தனிப்பட்ட ‘ஏஐ’ மென்பொருள் செயலிகளுக்குக் கடுமையான கட்டுப்பாடுகளை வைக்குமாறு அதிகாரிகள் வலியுறுத்தல்

தனிப்பட்ட ‘ஏஐ’ மென்பொருள் செயலிகளுக்குக் கடுமையான கட்டுப்பாடுகளை வைக்குமாறு அதிகாரிகள் வலியுறுத்தல்

படம்: ராய்ட்டர்ஸ்

06 Nov 2026 - 2:22 pm

2 mins read

தனிப்பட்ட செயற்கை நுண்ணறிவு (ஏஐ) மென்பொருள் செயலிகளைக் கையாளும்போது, தேவையான செயலிகளை மட்டுமே இணைக்கவும்; முக்கியமான கணக்குகளுக்கான அனுமதிக்குக் கட்டுப்பாடு விதிக்கவும்; எந்தவொரு கோப்பையையும் நீக்குவதற்கு அல்லது பகிர்வதற்கு முன்பாக அனுமதி பெறுவதைக் கட்டாயமாக்கவும்.

தனிப்பட்ட ஏஐ மென்பொருள் செயலிகளைப் பாதுகாப்பாகப் பயன்படுத்துவதற்கு உதவ, சிங்கப்பூர் இணையப் பாதுகாப்பு அமைப்பு, அரசாங்கத் தொழில்நுட்ப அமைப்பு (கவ்டெக்), தகவல் தொடர்பு ஊடக மேம்பாட்டு ஆணையம் ஆகியவை வெள்ளிக்கிழமை (நவம்பர் 6) வெளியிட்ட அறிக்கையில் இடம்பெற்றுள்ள முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளில் மேற்கூறியவை அடங்கும்.

பெரும்பாலும் கேள்விகளுக்குப் பதிலளிக்கும் பேசுசெயலிகளைப் போல அல்லாமல், தனிப்பட்ட ஏஐ மென்பொருள் செயலிகளால் பயனர்களின் சார்பில் இணையத்தளங்களை உலாவுதல், மின்னஞ்சல்களை நிர்வகித்தல், முன்பதிவுகளைச் செய்தல் போன்ற நடவடிக்கைகளை மேற்கொள்ள முடியும்.

பயனீட்டாளர்களுக்காக உருவாக்கப்பட்ட உலகின் முதல் தனிப்பட்ட ஏஐ மென்பொருள் என மெட்டா நிறுவனத்தால் குறிப்பிடப்படும் ‘மெட்டாஸ் மியூஸ்’ (Meta’s Muse) சிங்கப்பூரில் அறிமுகப்படுத்தப்பட்டதைத் தொடர்ந்து, அந்த ஆலோசனை அறிக்கை வெளிவந்துள்ளது.

இது பயனர்கள் மின்னஞ்சல்களையும் அட்டவணைகளையும் நிர்வகிக்க உதவும் வகையில் ‘ஜிமெயில்’, ‘கூகல் கேலெண்டர்’ போன்ற சேவைகளுடன் இணைவதுடன், பொருள்கள் வாங்கும் தளங்களுடனும் பயணத் தளங்களுடனும் இணைந்து செயல்படக்கூடியது.

ஆனால், இத்தகைய வசதிகள் தனியுரிமை, பாதுகாப்பு அபாயங்களை ஏற்படுத்துகின்றன. ஏஐ மென்பொருள் செயலிகளுக்கு வழங்கப்படும் அனுமதிகளைப் பொறுத்து, அவை முக்கியமான தகவல்களை வெளிப்படுத்தலாம், தவறுகளைச் செய்யலாம் அல்லது பயனர்களின் நோக்கத்திற்கு அப்பால் செயல்படலாம் என்று அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அவற்றில் சில பின்னணியில் தொடர்ந்து செயல்படக்கூடும்; அதே நேரம் தீங்கிழைக்கும் இணையத்தளங்களோ செய்திகளோ இந்த ஏஐ மென்பொருள் செயலிகளை ஏமாற்றித் தீங்கு விளைவிக்கும் செயல்களைச் செய்ய வைக்கக்கூடும்.

“ஏஐ மென்பொருள் செயலிகள் மிகவும் பயனுள்ளதாக இருக்கக்கூடும். ஆனால், அவற்றை மனித உதவியாளர்களைப்போலக் கருதி, உங்கள் தகவல்களுக்கான அனுமதியையோ முழுமையான நம்பிக்கையையோ வழங்கிவிடமுடியாது,” என்று அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டது.

குறிப்புச் சொற்கள்
ஏஐஆலோசனைசிங்கப்பூர்