ஓய்வுபெற்ற கௌரவப் பேராயர் நிக்கலஸ் சியா காலமானார். அவருக்கு வயது 86.
சிங்கப்பூர் ரோமன் கத்தோலிக்கத் திருச்சபையின் தலைவர் பதவிக்கு நியமிக்கப்பட்ட, சிங்கப்பூரில் பிறந்த முதல் கத்தோலிக்கத் தலைவர் என்ற சிறப்பு அவரைச் சாரும்.
அவர் காலமான தகவலை, கார்டினல் வில்லியம் கோ, டிசம்பர் 17ஆம் தேதி பின்னேரம் ஃபேஸ்புக்கில் வெளியிட்டுள்ளார். “ஓய்வுபெற்ற கௌரவப் பேராயர் சியா, இன்று மாலை செயின்ட் தெரேசா இல்லத்தில் அமைதியான முறையில் காலமானார்,” என்று அப்பதிவில் அவர் குறிப்பிட்டுள்ளார்.
பொதுமக்கள் ஓய்வுபெற்ற கௌரவப் பேராயர் சியாவின் நல்லுடலுக்கு அஞ்சலி செலுத்துவதற்கும், நல்லடத்துக்குமான ஏற்பாடுகள் குறித்துப் பின்னர் அறிவிக்கப்படும் என்று கார்டினல் தமது பதிவில் தெரிவித்துள்ளார்.
முன்னதாக, டிசம்பர் 17ஆம் தேதி பிற்பகல் 2.50 மணியளவில் ஓய்வுபெற்ற கௌரவப் பேராயர் நிக்கலஸ் சியாவின் நலத்திற்காகப் பிரார்த்தனை செய்யும்படி, சிங்கப்பூர் ரோமன் கத்தோலிக்கத் திருச்சபை, ஃபேஸ்புக், இன்ஸ்டகிராம் ஆகியவற்றின் வாயிலாகக் கேட்டுக்கொண்டது.
டிசம்பர் 17ஆம் தேதி நள்ளிரவுக்குச் சற்று முன்னர் பிரதமர் லாரன்ஸ் வோங் ஃபேஸ்புக்கில் வெளியிட்ட பதிவில், ஓய்வுபெற்ற கௌரவப் பேராயர் நிக்கலஸ் சியா கத்தோலிக்கச் சமூகத்தின் வலுவான தூண் போன்றவர்; அர்ப்பணிப்பு மிக்க வழிகாட்டியாகத் திகழ்ந்தவர் என்று குறிப்பிட்டார். அவரது அசைக்க முடியாத இறைநம்பிக்கை, பணிவு, இரக்கம் ஆகிய பண்புகள் பலரின் வாழ்வை மேம்படுத்தியுள்ளது என்று கூறிய பிரதமர் வோங் கத்தோலிக்கச் சமூகத்தினருக்கு ஆழந்த இரங்கலைத் தெரிவித்துக்கொண்டார்.
ஓய்வுபெற்ற கௌரவப் பேராயர் நிக்கோலஸ் சியா மக்களின் அன்பைப் பெற்ற சமயத் தலைவராக விளங்கியவர் என்று சிங்கப்பூர் ரோமன் கத்தோலிக்கத் திருச்சபையின் இணையத்தளம் குறிப்பிடுகிறது.