தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

ஆண்டுதோறும் 1,000க்கும் மேற்பட்ட புதிய ஆசிரியர்கள் நியமனம்: டெஸ்மண்ட் லீ

3 mins read
48cda22f-83de-4b4e-b3ed-37f7078dfda1
தேசியக் கல்விக் கழகத்தின் 2025 ஆசிரியர் பட்டமளிப்பு விழாவில் அமைச்சர் டெஸ்மண்ட் லீ உரையாற்றினார். - படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்
multi-img1 of 2

அடுத்த சில ஆண்டுகளுக்கு சிங்கப்பூர் ஆண்டுதோறும் ஆயிரத்திற்கும் மேற்பட்ட புதிய ஆசிரியர்களை நியமிக்கத் திட்டமிட்டுள்ளது என்று கல்வி அமைச்சர் டெஸ்மண்ட் லீ தெரிவித்துள்ளார்.

இதுவரை ஒவ்வோர் ஆண்டும் கிட்டத்தட்ட 700 ஆசிரியர்கள் பணியில் நியமிக்கப்பட்டு வந்த நிலையில், இப்புதிய முயற்சி கல்வித்துறையை மேலும் பலப்படுத்தி வலிமையாக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

கடந்த சில ஆண்டுகளில் ஆசிரியர் நியமனம் குறைவடைந்ததன் விளைவாக, சிங்கப்பூரில் 2016ல் 33,378 ஆக இருந்த ஆசிரியர்களின் மொத்த எண்ணிக்கை 2023ல் 30,396ஆகக் குறைந்தது. 2024ஆம் ஆண்டிற்கான தரவுகளைக் கல்வி அமைச்சு இதுவரை வெளியிடவில்லை.

நன்யாங் தொழில்நுட்பப் பல்கலைக்கழகத்தின் நன்யாங் மண்டபத்தில் புதன்கிழமை (ஜூலை 9) நடைபெற்ற தேசியக் கல்விக் கழகத்தின் 2025 ஆசிரியர் பட்டமளிப்பு விழாவில் அமைச்சர் லீ உரையாற்றினார்.

இந்நிகழ்ச்சியில், 721 புதிய மற்றும் மீண்டும் பணியில் இணையும் ஆசிரியர்கள் பட்டம் பெற்றனர். அவர்களில் 47 பேர், தங்கள் சிறந்த கல்வி சாதனைகளுக்காக லீ குவான் யூ தங்கப் பதக்கம், தேசிய கல்வி கழக விருது உள்ளிட்ட விருதுகளையும் பெற்றனர்.

இவ்வாண்டு, கல்விக்கான பட்டய (தமிழ்) படிப்பில் (Diploma in Education (Tamil Specialisation) ஒருவரும், இளங்கலை தமிழ்க் கல்வி, கல்வியியலில் (Bachelor of arts in Tamil Studies and Education) மூவரும், தொடக்கப் பள்ளி, உயர்நிலைப் பள்ளிக்கான முதுநிலைக் கல்வியியல் பட்டயப் படிப்பு (PGDE – Tamil Language) முறையே ஏழு பேரும் நான்கு பேரும் விருதுகள் பெற்றுள்ளனர்.

தொழில்நுட்பம், பருவநிலை மாற்றம், தகவல் தொடர்புத் துறைகளில் ஏற்பட்டுவரும் விரைவான மாற்றங்களை எதிர்கொள்வதற்காக மாணவர்களைத் தேவையான திறன்களுடன் தயார்ப்படுத்த வேண்டும் என்று அமைச்சர் லீ கேட்டுக்கொண்டார்.

“செயற்கை நுண்ணறிவு, மின்னிலக்க ஊடகங்கள், உலகளாவிய சவால்கள் வேகமாக வளர்ந்துவரும் இந்தக் காலக்கட்டத்தில், மாணவர்கள் எப்போதும் தயார்நிலையில் இருக்க வேண்டும்,” என்று அவர் அறிவுறுத்தினார்.

மாணவர்களிடம் கற்றலின் மகிழ்ச்சியை ஊட்டுங்கள் எனப் புதிய ஆசிரியர்களை திரு லீ ஊக்குவித்தார். வாழ்நாள் முழுவதும் கற்றலைத் தொடரும் ஆர்வத்தையும், மாணவர்களின் நற்பண்புகளையும் வளர்த்திடும் பொறுப்பும் ஆசிரியர்களிடம் இருப்பதாக அவர் குறிப்பிட்டார்.

“உண்மையான உலகம், தேர்வு மதிப்பெண்களைவிட தெளிவான முடிவெடுக்கும் திறன், உணர்வுபூர்வ நுண்ணறிவு, பரிவுணர்வு போன்ற பண்புகளையே அதிகம் மதிக்கிறது,” என்றார் அமைச்சர் லீ. அவ்வகையில், மாணவர்களின் முழுமையான வளர்ச்சிக்காகவும் ஆசிரியர்கள் வழிகாட்ட வேண்டும் என்றார் அவர்.

அரையாண்டுத் தேர்வுகள் நீக்கப்படுதல், முழுமையான பாட அடிப்படையிலான வகைப்பாட்டின் நீக்கம் போன்ற கொள்கை மாற்றங்களைச் சுட்டிக்காட்டிய கல்வியமைச்சர், அமைப்பு அளவிலான இம்மாற்றங்கள் பள்ளியில் கற்றல் அனுபவங்களால் ஆதரிக்கப்பட வேண்டும் என்று கூறினார்.

இது, மாணவர்கள் தங்கள் தனித்துவமான பலங்களையும் ஆர்வங்களையும் கண்டறிய உதவுவதோடு கற்றலின் ஆழமான, நீடித்த மகிழ்ச்சியைத் தூண்டவும் உதவும் என்று திரு லீ சொன்னார்.

மேலும், அதிகரித்துவரும் தலைமுறை இடைவெளிகள், உணர்திறன்கள், மாறுபட்ட நம்பிக்கைகள் ஆகியவை காரணமாக நமது ஒற்றுமையையும் சமூகப் பிணைப்பையும் இனி எளிதாக எடுத்துக்கொள்ள இயலாது என்றும் அவர் குறிப்பிட்டார்.

“மாணவர்களை ‘நான்’ என்ற மனப்பான்மையிலிருந்து ‘நாம்’ என்ற ஒன்றுபட்ட மனநிலைக்குத் திருப்ப வேண்டும். தனிப்பட்ட வெற்றியைவிட, சமூகப் பொறுப்பை உணரும் எண்ணத்தை அவர்களிடையே வளர்க்க வேண்டும்,” என்றார் அவர்.

பல தலைமுறைகளாக ஆசிரியர்களை உருவாக்கும் பணியில் சிறப்பாக ஈடுபட்டுள்ள தேசியக் கல்விக் கழகத்தைப் பாராட்டிய அமைச்சர் லீ, அப்பணியில் இன்பத்தையும் சவால்களையும் திறம்பட எதிர்கொள்வதற்குப் புதிய பட்டதாரிகளை ஊக்குவித்தார்.

“நீங்கள் இன்று மட்டுமல்ல, நாளைய சிங்கப்பூரின் உருவாக்கத்தையும் உங்களது கற்பித்தலால் வடிவமைக்கிறீர்கள். கனிவும் ஞானமும் ஒற்றுமையும் நிரம்பிய ஒரு சிங்கப்பூரைக் கட்டியெழுப்பும் பணியில் உங்கள் பங்களிப்பு ஆக முக்கியமானது,” என்று அவர் கூறினார்.

குறிப்புச் சொற்கள்