‘ஏஐ’யைப் பின்பற்ற அதிகம் செலவிடத் தேவையில்லை: ஜோசஃபின் டியோ

2 mins read
237247fd-d052-4d2b-b8c9-b6be9d18bcdd
புளூம்பெர்க் புதிய பொருளியல் மாநாட்டின் ‘பிளெனரி’ கூட்டத்தில் பேசிய (இடமிருந்து) ‘கூகல் டீப்மைண்ட்’ தலைமைச் செயலதிகாரி லிலா இப்ராகிம், அமைச்சர் ஜோசஃபின் டியோ, புளூம்பெர்க் ஆசிரியர் ஹஸ்லிண்டா அமின். - படம்: எஸ்பிஎச் மீடியா

செயற்கை நுண்ணறிவு (ஏஐ) அம்சங்களைப் பின்பற்ற அதிகம் செலவாகலாம் என்ற கவலை சிறிய நிறுவனங்களுக்கு இடையே இருந்து வருகிறது.

எல்லா சூழல்களுக்கும் அது பொருந்தாது என்று தகவல், மின்னிலக்க மேம்பாட்டு அமைச்சர் ஜோசஃபின் டியோ கூறியுள்ளார். எல்லா வேளைகளிலும் விலை உயர்ந்த செயல்பாட்டுச் சில்லுகள் தேவைப்படாது என்றும் நிறுவனங்களுக்குப் பலவகைகளில் ஆதரவு வழங்கப்படுகிறது என்றும் அவர் குறிப்பிட்டார்.

புளூம்பெர்க் புதிய பொருளியல் மாநாடு எனும் நிகழ்ச்சியில் இடம்பெற்ற ‘பிளெனரி’ கூட்டத்தில் திருமதி டியோ பேசினார். இந்த மாநாடு கப்பெல்லா சிங்கப்பூர் ஹோட்டலில் புதன்கிழமை (நவம்பர் 19) நடைபெற்றது.

உலகளவில் செயற்கை நுண்ணறிவு ஆற்றலைக் கொண்ட தரப்பினர், அது இல்லாத தரப்பினர் ஆகியவற்றுக்கு இடையே தலைதூக்கும் வேறுபாடு குறித்து இந்த மாநாட்டில் பேசப்பட்டது.

குடியிருப்புப் பகுதியில் உள்ள உணவகம் ஒன்று அதன் அனுகூலங்களை வழங்க எவ்வாறு செயற்கை நுண்ணறிவு ஆதரவுச் செயலியைப் பயன்படுத்தியது என்பதை விவரித்த திருமதி டியோ, “எல்லா சிறிய, நடுத்தர நிறுவனங்களும் தங்களுக்கென தனிப்பட்ட ஜிபியு (GPU) தளங்களை வைத்திருக்கத் தேவையில்லை. இந்த உதாரணத்தில், உணவகம் ஒரு செயலியால் பலனடைந்தது,” எனக் குறிப்பிட்டார். ஜிபியுக்கள், அதிநவீன செயற்கை நுண்ணறிவு வழிமுறைகளுக்குத் தேவையான தனிப்பட்ட கணினி ஆற்றலை வழங்கும் விலை உயர்ந்த செயல்பாட்டுச் சில்லுகளாகும்.

செயற்கை நுண்ணறிவு அம்சங்களைப் பின்பற்ற ஆகும் செலவை சிறிய, நடுத்தர நிறுவனங்களுக்குக் கையாள உதவ சிங்கப்பூர் பல்வேறு வழிகளைத் தன்வசம் வைத்திருப்பதாக திருமதி டியோ தெரிவித்தார்.

“சில வகை உதவி, பல்வேறு தளங்களின் வாயிலாக வழங்கப்படும் அம்சங்களின்வழி கிடைக்கும். வேறு சில, குறிப்பிட்ட துறைகளை மையமாகக் கொண்டு வழங்கப்படுகின்றன,” என்று திருமதி டியோ விளக்கினார். துல்லிய உற்பத்தியாளர் துறைக்கென உருவாக்கப்பட்ட செயற்கை நுண்ணறிவு அம்சத்தை அவர் எடுத்துக்காட்டாக முன்வைத்தார்.

மேலும் பல தரப்பினரைச் சென்றடையச் செய்யும் நோக்கில், செயற்கை நுண்ணறிவு அம்சங்களை ஏற்கெனவே நடப்பில் இருக்கும் திட்டங்களில் சேர்க்கும் முயற்சியில் தனது நிறுவனத்தின் ஆய்வுப் பிரிவு, தங்கள் ஊழியர்களுடன் இணைந்து செயல்பட்டு வருவதாக கூகல் டீப்மைன்ட் தலைமைச் செயல்பாட்டு அதிகாரி லிலா இப்ராகிம் தெரிவித்தார்.

செயற்கை நுண்ணறிவைப் பொறுத்தவரை உலகளவில் நாடுகளுக்கிடையே வேறுபாடு இருப்பது ‘பிளெனரி’ கூட்டத்தில் அலசப்பட்டது. அதுகுறித்துப் பேசிய திருமதி டியோ, உள்கட்டமைப்புக்காக செலவு செய்து செயற்கை நுண்ணறிவை மையமாகக் கொண்ட எதிர்காலத்துக்கு மேலும் தயாராய் இருக்க வகைசெய்யும் மறுசீரமைப்புப் பணிகளை மேற்கொள்ளும் நிறுவனங்கள் நாடுகளில் இருக்கிப்பதைச் சுட்டினார்.

குறிப்புச் சொற்கள்