கூகலின் முதன்மை நிறுவனமான ‘ஆல்ஃபபெட்’ (Alphabet), முதன்முறையாக ஹாங்காங் டாலர், சிங்கப்பூர் வெள்ளி ஆகிய நாணய மதிப்பில் கடன் பத்திரங்களை வெளியிடுவது குறித்து அண்மையில் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளதாக இந்த விவகாரத்தைப் பற்றி நன்கு அறிந்தவர்கள் தெரிவித்துள்ளனர்.
உலகளாவிய சந்தைகளில் செயற்கை நுண்ணறிவு (ஏஐ) பங்குகள் சரிவைச் சந்தித்த பிறகு, ஆசிய முதலீட்டாளர்களின் ஆர்வத்தை அளவிட இந்த முயற்சி ஒரு சோதனையாக அமையக்கூடும்.
தனியார் விவகாரங்கள் என்பதால் தங்கள் பெயரை வெளியிட வேண்டாம் என்று கேட்டுக்கொண்ட அந்த நபர்கள், கடன் பத்திர விற்பனை குறித்து ‘ஆல்ஃபபெட்’ நிறுவனம் வங்கிகளுடனும் முதலீட்டாளர்களுடனும் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளதாகக் கூறினர்.
இந்நிறுவனம் ஹாங்காங் டாலரில் 1 பில்லியன் அமெரிக்க டாலர் முதல் 1.5 பில்லியன் அமெரிக்க டாலருக்கு இணையான தொகையையும் (S$1.28 பில்லியன்), சிங்கப்பூர் வெள்ளியில் கிட்டத்தட்ட 1.5 பில்லியன் அமெரிக்க டாலருக்கு இணையான தொகையையும் திரட்ட திட்டமிட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. இவ்வாறு திரட்டப்படும் நிதி, நிறுவனத்தின் பொதுவான பெருநிறுவனத் தேவைகளுக்காகப் பயன்படுத்தப்படும்.
பேச்சுவார்த்தைகள் இன்னும் தொடர்ந்து நடைபெற்று வருவதால், மாற்றங்கள் ஏற்பட வாய்ப்புள்ளது என்று அந்த நபர்கள் தெரிவித்தனர். செயற்கை நுண்ணறிவு திட்டங்களுக்காக அதிக அளவில் நிதி தேவைப்படுவதால், உலகளவில் உள்ள பெரிய தொழில்நுட்ப நிறுவனங்கள் தாங்கள் இதுவரை பயன்படுத்தாத புதிய சந்தைகளை நாடி கடன் பத்திரங்கள் மூலம் நிதி திரட்டும் முயற்சிகளை விரிவுபடுத்தி வருகின்றன.
‘ஆல்ஃபபெட்’ நிறுவனம் கடந்த ஆகஸ்ட் மாதம் முதன்முறையாக ஆஸ்திரேலிய டாலரில் கடன் பத்திரங்களை விற்பனை செய்தது. அதோடு, இவ்வாண்டில் சுவிஸ் ஃபிராங்க், பிரிட்டிஷ் பவுண்ட், கனடிய டாலர், ஜப்பானிய யென் ஆகிய நாணய மதிப்புகளிலும் கடன் பத்திரங்களை அது வெளியிட்டுள்ளது.
