மருத்துவமனையிலிருந்து வீடு திரும்பி குணமடைந்துவரும் ஒரு நோயாளியின் ரத்த அழுத்தம் திடீரென அதிகரிப்பதையோ இதயத் துடிப்பில் ஏற்படும் அசாதாரண மாற்றங்களையோ, செயற்கை நுண்ணறிவு (ஏஐ) மூலம் இயங்கும் அணியக்கூடிய மருத்துவக் கருவிகள் கண்டறிந்து அவற்றின் தீவிரத்தை மதிப்பீடு செய்யலாம்.
அந்த அளவீடுகள் அவசர நிலையைக் குறித்தால், நோயாளிகளுக்கு உதவ, அவர்களைத் தொலைதூரத்திலிருந்து கவனிக்கும் மருத்துவமனை ஊழியர்களுக்கும் அவசரக்கால உதவிப் பிரிவுகளுக்கும் உடனுக்குடன் தகவல்கள் அனுப்பப்படலாம்.
மருத்துவமனை வார்டுகளுக்கு சுவர்கள் இல்லாமலும், படுக்கைகள் நோயாளிகளின் சொந்த வீடுகளிலேயே அமையும் வகையிலும் இருக்கும் அத்தகைய எதிர்காலத் திட்டங்கள், நவம்பர் 3ஆம் தேதி தேசியப் பல்கலைக்கழகச் சுகாதார அமைப்பு (என்யுஎச்எஸ்), சிங்டெல் தொலைத்தொடர்பு நிறுவனம், எரிக்சன் தொலைத்தொடர்புக் கருவித் தயாரிப்பு நிறுவனம் ஆகியவற்றுக்கு இடையே கையெழுத்தான புரிந்துணர்வு ஒப்பந்தத்தின் மூலம் மேலும் ஒரு படி மேம்பாடு கண்டுள்ளன.
‘என்யுஎச்எஸ்’, சிங்டெல், எரிக்சன் ஆகியவை இணைந்து புதிய ஆய்வு நிலையம் ஒன்றைத் தொடங்கியுள்ளன. அதன் மூலம், ‘5ஜி-அட்வான்ஸ்டு’ (5G-Advanced) எனப்படும் மேம்படுத்தப்பட்ட 5ஜி கட்டமைப்பையும் எதிர்கால 6ஜி தொலைத்தொடர்புக் கட்டமைப்பையும் பயன்படுத்தி மருத்துவமனை சுகாதாரப் பராமரிப்புச் சேவைகளை மேம்படுத்துவதற்கான ஆராய்ச்சியை அவை முன்னெடுத்து வருகின்றன.
“மருத்துவ, தொழிற்துறை நிபுணத்துவத்தை ஒன்றிணைப்பதன் மூலம், எதிர்காலத் தலைமுறைத் தொலைத்தொடர்புத் தொழில்நுட்பத்தை நடைமுறைச் சுகாதாரப் பராமரிப்புப் பயன்பாடுகளாக மாற்றியமைப்போம் என்று நம்புகிறோம்,” என ‘என்யுஎச்எஸ்’ தலைமை நிர்வாகி பேராசிரியர் யோ கே குவான் தெரிவித்தார்.
தளவாடச் சேவைக்கும் நோயாளிப் பராமரிப்புக்கும் மருத்துவமனைக்கு உதவும் தானியக்க நடமாடும் இயந்திர மனிதக் கருவிகள், அறுவை சிகிச்சைகளின்போது மருத்துவர்களுக்கும், நோயாளிகளை வீட்டிலேயே கவனிப்பதற்கும் உதவும் இணைய இணைப்பு கொண்ட சாதனங்கள் அந்தச் சுகாதாரப் பராமரிப்புப் பயன்பாடுகளில் அடங்கும் என்றும் பேராசிரியர் யோ குறிப்பிட்டார்.
தேசியப் பல்கலைக்கழக மருத்துவமனை, இங் டெங் ஃபோங் பொது மருத்துவமனை, அலெக்ஸாண்ட்ரா மருத்துவமனை உள்ளிட்ட மருத்துவமனைகளை ‘என்யுஎச்எஸ்’ நிர்வகித்து வருகிறது.
