சிறுவயது மாணவர்களுக்கு ‘ஏஐ’ கற்றல் அம்சங்கள் இப்போதைக்கு இல்லை: அமைச்சர்

சிறுவயது மாணவர்களுக்கு ‘ஏஐ’ கற்றல் அம்சங்கள் இப்போதைக்கு இல்லை: அமைச்சர்

1 mins read
741caa23-86eb-4ec5-964e-6c7d794f3577
கற்றலில் செயற்கை நுண்ணறிவு ஏற்படுத்தும் தாக்கத்தைக் கல்வி அமைச்சு ஆராய்ந்து வருகிறது. - கோப்புப் படம்: ராய்ட்டர்ஸ்

செயற்கை நுண்ணறிவை (ஏஐ) அளவுக்கு அதிகமாகச் சார்ந்திருக்கும் நிலை ஏற்படக்கூடும் என்ற அச்சம் தொடரும் வேளையில், மாணவர்களின் கற்றலில் ஏஐ அம்சங்கள் ஏற்படுத்தக்கூடிய தாக்கத்தைக் கல்வி அமைச்சு ஆராய்ந்து வருகிறது.

கல்வி அமைச்சர் டெஸ்மண்ட் லீ புதன்கிழமை (பிப்ரவரி 25) இதனைத் தெரிவித்தார். செயற்கை நுண்ணறிவுப் பயன்பாட்டுக்கும் மாணவர்களின் அறிவாற்றலுக்கும் தொடர்புள்ளதா என்று பீ‌ஷான்- தோ பாயோ குழுத்தொகுதி நாடாளுமன்ற உறுப்பினர் சாய் யின்சாவ் கேட்ட கேள்விக்கு திரு லீ நாடாளுமன்றக் கேள்விக்கு எழுத்துபூர்வ பதிலளித்தார்.

இந்த விவகாரத்தில் சிங்கப்பூருக்கென தனிப்பட்ட புள்ளிவிவரங்கள் கல்வி அமைச்சிடம் இல்லை என்று திரு லீ தெரிவித்தார். அதேவேளை, கற்றலில் செயற்கை நுண்ணறிவின் தாக்கத்தை அமைச்சு ஆராய்ந்து வருவதாகவும் அவர் குறிப்பிட்டார்.

“மாணவர்கள் முறையின்றி அல்லது சரியான திட்டமிடலின்றிச் செயற்கை நுண்ணறிவைப் பயன்படுத்தினால் அதை அளவுக்கதிகமாகச் சார்ந்திருக்கும் நிலை ஏற்படக்கூடும் என்று அனைத்துலக ஆய்வுகள் காட்டுகின்றன. அதனால், மாணவர்கள் எளிய அம்சங்களைக்கூடப் புரிந்துகொள்வதிலும் அவற்றை நினைவுகூர்வதிலும் பாதிப்பு ஏற்படக்கூடும்,” என்று திரு லீ விவரித்தார்.

மாணவர்களின் அறிவு, திறன் வளர்ச்சியின் தொடக்கக் காலத்தில் ஆசிரியர்கள் செயற்கை நுண்ணறிவுப் பயன்பாட்டைத் தவிர்க்கவேண்டும் என்று அவர் கேட்டுக்கொண்டார். அப்போதுதான் கற்றலுக்கு மெருகூட்ட செயற்கை நுண்ணறிவு அம்சங்கள் சேர்க்கப்படுவதற்கு முன்பு மாணவர்களிடையே வலுவான அடிப்படைத் திறன்கள் விதைக்கப்படும் என்று திரு லீ குறிப்பிட்டார்.

எடுத்துக்காட்டாக, தொடக்கநிலை ஒன்றிலிருந்து மூன்று வரையிலான மாணவர்களுக்கு இது பொருந்தும்.

குறிப்புச் சொற்கள்