நகரிலிருந்து சாங்கி விமான நிலையத்திற்குச் சேவை வழங்கும் பேருந்துச் சேவை எண் 36ல் முன்னோட்ட நடவடிக்கையாக பயணப்பெட்டிகள் வைக்க புதிய வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது.
மூன்று மாதச் சோதனை முயற்சியாக இந்தத் திட்டம் இடம்பெறும். விமான நிலையத்திலிருந்து நகருக்குள் வரும் பயணிகளுக்கு மேலும் சிறப்பாகச் சேவையாற்றுவது இதன் இலக்கு என்று நிலப்போக்குவரத்து ஆணையம் சனிக்கிழமை (ஆகஸ்ட் 16) அதன் ‘ஃபேஸ்புக்’ பதிவில் தெரிவித்தது.
பயணப்பெட்டிகளுக்கான அந்த அடுக்குகளில் பெரிய அளவிலான ஆறு பயணப் பெட்டிகளை வைக்க இயலும். உடைமைகள் சறுக்கியோ அல்லது உருண்டு விழுவதைத் தடுக்கும் வகையில் சிறப்பு வசதிகளும் இந்தப் பல நிலைகள் கொண்ட அடுக்கில் இருக்கும்.
அதிக பயணப் பெட்டிகளை வைத்திருக்கும் பயணிகள், விமான நிலையத்திற்குச் செல்வதையும், அங்கிருந்து புறப்படுவதையும் இச்சேவை வசதியாக்கும்.
இந்தப் புதிய வசதி குறித்து ஆணையம் வெளியிட்டுள்ள புகைப்படத்தில், ஓட்டுநர் இருக்கையின் பின்னாலிருந்து இரு இருக்கைகள் தள்ளி இந்த அடுக்கு இருப்பதைக் காண முடிகிறது.
‘விமான நிலையத்திற்கும் நகருக்கும் இடையே இயங்கும் ஒரே நேரடிப் பேருந்துச் சேவை என்பதாலேயே பேருந்துச் சேவை எண்-36 இந்த முயற்சிக்காகத் தெரிவு செய்யப்பட்டதாக ஆணையம் தெரிவித்தது.

