2027 ஏப்ரல் முதல் பாலர்களுக்கு மாதந்தோறும் எஸ்பிஎச் மீடியா தாய்மொழி இதழ்கள் வழங்கப்படும்

லீ குவான் யூ இருமொழி நிதியத்தின் 15ஆம் ஆண்டு நிறைவு

2027 ஏப்ரல் முதல் பாலர்களுக்கு மாதந்தோறும் எஸ்பிஎச் மீடியா தாய்மொழி இதழ்கள் வழங்கப்படும்

படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

27 Oct 2026 - 4:09 pm

4 mins read

பாலர் பள்ளி மாணவர்களிடையே தாய்மொழிக் கற்றலை ஊக்குவிக்கும் நோக்கில், 2027 ஏப்ரல் முதல் ‘பாலர் முரசு’ உட்பட எஸ்பிஎச் மீடியாவின் தாய்மொழிச் சிறுவர் வெளியீடுகள் அனைத்து மாணவர்களுக்கும் மாதந்தோறும் இலவசமாக வழங்கப்படும்.

லீ குவான் யூ இருமொழி நிதியத்தின் 15ஆம் ஆண்டுவிழாவில் செவ்வாய்க்கிழமை (அக்டோபர் 27) கல்வி அமைச்சரும் நிதியத்தின் தலைவருமான டெஸ்மண்ட் லீ இதனை அறிவித்தார்.

எஸ்பிஎச் அரங்கில் நடைபெற்ற இந்நிகழ்ச்சியில் உரையாற்றிய திரு லீ, சிங்கப்பூரின் கல்வி முறையில் இருமொழித் திறன் எப்போதும் முக்கியப் பங்கு வகித்து வந்துள்ளதாகக் குறிப்பிட்டார். சிறு வயதிலிருந்தே இரு மொழிகளைக் கற்பது சிந்தனையைச் செம்மைப்படுத்துவதுடன், ஒவ்வொரு மொழியிலும் பொதிந்துள்ள பண்புலன்கள், வரலாறுகள், பார்வைகள் ஆகியவற்றைப் புரிந்துகொள்ளவும் உதவுவதாக அவர் கூறினார்.

லீ குவான் யூ இருமொழி நிதியத்தின் 15ஆம் ஆண்டுவிழாவில் கல்வி அமைச்சரும் நிதியத்தின் தலைவருமான டெஸ்மண்ட் லீ பாலர் பள்ளி மாணவர்களுக்கான புதிய திட்டங்களை அறிவித்தார்.
லீ குவான் யூ இருமொழி நிதியத்தின் 15ஆம் ஆண்டுவிழாவில் கல்வி அமைச்சரும் நிதியத்தின் தலைவருமான டெஸ்மண்ட் லீ பாலர் பள்ளி மாணவர்களுக்கான புதிய திட்டங்களை அறிவித்தார். - படம்: யோகிதா அன்புச்செழியன்

இத்திட்டத்தின் மூலம் நாடு முழுவதும் உள்ள தனியார், சமூக அமைப்புகளைச் சேர்ந்த பாலர் பள்ளிகளில் பயிலும் கிட்டத்தட்ட 72,000 முதலாம், இரண்டாம் ஆண்டு பாலர் பள்ளி மாணவர்கள் (K1, K2) பயனடைவர் என எதிர்பார்க்கப்படுகிறது.

சிறுவர் வெளியீடுகளுடன், ‘பாலர் முரசு’ தமிழ்ச் செயலி உட்பட பிற தாய்மொழிச் செயலிகளும் 2027ல் அறிமுகப்படுத்தப்படும்.

கதைகள், பாடல்கள், விளையாட்டுகள் வழியாகச் சிறுவர்கள் தமிழைக் கற்கும் வகையில் ‘பாலர் முரசு’ செயலி வடிவமைக்கப்படுகிறது. பெற்றோர் தங்கள் பிள்ளைகளுடன் இணைந்து வாசிப்பதற்கான சிறப்புப் பகுதியும் இதில் இடம்பெறும். அத்துடன், சிறுவர்களின் திரைப் பயன்பாட்டு நேரத்தைக் கட்டுப்படுத்தும் வசதியும் வழங்கப்படும்.

“இது வாழ்நாள் முழுவதும் பயனளிக்கும் ஒரு சிறந்த சொத்து,” என்று இருமொழித் திறனைப் பற்றிக் குறிப்பிட்ட திரு லீ, இரு மொழிகளிலும் திறம்படச் செயல்படக்கூடிய சிங்கப்பூரர்கள் வெவ்வேறு பண்பாடுகளுக்கு இடையே பாலங்களை அமைக்கவும் உலகளாவிய வாய்ப்புகளைப் பயன்படுத்திக்கொள்ளவும் முடியும் என்றார்.

மாறிவரும் மொழிச் சூழலில் செயற்கை நுண்ணறிவுக் கருவிகள், மொழிபெயர்ப்புத் தொழில்நுட்பங்கள், உரையாடலின்போது மொழிகளை மாற்றிப் பேசும் பழக்கம், வீடுகளில் ஆங்கிலம் முதன்மை மொழியாக இருப்பது உள்ளிட்ட அம்சங்கள் தாய்மொழிக் கற்றலுக்குச் சவாலாக இருப்பதாகத் திரு லீ சுட்டிக்காட்டினார்.

இத்தகைய சூழலில், சிறு வயதிலேயே தாய்மொழிகளுடன் பிள்ளைகளுக்கு நல்ல அறிமுகத்தை ஏற்படுத்துவது அவசியம் என்பதை வலியுறுத்திய அவர், ‘தாய்மொழி நம் அடையாளம்’ என்ற தமிழ் வரிகளை மேற்கோள் காட்டினார்.

லீ குவான் யூ இருமொழி நிதியத்தின் ஆதரவுடன் நூல்களை எழுதிய எழுத்தாளர் காஜார் முகமது இக்பாலுடன் உரையாடும் எஸ்பிஎச் அரங்கில் பேசும் அமைச்சர் டெஸ்மண்ட் லீ (இடது).
லீ குவான் யூ இருமொழி நிதியத்தின் ஆதரவுடன் நூல்களை எழுதிய எழுத்தாளர் காஜார் முகமது இக்பாலுடன் உரையாடும் எஸ்பிஎச் அரங்கில் பேசும் அமைச்சர் டெஸ்மண்ட் லீ (இடது). - படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

கடந்த 2011ல் நிறுவப்பட்ட லீ குவான் இயூ இருமொழி நிதியம், இதுவரை 35 மில்லியன் வெள்ளி நிதி ஒதுக்கீட்டில் 290 திட்டங்களுக்கு ஆதரவளித்துள்ளது.

கல்வி அமைச்சு, கலாசார, சமூக, இளையர்துறை, பல்வேறு மொழி அமைப்புகளுடன் தொடர்ந்து இணைந்து செயல்பட நிதியம் உத்தேசித்துள்ளது. செயற்கை நுண்ணறிவு, மொழிபெயர்ப்புத் தொழில்நுட்பங்கள் நிறைந்த இக்காலகட்டத்தில், புதிய முறைகளையும் தொழில்நுட்பத்தையும் பயன்படுத்தி தாய்மொழிகளை உயிர்ப்புடன் வைப்பதே இதன் முதன்மைத் திட்டமாகும்.

எதிர்காலத் தலைமுறைக்கு நம்பிக்கையான இருமொழிச் சிங்கப்பூரர்களை உருவாக்கும் இந்த வாழ்நாள் முயற்சியில் புதிய சமூகப் பங்காளிகள் இணைந்து செயல்பட வேண்டும் என்று அமைச்சர் லீ அழைப்பு விடுத்தார்.

ஆண்டுவிழாவில் கல்வியாளர்கள், சமூகப் பங்காளிகள், இளையர் அமைப்புகளின் பிரதிநிதிகள், மாணவர்கள் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

கலைஞர்களின் பார்வையில் இருமொழி வளர்ச்சி

பாடல், நடனம், கதை சொல்லல், மரபுக் கலைகள் இணைந்து உருவாக்கப்பட்டுள்ள ‘ஆனந்த கூத்து’ எனும் பாலர் பள்ளி காணொளித் திட்டத்தை இருமொழி நிதியத்தின் ஆதரவோடு நடத்தி வருகிறார் ஏகே தியேட்டர் இயக்குநர் ராணி கண்ணா.

2023ல் தொடங்கப்பட்ட இத்திட்டத்திற்கு இருமொழி நிதியத்தை அணுகி ஆதரவும் நிதியுதவியும் 2024ல் பெறப்பட்டது.

“பிள்ளைகளுக்கு உடல் அசைவோடு, பாட்டோடும் ஆடலோடும் தமிழைக் கொண்டு சேர்க்கும்போது மொழி மனத்தில் எளிதாகப் பதியும். இது வெறும் தேர்ச்சி பெறவேண்டிய பாடமன்று. வாழ்க்கையோடு பிணைந்த ஒன்று என்ற எண்ணம் குழந்தைகளுக்கு வர வேண்டும்,” என்றார் அவர்.

இருமொழி நிதியத்தின் நிதியுதவி கிடைத்ததால் தங்களால் இவ்வளவு உயர்தரமான வளங்களை ஆசிரியர்களுக்கும் மாணவர்களுக்கும் வழங்க முடிவதாக திருவாட்டி ராணி குறிப்பிட்டார்.

இளையர்களுக்கான ‘முச்சந்தி’ நாடகத் தொடர், ‘நாடகமிக் 2026’ பன்னாட்டுத் தமிழ் நாடக விழா ஆகியவற்றை அகம் தியேட்டர் லேப் நிறுவனம் நடத்தி வருகிறது. சிங்கப்பூரில் தமிழ் நாடகத்துறை தொடர்ந்து வளர்ச்சி காண்பதுடன், காலத்திற்கேற்ப புதிய முயற்சிகளையும் முன்னெடுக்க வேண்டும் என்று அதன் நிறுவனர் சுப்ரமணியன் கணேஷ் கூறினார்.

“இளையர்கள் தங்களின் கலைத் திறன்களை வளர்த்துக்கொள்ளவும் புதிய முயற்சிகளில் ஈடுபட்டு அவற்றிலிருந்து கற்றுக்கொள்ளவும் உரிய தளங்கள் தேவை,” என்ற திரு கணேஷ், இருமொழி நிதியத்தின் ஆதரவு தங்களது முயற்சிகளுக்கு வலுசேர்ப்பதாகக் கூறினார்.

நாடகங்களில் ஆங்கிலத் துணைத்தலைப்புகளைப் பயன்படுத்துவது தமிழ் மொழி அறியாத பார்வையாளர்களும் கதையைப் புரிந்துகொண்டு நாடகங்களை ரசிக்க வழிவகுப்பதாக அவர் தெரிவித்தார். இதன்மூலம் வெவ்வேறு மொழிப் பின்னணிகளைக் கொண்ட பார்வையாளர்களைத் தமிழ் நாடகங்களுடன் இணைக்க முடிவதாகவும் அவர் கூறினார்.

“அடுத்த தலைமுறையினர் தமிழை நேசிக்க வேண்டுமென்றால் அதற்கான தகுந்த காரணங்களை நாம் உருவாக்கிக் கொடுக்க வேண்டும். ஓர் இளையர் கடமைக்காக அல்லாமல், கதை தன்னை ஈர்க்கிறது என்பதற்காகத் தமிழ் நாடகத்தைப் பார்க்க வரும்போதுதான் மொழி உண்மையாக வாழ்கிறது,” என்றார் திரு கணேஷ்.

நிதியம் நிதியுதவி வழங்குவதுடன் நின்றுவிடாமல், ஆக்கபூர்வமான கருத்துகளைப் பகிர்ந்துகொண்டு, தங்களது நோக்கத்தின்மீது உண்மையான அக்கறை காட்டும் பங்காளியாகவும் விளங்குவதாக அவர் குறிப்பிட்டார்.

குறிப்புச் சொற்கள்