இனமும் சமயமும் சிங்கப்பூரின் சமூக அமைப்பைத் தொடர்ந்து வடிவமைத்துவருகின்றன என்றும் இத்துறைகளில் நல்லிணக்கத்தை மேம்படுத்தும் பணி இன்றும் முக்கியத்துவம் வாய்ந்ததாகவே உள்ளது என்றும் நீடித்த நிலைத்தன்மை, சுற்றுப்புறம் மற்றும் கல்வி மூத்த துணை அமைச்சர் ஜனில் புதுச்சேரி தெரிவித்துள்ளார்.
சிங்கப்பூர் குறிப்பிடத்தக்க முன்னேற்றம் அடைந்துள்ள நிலையில், இன நல்லிணக்கம் குறித்த எதிர்பார்ப்புகளும் உருவெடுத்துள்ளன என்று அவர் குறிப்பிட்டார்.
ஞாயிற்றுக்கிழமை (செப்டம்பர் 28), இந்திய இளையர்களுக்காகத் தமிழ் முரசின் இளைய தலைமுறை, ஒன்பீப்பள்.எஸ்ஜி (OnePeople.sg) அமைப்புடன் இணைந்து நடத்திய கலந்துரையாடல் நிகழ்ச்சியில் டாக்டர் ஜனில் கலந்துகொண்டு பேசினார்.
‘இன உறவுகள்: எதிர்வரும் போக்குகளும் இளையர் தலைமைத்துவமும்’ (Race Relations: Emerging Trends & Youth Leadership) என்ற கருப்பொருளை மையமாகக் கொண்டு இந்த நிகழ்ச்சி நடைபெற்றது.
தமிழ் முரசின் ஊடக வாசகர், வளர்ச்சி ஆசிரியரும் தப்லா ஆசிரியருமான எஸ். வெங்கடேஷ்வரன் கலந்துரையாடலை வழநடத்தினார்.
“இன்று, நுட்பமான புண்படுத்தும் செயல்கள் (microaggressions), இனம் தொடர்பான பொதுமைப்படுத்தப்பட்ட சிந்தனை (racial stereotypes) போன்றவை ஐந்து அல்லது பத்து ஆண்டுகளுக்கு முன்பிருந்ததைவிட மிகவும் தீவிரமாக எடுத்துக்கொள்ளப்படுகின்றன,” என டாக்டர் ஜனில் குறிப்பிட்டார்.
சிங்கப்பூரில் நல்லிணக்கத்தை விரும்பும் மனப்போக்கு பொதுவாக ஆக்ககரமான திசையில் நகர்வதை இத்தகைய மாற்றங்கள் பிரதிபலிப்பதாகவும் அவர் கூறினார். அதேவேளையில், இனமும் சமயமும், சிங்கப்பூரர்கள் தங்களை எவ்வாறு அடையாளப்படுத்திக்கொள்கிறார்கள் என்பதையும் ஒருவருக்கொருவர் எவ்வாறு தொடர்பு கொள்கிறார்கள் என்பதையும் தொடர்ந்து வடிவமைக்கின்றன என்றும் அவர் வலியுறுத்தினார்.
“நமது தேசிய அடையாள உணர்வு இன்னும் உருவாக்கப்பட்டுக் கொண்டிருக்கும் ஒன்று,” என்று அவர் குறிப்பிட்டார்.
தொடர்புடைய செய்திகள்
வலுவான சிங்கப்பூர் அடையாளத்தை உருவாக்குவதில் இனம், சமயம் குறித்த கலந்துரையாடல்கள் மையப்பங்கு வகிக்கின்றன என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.
ஒன்பீப்பள்.எஸ்ஜி அமைப்பின் அரங்கில் நடைபெற்ற இந்நிகழ்ச்சி, பல்வேறு சமூக அமைப்புகளையும் உயர்கல்வி நிலையங்களையும் சேர்ந்த இளையர்கள் கிட்டத்தட்ட 100 பேரை ஒன்றிணைத்தது. இனம், சமயம், அவரவர் விரும்பும் சிங்கப்பூர் ஆகிய அம்சங்கள் குறித்து வெளிப்படையாகவும் சிந்தனையைத் தூண்டும் வகையிலும் கருத்துப் பரிமாற்றங்கள் இடம்பெற்றன.
இந்தக் கலந்துரையாடல், கொள்கை ஆய்வுக் கழகமும் ஒன்பீப்பள்.எஸ்ஜி அமைப்பும் இணைந்து தயாரித்த ‘இன, சமய நல்லிணக்கக் குறியீடுகள் 2024’ அறிக்கையின் புதிய கண்டுபிடிப்புகளை அடிப்படையாகக் கொண்டது. இவற்றைக் கொள்கை ஆய்வுக் கழகத்தின் சமூக ஆய்வகத் தலைவரும் முதன்மை ஆய்வு உறுப்பினருமான டாக்டர் மேத்யூ மேத்யூஸ் நிகழ்ச்சியில் படைத்தார்.
அந்த அறிக்கையில் வெளிப்படுத்தப்பட்ட தகவல்கள், சிங்கப்பூரர்களின் இனம், சமயம் குறித்த மாறிவரும் மனப்போக்குகளை வெளிப்படுத்தியதோடு, நல்லிணக்கத்தைப் பேணுவதில் உள்ள சவால்களையும் வாய்ப்புகளையும் குறித்த ஆழ்ந்த சிந்தனையையும் பங்கேற்பாளர்களிடம் தூண்டின.
இளையர்கள் நிகழ்ச்சிக்கு முன்னதாகவே இணையவழியாகக் கேள்விகளை முன்வைக்கவும், தங்கள் சொந்த அனுபவங்களைப் பகிரவும், நேரடியாக வினாக்கள் எழுப்பவும் ஊக்குவிக்கப்பட்டனர்.
சமூகத்தில் அனைவரையும் உள்ளடக்குதல், சிங்கப்பூரில் வெளிநாட்டவரின் ஒருங்கிணைப்பு, சிங்கப்பூரில் இளையர் தலைமைத்துவத்தின் பங்கு, ஒற்றுமையான சிங்கப்பூர் குறித்த இளையர்களின் எதிர்பார்ப்புகள் ஆகியவை நிகழ்ச்சியில் முன்வைக்கப்பட்ட தலைப்புகளில் அடங்கும்.
நிகழ்ச்சிக்குப்பின் செய்தியாளர்களிடம் பேசிய டாக்டர் ஜனில், சமூகத்தில் அனைவரையும் இணைத்துக்கொள்ளும் தன்மை, தற்செயலான இனவாதம் (casual racism), இளையர் தலைமைத்துவம் போன்ற சிக்கலான கேள்விகளை எழுப்பிய இளையர்களின் தன்னம்பிக்கையால் தாம் ஊக்கமடைந்ததாகக் கூறினார்.
மேலும், கலந்துரையாடல்கள் நல்ல நோக்கத்துடனும் எண்ணத்துடனும் நடத்தப்பட வேண்டியதன் அவசியத்தையும் அவர் வலியுறுத்தினார்.
“புண்படுத்தும் வார்த்தைகளை நாம் கேட்கும்போது, அவற்றைக் கூறியவரிடம் அவரது தவற்றை விளக்கலாம். அதேநேரம், அறிவுரை வழங்கப்படும்போது அதை நல்ல நோக்கத்தோடு ஏற்றுக்கொள்ள வேண்டும். அப்போதுதான் நாம் ஒன்றிணைந்து மேலும் ஆக்ககரமான சமூக வழிமுறைகளை உருவாக்க முடியும்,” என்றார் டாக்டர் ஜனில்.
அமைச்சருடன் அணுக்கமான சூழலில் நேரடியாகப் பேசும் வாய்ப்பு கிடைத்தது மிகவும் சிறப்பாக இருந்ததாக நிகழ்ச்சியில் பங்கேற்ற 23 வயது சம்யுக்தா வெங்கடேசன் கூறினார்.
“அவர் அனைத்துக் கேள்விகளுக்கும் செவிசாய்த்து, பதிலளிக்க நேரம் எடுத்துக்கொண்டது மிகவும் அருமை. இளையர்களின் கருத்துகளும் முக்கியத்துவம் வாய்ந்தவை, அவை அரசாங்கத்தால் கருத்தில் எடுத்துக்கொள்ளப்படுகின்றன என்பதை இங்குக் கண்டது நம்பிக்கையூட்டுவதாக உள்ளது,” என்று அவர் மேலும் குறிப்பிட்டார்.
‘இளைய தலைமுறை’ தளத்தின் வெளியீடு
இந்நிகழ்ச்சியின் சிறப்பம்சமாக, தமிழ் முரசின் முதல் இளையர் தளமான ‘இளைய தலைமுறை’ அதிகாரபூர்வமாக அறிமுகப்படுத்தப்பட்டது.
மின்னிலக்க முயற்சியாக வடிவமைக்கப்பட்ட இந்தத் தளம், சிங்கப்பூரின் தமிழ், இந்திய இளையர்கள் தங்கள் எண்ணங்கள், கருத்துகள், கண்ணோட்டங்களைச் சுதந்திரமாக வெளிப்படுத்துவதற்கான வாய்ப்பை வழங்குகிறது.
இவ்வாண்டு பிப்ரவரி மாதத்தில் நிறுவப்பட்ட இத்தளம், தற்போது டிக்டாக், இன்ஸ்டகிராம், யூடியூப் போன்ற சமூக ஊடகங்களில் செயல்பட்டு வருகிறது.
இதுவரை, துணையுரைகளுடன் (subtitles) வாழ்க்கைமுறை, அரசியல், சமூகப் பிரச்சினைகள் உள்ளிட்ட தலைப்புகளை மிகச் சிறிய வடிவங்களில் (bite-sized formats) உருவாக்கி, 130க்கும் மேற்பட்ட காணொளிகளையும் 40 பதிவுகளையும் வெளியிட்டுள்ளது.
சமூக ஊடகங்களில் திறன்வாய்ந்த இளையர்களுடனும் இளம் தொழில் வல்லுநர்களுடனும் இணைந்து, அடுத்த தலைமுறைக்கான துடிப்பான, அனைவரையும் உள்ளடக்கும் ஒரு தளத்தை உருவாக்கும் நோக்கத்தை இது கொண்டுள்ளது.