டவர் டிரான்சிட் நிறுவன மூத்த ஓட்டுநர்களுக்கு மாற்று வேலைத் திட்டம்

டவர் டிரான்சிட் நிறுவன மூத்த ஓட்டுநர்களுக்கு மாற்று வேலைத் திட்டம்

2 mins read
புதிய திறன்களைப் பெற்று மூத்த ஊழியர்கள் இலகுவான வேறு பணிகளுக்கு மாறிக்கொள்ள முன்னோடித் திட்டம் உதவும்
4dbee98e-4d4c-49a8-9af4-0bc5ad8b740f
டவர் டிரான்சிட் நிறுவனத்தின் 28 வயது முகம்மது சுல்ஹைமி என்ற ஓட்டுநர், வழக்கமான பேருந்துச் சோதனைகளை மேற்கொள்வதை அவரது வழிகாட்டியான 74 வயது அலெக்ஸ் பூன், வியாழக்கிழமை (ஏப்ரல் 23) மேற்பார்வையிடுகிறார். - படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

சிங்கப்பூரில் பேருந்துச் சேவை வழங்கும் டவர் டிரான்சிட் நிறுவனம் அதன் மூத்த ஓட்டுநர்களுக்கு மாற்றுப் பணிகளை வழங்கும் முன்னோடித் திட்டத்தைச் சோதித்து வருகிறது.

அதன்கீழ் மூத்த ஓட்டுநர்கள் 15 பேர், பேருந்துச் சேவையில் இணைந்துள்ள புதிய ஓட்டுநர்களுக்கு வழிகாட்டுதல் போன்ற வேறு பணிகளைச் செய்வர். ஏனெனில் 75 வயதை எட்டிய ஓட்டுநர்கள், பேருந்துகளை ஓட்ட முடியாது.

வேலையில் இருந்து ஓய்வு பெறுவதைத் தவிர்த்து, மூத்த ஓட்டுநர்கள் பெற்றுள்ள பல்லாண்டுகால அனுபவத்தைப் புதிய ஓட்டுநர்களுடன் பகிர்ந்து பலனடையும் விதமாக தற்போது சோதனை முயற்சிகளை டவர் டிரான்சிட் மேற்கொள்கிறது.

முதிர்ச்சியடைந்த ஊழியர்களுக்கான பல-நிலை வாழ்க்கைத்தொழில் நடவடிக்கைக்கான கூட்டணியுடன் ஒருங்கிணைந்து, மூப்படைந்த ஊழியர்கள் அணியை மேம்படுத்த டவர் டிரான்சிட் நிறுவனம் முன்னெடுத்துள்ள மூன்று திட்டங்களில் இதுவும் ஒன்று.

மூத்த ஊழியர்களின் வேலை நியமனத்துக்கான முத்தரப்புப் பணிக்குழு அமைத்துள்ள அந்தக் கூட்டணி, தற்போது ஏறத்தாழ 30 பேருடன் சோதனை முயற்சிகளில் ஈடுபட்டுள்ளது.

பல நிறுவனங்களைச் சேர்ந்த மூத்த ஊழியர்களுக்கு வேலை வாய்ப்புக்கு ஆதரவு வழங்கவும் தீர்வுகளைக் காணும் விதமாகவும் சோதனைகள் மேற்கொள்ளப்படுகின்றன.

புதிய திறன்களைக் கற்றுக்கொள்ளவும், மூத்த ஊழியர்கள் இலகுவான வேறு பணிகளுக்கு மாறிக்கொள்ளும்படியும் முன்னோடித் திட்டம் வடிவமைக்கப்பட்டுள்ளது.

முதிய ஓட்டுநர்கள் இளைய ஓட்டுநர்களுக்கு வழிகாட்டியாகப் பணியாற்றுவது ஒரு வகை. அதோடு, டவர் டிரான்சிட் நிர்வகிக்கும் ஆறு பேருந்து முனையங்களில் ஏதாவது ஒன்றில் மேலாளர்களுக்கு உதவியாளர்களாகவும் அவர்கள் தொடர்ந்து பணியாற்ற வாய்ப்பு உள்ளது.

மேலும், அதிகபட்சமாக வாரம் 44 மணி நேரம் பேருந்து ஓட்டுவதை விடுத்து, 35 மணி நேரம் அவர்கள் ஓட்டுவதற்கும் அனுமதி வழங்கப்படுகிறது. இதன்கீழ், அவர்கள் சம்பளத்தில் மாற்றம் இருக்காது.

குறிப்புச் சொற்கள்