மேலும் இருவர்க்குத் தட்டம்மைத் தொற்று

மேலும் இருவர்க்குத் தட்டம்மைத் தொற்று

2 mins read
இவ்வாண்டில் இதுவரை 13 பேர் பாதிப்பு
8778f2b0-243f-4e0a-89f6-778522f41bf1
தடுப்பூசி போட்டுக்கொள்வது தட்டம்மைக்கு எதிராக நீண்டகாலப் பாதுகாப்பை வழங்கும். - படம்: ராய்ட்டர்ஸ்

சிங்கப்பூரில் மேலும் இருவர் தட்டம்மையால் பாதிக்கப்பட்டிருப்பது கண்டறியப்பட்டுள்ளது.

இதன்மூலம் சிங்கப்பூரில் இவ்வாண்டு தட்டம்மை தொற்றியோர் எண்ணிக்கை 13ஆக அதிகரித்துள்ளது.

இவ்வாண்டு தொடங்கி இன்னும் இரு மாதங்கள்கூட முடியாத நிலையில், கடந்த ஆறு ஆண்டுகளில் இதுவே இரண்டாவது ஆக அதிக பாதிப்பு என்பது குறிப்பிடத்தக்கது.

பிப்ரவரி 1 முதல் 7 வரையிலான வாரத்தில் புதிய இரு தட்டம்மை பாதிப்புகளும் கண்டறியப்பட்டன. அதற்கு முந்திய வாரத்தில் அந்த எண்ணிக்கை ஐந்தாக இருந்தது.

தொற்றுநோய்த் தடுப்பு நிலையம் (CDA) வியாழக்கிழமை (பிப்ரவரி 12) வெளியிட்ட வாராந்தர தொற்றுநோய் அறிக்கையில் இந்த விவரங்கள் இடம்பெற்றுள்ளன.

2024ஆம் ஆண்டில் மொத்தம் 11 பேரைத் தட்டம்மை தொற்றியது. 2025ல் 27 பேரும் 2019ல் 152 பேரும் அந்நோயால் பாதிக்கப்பட்டனர்.

சிங்கப்பூரில் தட்டம்மைத் தொற்று அதிகரித்ததை அடுத்து, பிப்ரவரி 6ஆம் தேதியிலிருந்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் முடுக்கிவிடப்பட்டுள்ளன.

தட்டம்மைத் தொற்றியோர் கட்டாயமாகத் தங்களைத் தனிமைப்படுத்திக்கொள்ள வேண்டும். பாதிக்கப்பட்ட அனைத்து சம்பவங்களின் தொடர்புகளின் தடமறிவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும். பாதிக்கப்பட்டோருடன் நெருங்கிய தொடர்பில் இருந்தோர் தடுப்பூசி போட்டுக்கொள்ள வேண்டும் அல்லது 21 நாள்கள்வரை தங்களைத் தனிமைப்படுத்திக்கொள்ள வேண்டும்.

இவ்வாண்டு ஜனவரியில் மட்டும் 11 பேரைத் தட்டம்மை தொற்றியது. தட்டம்மைக் கிருமி காற்று வழியாகவும், மூக்கு, தொண்டைச் சுரப்புகள் உடலில் நேரடியாகப் படும்போதும் பரவுகிறது.

காய்ச்சல், இருமல், மூக்கு ஒழுகுதல், தொண்டை எரிச்சல், தடிப்புகள் உள்ளிட்டவை தட்டம்மைத் தொற்றுக்கான அறிகுறிகள்.

அதற்குக் குறிப்பிட்ட சிகிச்சை இல்லை. அதனால் பாதிக்கப்பட்டோர் பெரும்பாலும் இரண்டு, மூன்று வாரங்களுக்குள் குணமடைந்துவிடுவர். ஆயினும், மூளை அழற்சி போன்ற சிக்கல்களை, குறிப்பாக ஐந்து வயதிற்குட்பட்ட குழந்தைகளிடம் அது ஏற்படுத்திவிடும்.

பாலர் பள்ளி, குழந்தைப் பராமரிப்பு நிலையங்களில் பாதிப்பில்லை

இதனிடையே, குழந்தைப் பராமரிப்பு நிலையம் ஒன்றில் தட்டம்மை பாதிப்பு கண்டறியப்பட்டதாக வெளியான செய்தியைத் தொற்றுநோய்த் தடுப்பு நிலையம் மறுத்துள்ளது.

வியாழக்கிழமை நண்பகல் 12 மணி நிலவரப்படி, சிங்கப்பூரில் குழந்தைப் பராமரிப்பு நிலையங்களிலோ பாலர் பள்ளிகளிலோ தட்டம்மைத் தொற்று கண்டறியப்படவில்லை என்று வெள்ளிக்கிழமை ஓர் அறிக்கை வழியாக அவ்வமைப்பு தெளிவுபடுத்தியது.

குறிப்புச் சொற்கள்