விரைவாக மூப்படைந்து வரும் சமூகத்தில் கவனம் செலுத்தும் வகையில், தேசிய தினப் பேரணி உரையின்போது அறிவிக்கப்பட்ட ‘நலமாக மூப்படைவதற்கான அக்கம்பக்கம்’ திட்டம் நடைமுறையில் உள்ள நான்கு திட்டங்களுடன் ஒருங்கிணைக்கப்பட்டு செயலாக்கம் காணவுள்ளதாக சுகாதார அமைச்சரும் மூப்படைதல் விவகாரங்களுக்குப் பொறுப்பு வகிக்கும் அமைச்சருமான ஓங் யி காங் கூறியுள்ளார்.
ஞாயிற்றுக்கிழமை (ஆகஸ்ட் 24) அன்று இதனைத் தெரிவித்த திரு ஓங், இதனால் மூத்தோர் துடிப்புமிகுந்த அக்கம்பக்கங்களில் மூப்படையலாம் என்றும் சொன்னார்.
முதற்கட்டமாக, தோ பாயோ உள்ளிட்ட இதரப் பழைய நகர்ப்புறங்களில் இத்திட்டம் களம்காணும் என்று குறிப்பிட்ட அமைச்சர், அவற்றின்மூலம் இந்தக் குடியிருப்புப் பேட்டைகளிலிருந்து கற்றுக்கொண்டு, தீவெங்கிலும் ‘நலமாக மூப்படைவதற்கான அக்கம்பக்கம்’ திட்டம் விரிவாக நடைமுறைக்கு வரும் என்று கூறினார்.
அண்மையில் நடைபெற்ற தேசிய தினப் பேரணி உரையின்போது அறிவிக்கப்பட்ட இத்திட்டம் மூத்தோருக்கான நடவடிக்கைகளை வழங்கும் துடிப்புடன் நலமடைதல் நிலையங்களுடன் இசைந்து திகழ்வதுடன் மூத்தோருக்கு உகந்த கட்டமைப்புகள் மற்றும் சுகாதார சேவைகளைச் சமூகத்திலும் இல்லங்களிலும் வடிவமைப்பதற்கும் வித்திடும் என்றும் திரு ஓங் விளக்கினார்.
சமுதாயக் கொள்கைகளுக்கான ஒருங்கிணைப்பு அமைச்சருமான திரு ஓங், பராமரிப்பை மருத்துவமனைகளிலிருந்து சமூகத்திற்கும் குடியிருப்பு இல்லங்களுக்கும் மாற்றுவதற்கான சிங்கப்பூரின் சுகாதார சேவை அமைப்பின் அடுத்த இலக்கு ‘நலமாக மூப்படைவதற்கான அக்கம்பக்கம்’ திட்டம் என்றும் குறிப்பிட்டார்.
பல ஆண்டுகாலத் திட்டமான இது, மூத்தோருக்கான இல்லங்கள் தொடர்பிலான அதிகரித்த சேவைகளைச் சமாளித்து, நண்பர்கள் சூழ மூத்தோர் அக்கம்பக்கத்தில் மூப்படைவதற்கான நீண்டகால தீர்வாக இருக்கும் என்றும் நம்பிக்கை தெரிவித்தார்.
இதற்கிடையே மேற்கூறிய இத்திட்டம் அதிகளவிலான மூத்தோரைக் கொண்டிருக்கும் பழம்பெரும் குடியிருப்புப் பேட்டையாக இருக்கும் தோ பாயோவில் செயலாக்கம் காணவுள்ளது குறித்து தேசிய வளர்ச்சி அமைச்சர் சீ ஹொங் டாட் மகிழ்ச்சி தெரிவித்துள்ளார்.
எதிர்வரும் மூத்தோருக்கான மேப்பாட்டுத் திட்டங்களில் மருத்துவத் தோட்டங்கள், முதுமை மறதிநோய் உள்ள மூத்தோருக்கான அம்சங்கள் உள்ளிட்ட சிறப்பம்சங்களை மக்கள் எதிர்ப்பார்க்கலாம் என்று குறிப்பிட்ட அமைச்சர், ஒருங்கிணைந்த தோ பாயோ மேம்பாடு திட்டம் 2030ல் நிறைவடையும்போது, தோ பாயோ எம்ஆர்டி நிலையத்திலிருந்து பேருந்து நிலையம் மற்றும் மறுசீரமைப்பு கண்ட பலதுறை மருந்தகம் உள்ளிட்டவற்றிற்கு நிழற்குடை பாதையிலேயே நடந்து செல்ல முடியும் என்றும் விளக்கினார்.
தொடர்புடைய செய்திகள்
இந்த ஆண்டு அக்டோபரில் கிட்டத்தட்ட 200 சமூக பராமரிப்பு அடுக்குமாடி வீடுகள் (சிசிஏ) செங்காங்கில் நிறுவப்படும் என்ற குறிப்பிட்ட திரு சீ, இதுபோல மூத்தோருக்கு ஏதுவான ஏறத்தாழ 200 ‘சிசிஏ’க்கள் அடுத்த ஆண்டு தோ பாயோவில் அமைக்கப்படவுள்ளதாகவும் தெரிவித்தார்.

