சிங்கப்பூர் பல ஆண்டுகளாகப் பாதுகாத்து வந்த அல்பட்ராஸ் ஆவணங்கள் அண்மையில் பொதுமக்கள் பார்வைக்கு வெளியிடப்பட்டன.
இந்த ஆவணங்கள், 1965ஆம் ஆண்டில் சிங்கப்பூர், மலேசியாவிலிருந்து பிரிந்த சூழ்நிலைகளை விவரிக்கின்றன.
1965 ஆகஸ்ட் 9ஆம் தேதி மலேசியாவிலிருந்து சிங்கப்பூர் திடீரென வெளியேற்றப்பட்டதாகப் பல ஆண்டுகள் கூறப்பட்டு வந்துள்ளதை மறுக்கும் வகையிலும் ஆவணங்களில் விவரங்கள் இடம்பெற்றுள்ளன.
சிங்கப்பூரின் பிரிவினை, பேச்சுவார்த்தை மூலமே தீர்மானிக்கப்பட்டது என்பதை அல்பட்ராஸ் ஆவணங்கள் உறுதிப்படுத்துகின்றன.
மேலும் அப்போதைய மலேசியப் பிரதமர் துங்கு அப்துல் ரஹ்மான், ஒரு தலைப்பட்சமாக முடிவு செய்து சிங்கப்பூரை வெளியேற்றினார் என்று பொதுவாக நிலவும் கருத்துக்கு மாற்றாகவும் அதில் தகவல்கள் இடம்பெற்றுள்ளன.
இந்த நிலையில் அல்பட்ராஸ் ஆவணங்களில் இடம்பெற்றுள்ள புதிய விவரங்கள், சிங்கப்பூர் வரலாறு பற்றிப் பள்ளிகளில் கற்பிக்கப்படும் விதத்தை காலப்போக்கில் மாற்றக்கூடும் என்று கல்வியாளர்களும் வரலாற்று ஆசிரியர்களும் தெரிவித்துள்ளனர்.
இது குறித்து ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் கல்வி அமைச்சிடம் கேட்டது.
அதற்குப் பதிலளித்த கல்வி அமைச்சு, அல்பட்ராஸ் ஆவணங்கள் போன்ற வரலாற்று விவரங்கள் பொதுமக்களுக்கு கிடைத்துள்ளதால் பாடத்திட்டங்களை மறு ஆய்வு செய்யப்படும்போது பாடப்புத்தகங்கள், மின்னிலக்கத் தளங்கள் ஆகியவை புதிய விவரங்களுக்கு ஏற்ப புதுப்பிக்கப்படும் என்று தெரிவித்துள்ளது.
தொடர்புடைய செய்திகள்
பேச்சுவார்த்தை மூலம் சிங்கப்பூரின் பிரிவினை நடந்தது என்பது புதிய தகவலன்று.
இந்த விவரங்கள், 1998ஆம் ஆண்டில் வெளியான திரு. லீ குவான் யூவின் சிங்கப்பூர்க் கதை (The Singapore Story: Memoirs of Lee Kuan Yew ) என்ற நூலிலும் இடம்பெற்றுள்ளதால் சில ஆண்டுகளாக அந்தத் தகவல்கள் பகிரங்கமாக உள்ளன என்று சிங்கப்பூர் சமூக அறிவியல் பல்கலைக்கழகத்தின் தலைவரும் வரலாற்று ஆசிரியருமான டான் டாய் யோங் கூறியுள்ளார்.
1990களின் பிற்பகுதியில் இதுபோன்ற ஆதாரங்கள் சில வெளியிடப்பட்ட பிறகு, 2000களின் முற்பகுதியில் தொடங்கிய ஒரு நடவடிக்கையில் இது பள்ளிகளின் வரலாற்றுப் பாடத்திட்டத்திலும் சேர்க்கப்பட்டது என்று கல்வி அமைச்சின் முன்னணி வரலாற்று பாடத்திட்ட வல்லுநர் நோயல் ஓங் தெரிவித்துள்ளார்.

