வெளிப்படையான, முதலீட்டாளர்களுக்கு உகந்த சூழல் ஆந்திராவில் கட்டியெழுப்பப்படும் என்றும், எனவே இணைந்து செயல்படவும், ஒருங்கிணைந்து வளர்ச்சியடையவும் முதலீட்டாளர்கள் ஆந்திராவுக்கு வருகை தர வேண்டும் என்றும் அழைப்பு விடுத்துள்ளார் அம்மாநில முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு.
ஐந்து நாள் பயணம் மேற்கொண்டு சிங்கப்பூர் வந்துள்ள திரு நாயுடு, திங்கட்கிழமை (ஜூலை 28) மாலை ஷங்ரிலா ஹோட்டலில் நடைபெற்ற ‘ஆந்திரப்பிரதேசம் - சிங்கப்பூர் வர்த்தக மன்றம் மற்றும் இந்தியத் தொழில்துறைகளுக்கான கூட்டமைப்பு (சிஐஐ)’ மாநாட்டில் பங்கேற்றுப் பேசினார்.
அந்த மாநாட்டில் ஆந்திர மாநிலத்தில் நிலவும் சாதகமான பொருளியல் நிலை, தொழில்நுட்ப மேம்பாடு சார்ந்த திட்டப் பணிகள், தேசிய மற்றும் அனைத்துலக அளவில் அந்த மாநிலம் மேற்கொண்டுவரும் வளர்ச்சித் திட்டங்கள் எனப் பலவற்றை புள்ளிவிவரங்களுடன் பட்டியலிட்டார் திரு நாயுடு. இந்த ஆண்டு நவம்பர் மாதம் விசாகப்பட்டினத்தில் நடைபெறவுள்ள ‘சிஐஐ’ பங்காளித்துவ மாநாட்டில் பங்கேற்க அவர் அழைப்பு விடுத்தார்.
தொடர்ந்து உரையாற்றிய அவர், சிங்கப்பூர் முதலீட்டாளர்கள் நிலைத்து, மீள்திறன் வாய்ந்த பங்காளித்துவத்தில் தங்களுடன் இணையவேண்டிய காரணத்தையும் விவரித்தார்.
சுமார் ஒரு மணி நேரத்துக்கும் மேலாக நீடித்த அவரது உரையின்போது திரு நாயுடு, “பசுமை எரிசக்தி, புவிசார் பொருளியல், மின்னிலக்க ஆளுமை, தொழில்துறைப் பூங்காக்கள் எனப் பல்வேறு பிரிவுகளில் ஒன்றிணைந்து செயலாற்றுவதன்வழி பரஸ்பர முன்னேற்றம் அடையலாம்,” என்று கூறினார்.
மேலும், அவரது ஆட்சியில் இதற்கான பணிகள் அனைத்தும் தீவிரமாக நடைபெற்று வருகின்றன என்று சுட்டிய முதலமைச்சர் நாயுடு, “எப்போதுமே வர்த்தகம் செய்வதற்கான வழிகளை எளிதாகவும் ஆற்றல் மிக்கதாகவும் வழங்குவதில் பெயர்பெற்று விளங்கும் இந்திய மாநிலம் ஆந்திரா,” எனவும் குறிப்பிட்டார்.
அமராவதியின் குவான்டம் வேலி திட்ட உருவாக்கம் உள்ளிட்ட பல்வேறு வளர்ச்சி வாய்ப்புகளையும் கோடிகாட்டிய திரு நாயுடு, உலக நாடுகள் பல மூப்படைந்துவரும் நிலையில், இந்தியாவின் மக்கள்தொகை ஆக அதிகமான இளையர்களைக் கொண்டிருப்பதைச் சுட்டினார்.
‘‘இத்தகைய துடிப்புமிக்க ஊழியரணியை சிங்கப்பூர் உள்ளிட்ட அனைத்துலக நாடுகள் பயன்படுத்திடவும்; அதற்கு தொழில்துறை சார்ந்த முதலீடுகளை ஆந்திராவை நோக்கி வர்த்தகர்கள் நகர்த்திடவும் வேண்டும்,” என்றும் வலியுறுத்தினார் திரு நாயுடு.
தொடர்புடைய செய்திகள்
முன்னதாக, பயணத்தின் ஓர் அங்கமாக மனிதவள அமைச்சரும், எரிசக்தி அறிவியல் தொழில்நுட்பம் ஆகியவற்றுக்குப் பொறுப்பு வகிக்கும் அமைச்சருமான டான் சீ லெங்கைச் சந்தித்தார் திரு நாயுடு.
இதுகுறித்து தமது சமூக ஊடகப் பக்கத்தில் பதிவிட்ட திரு சந்திரபாபு நாயுடு, “அனைவரையும் உள்ளடக்கிய, நிலைத்தன்மை வாய்ந்த வளர்ச்சியைக் கட்டமைக்கும் மதிப்புமிக்க பங்காளித்துவத்தை சிங்கப்பூர் மீண்டும் உறுதிப்படுத்திய கடப்பாட்டுக்கு நன்றி,” என்று கூறினார்.
கடந்த பல ஆண்டுகளாகத் தொடரும் சிங்கப்பூர் - ஆந்திரா நட்புறவை நினைவுகூர்ந்த திரு நாயுடு, ‘‘அண்மைய கலந்துரையாடல்கள் வேளாண்-உணவு, துறைமுகக் கட்டமைப்பு, மின்னிலக்கப் புத்தாக்கம், புதுப்பிக்கத்தக்க எரிசக்தி, திறன் மேம்பாடு உள்ளிட்ட முக்கியத் துறைகளில் மேலும் செழிப்பான ஒத்துழைப்பிற்கான கதவுகளை திறந்திருக்கின்றன,’’ என்று சொன்னார்.
ஆந்திராவில் முந்தைய ஆட்சி நிர்வாகத்தின்போது சிங்கப்பூரைச் சேர்ந்த முதலீட்டாளர்கள் சந்தித்த பின்னடைவுகளைச் சுட்டிய திரு நாயுடு, இனி முதலீட்டாளர்களுக்கு நம்பகமான, நிலையான கட்டமைப்பை உருவாக்கத் தமது அரசாங்கம் முழுமையாக உறுதிபூண்டுள்ளது என்றும் தெரிவித்தார்.