சிங்கப்பூரின் மத்திய வட்டாரத்தின் காற்றுத் தரம் ஆரோக்கியமற்ற அளவை எட்டியுள்ளதாக 24 மணி நேரக் காற்றுத் தூய்மைக்கேட்டுக் குறியீடு (பிஎஸ்ஐ) சனிக்கிழமை (செப்டம்பர் 26) இரவு 8 மணிக்கு கணித்துள்ளது.
கணிக்கப்பட்ட நேரத்தில் 104 என இருந்த எண்ணிக்கை இரவு 9 மணியளவில் 108 என ஆனது. ஆகக் கடைசியாக இரவு 10 மணி பதிவின்படி குறியீடு மத்தியப் பகுதியில் 124 எனக் காட்டியது.
சிங்கப்பூரின் மற்ற வட்டாரங்களில் காற்றின் தரம் மிதமான அளவில் இருப்பதாக பதிவுசெய்யப்பட்டுள்ளது.
மிதமான அளவு, ஆரோக்கியமற்ற அளவு என கடந்த வாரங்களில் நிலைமாறியபடி காற்றுத் தரக்குறியீட்டின் பதிவுகள் தொடர்ந்து பதிவு செய்யப்படுகின்றன.
கடைசியாக கடந்த செப்டம்பர் 20ஆம் தேதி மாலை நேரத்தில் மத்திய வட்டாரத்தில் காற்றுத் தரம் ஆரோக்கியமற்ற அளவில் பதிவு செய்யப்பட்டது.
தேசிய சுற்றுப்புற வாரியம் (என்இஏ) வெளியிட்ட அன்றாட ஆலோசனை அறிக்கையில் 24 மணிநேர காற்றுத் தரக் குறியீடு மிதமானது முதல் ஆரோக்கியமற்ற அளவில் உள்ளதைக் குறிப்பிட்டது.
காற்றுத் தரம் மிதமாக இருந்தால் ஆரோக்கியமானோர், முதியோர், கர்ப்பிணிப் பெண்கள், குழந்தைகள், இதய, நுரையீரல் நோய்கள் உள்ளோர் உட்பட்ட அனைவரும் வழக்கமான நடவடிக்கைகளில் ஈடுபடலாம் என்று என்இஏ தெரிவித்தது.
ஆரோக்கியமாக இருப்பவர்கள் காற்றுத்தரம் குறையும்போது வெளிப்புற நடவடிக்கைகளைக் குறைத்துக்கொள்ளும்படி அறிவுரை வழங்கியது என்இஏ. அந்த நேரத்தில் முதியோர், கர்ப்பிணிகள், குழந்தைகள், நாள்பட்ட நோய்கள் உள்ளோர் வெளிப்புறச் செயல்பாடுகளை அறவே நிறுத்திக்கொள்வது கட்டாயம் எனவும் வாரியம் எச்சரித்துள்ளது.
சிங்கப்பூரிலும் வட்டாரப் பகுதிகளிலும் சனிக்கிழமை இரவும் ஞாயிற்றுக்கிழமையும் மிதமான மழை பெய்யும் வாய்ப்பு இருப்பதாக வாரியம் தெரிவித்தது. தென் சுமத்ராவிலும் கலிமந்தானின் தெற்கு, கிழக்குப் பகுதிகளில் நிலவும் வறண்ட நிலை தொடரும் என்பதையும் அது தெளிவுபடுத்தியது.
எனவே, தென்கிழக்கில் இருந்தும் தென்மேற்கில் இருந்தும் தற்போதுள்ள சூழ்நிலையில் காற்று தொடர்ந்து சிங்கப்பூரை நோக்கி வீசும் என்று எதிர்பார்க்கப்படுவதால் புகைமூட்டம் பாதிக்கும் அபாயம் உள்ளதென்றும் வாரியம் எச்சரித்தது.
