்களுக்கான தேவை தொடர்வது, ஹாங்காங், தென்கொரியா, சிங்கப்பூர், தைவான் ஆகிய பகுதிகளில் வளர்ச்சிக்கு உறுதுணையாக இருந்ததாகவும் அந்தப் போக்கு தொடரும் என்று தாங்கள் எதிர்பார்ப்பதாகவும் அவ்வங்கி தெரிவித்தது.
கடந்த ஜூலை மாதம், உலகளவில் இடம்பெற்ற சில்லு விற்பனையின் மதிப்பு 51.3 பில்லியன் டாலராகப் (66.1 பில்லியன் வெள்ளி) பதிவானதென அனைத்துலகப் பகுதி மின்கடத்தித் துறைச் சங்கம் செப்டம்பர் மூன்றாம் தேதியன்று தெரிவித்தது. ஆண்டு அடிப்படையில், சில்லு விற்பனை மதிப்பு 18.7 விழுக்காடு கூடியதாக அது குறிப்பிட்டது.
அதோடு, கடந்த ஜூன் மாதம் பதிவான சில்லு விற்பனை மதிப்பைவிட ஜூலை மாதம் 2.7 விழுக்காடு அதிகம் பதிவானதாகவும் சங்கம் கூறியது. 2023ஆம் ஆண்டில் சிங்கப்பூர், உலகின் மூன்றாவது ஆகப் பெரிய சில்லு விநியோகிப்பாளராக விளங்கியது.