தஞ்சோங் பகார் பிளாசாவில் பல உடற்பிடிப்பு நிலையங்கள் மூடல்

2 mins read
10588fe1-4999-44f4-a016-7400b71357d3
2025 செப்டம்பர் முதல் தஞ்சோங் பகார் பிளாசா வட்டாரத்திலுள்ள உடல்பிடிப்பு நிலையங்களில் மேற்கொள்ளப்பட்ட அமலாக்க நடவடிக்கையில் 13 பெண்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். - படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

தஞ்சோங் பகார் பிளாசாவில் அண்மைய மாதங்களில் காவல்துறையினர் மேற்கொண்ட அமலாக்க நடவடிக்கைகளுக்கு இடையே அங்கு கிட்டத்தட்ட 10 உடற்பிடிப்பு, உடல் அழகு சிகிச்சை நிலையங்கள் மூடப்பட்டுள்ளன.

உடற்பிடிப்பு நிலையங்களில் மேற்கொள்ளப்பட்ட அமலாக்க நடவடிக்கைகளில் கைது நடவடிக்கை இடம்பெற்றதுடன், சில வணிகங்கள் உரிமம் இன்றி செயல்படுவதும் தெரியவந்தது.

காவல்துறை சோதனைகளைத் தொடர்ந்து அந்நிலையங்கள் மூடப்பட்டாலும், அவை பல காரணங்களுக்காக மூடப்பட்டிருக்கலாம் என்று தஞ்சோங் பகார் குழுத்தொகுதி நாடாளுமன்ற உறுப்பினர் ஃபூ செச்சியாங் கூறினார்.

முன்னதாக, செப்டம்பர் மாதத்தில் திரு ஃபூ, தஞ்சோங் பகார் பிளாசாவுக்குப் புத்துயிரூட்டும் முயற்சிகள் தீவிரப்படுத்தப்படும் என உறுதியளித்தார். அங்குள்ள சில உடற்பிடிப்பு, உடல் அழகு நிலையங்களில் சட்டவிரோத நடவடிக்கைகள் குறித்த கவலைகளைப் பகிர்ந்த அவர், காவல்துறையினர் சோதனைகளை அதிகரிப்பார்கள் என்றும் சொன்னார்.

பல பாலர் பள்ளிகள் அந்த பிளாசாவில் உள்ள நிலையில், சில பெற்றோர்கள், தங்கள் குழந்தைகளுடன் அந்தக் கடைகளைக் கடந்து செல்லும்போதெல்லாம் சங்கடப்படுவதாக திரு ஃபூ குறிப்பிட்டார்.

சில உடற்பிடிப்பு நிலையங்கள் சட்டபூர்வமான சேவைகளை வழங்குகின்றன, அவை குடியிருப்பாளர்களால் ஆதரிக்கப்படுகின்றன என்ற திரு ஃபூ, பிளாசாவிலிருந்து அத்தகைய சேவைகளை முற்றாக அகற்றுவது நோக்கமல்ல என்றார். எனினும், சட்டவிரோதமான சேவை வழங்கும் கடைகளுக்குப் பதிலாக குடியிருப்பாளர்களுக்கு சிறந்த சேவை செய்யக்கூடிய கடைகள் வேண்டும் என்பதே நோக்கம் என்றார்.

கடந்த செப்டம்பர் மாதம் முதல் உடல்பிடிப்பு நிலையங்களில் மேற்கொள்ளப்பட்ட அமலாக்க நடவடிக்கைகளில் வெளிநாட்டு ஊழியரை வேலைக்கு அமர்த்துதல் சட்டம், மாதர் சாசனம் ஆகியவற்றின்கீழ் பல்வேறு குற்றங்களுக்காக 13 பெண்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக காவல்துறை ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்சிடம் தெரிவித்தது.

எட்டு உடற்பிடிப்பு நிலையங்கள் செல்லுபடியாகும் உரிமம் இன்றிச் செயல்பட்டதாகக் கண்டறியப்பட்டது.

1970களில் கட்டப்பட்ட தஞ்சோங் பகார் பிளாசா ஏழு வணிக - குடியிருப்பு கட்டடங்களைக் கொண்டது. அந்த அடுக்குமாடிகளின் முதல் இரு தளங்களிலும் கடைகள் உள்ளன. ஒரு ஈரச்சந்தையுடன் உணவங்காடியும் அங்கு உள்ளன.

குறிப்புச் சொற்கள்