பொங்கோலில் இயந்திர மனிதர்கள் பாதுகாப்பாகச் சாலையைக் கடக்க புதிய ஏற்பாடு

பொங்கோலில் இயந்திர மனிதர்கள் பாதுகாப்பாகச் சாலையைக் கடக்க புதிய ஏற்பாடு

படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

05 Oct 2026 - 10:40 am

2 mins read

பொங்கோலில் உணவு விநியோகம், சுற்றுக்காவல் ஆகிய பணிகளில் இயந்திர மனிதர்கள் விரைவில் ஈடுபடுத்தப்படவுள்ளன.

அந்தச் சோதனையோட்டத் திட்டம் செயல்பாட்டுக்கு வருவதற்குமுன் நடையர் கடக்கும் பாதையை இயந்திர மனிதர்கள் பாதுகாப்பாகக் கடக்க உதவும் திட்டங்கள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

அதற்காக, பொங்கோல் வே, நியூ பொங்கோல் ரோடு சந்திப்பில் உள்ள நடையர் கடக்கும் பாதையில் இருக்கும் போக்குவரத்துச் சமிக்ஞை விளக்குகளில் உணர்கருவிகளைப் பொருத்த அதிகாரிகள் திட்டமிட்டு வருகின்றனர்.

பொங்கோல் வே சந்திப்பில் நான்கு நீண்ட வானலை அடையாளக் குறியீட்டு வாங்கிகளைப் (RFID antennas) பொருத்துவதற்கான ஒப்பந்தப்புள்ளி தொடர்பான அறிவிப்பை நிலப் போக்குவரத்து ஆணையம் செப்டம்பர் 21ஆம் தேதி வெளியிட்டது.

போக்குவரத்துச் சமிக்ஞை விளக்குகளின் கம்பங்களில் உள்ள பொத்தான்களைத் தனது கைகளால் அழுத்த முடியாத தானியக்க நடமாட்ட இயந்திர மனிதர்கள், இந்த வானலை வாங்கிகள் மூலம் சமிக்ஞைகளைச் செயல்படுத்திச் சாலையைக் கடக்க முடியும் எனத் தெரிவிக்கப்பட்டது.

உண்மையான உலகச் சூழலில் தானியக்க நடமாட்ட இயந்திர மனிதனின் பயன்பாட்டை மதிப்பிடுவதற்காகப் பொங்கோல் மின்னிலக்க வட்டாரத்தில் நடத்தப்பட்டு வரும் சோதனையின் ஒரு பகுதியாக இந்த உணர் கருவி விளக்குகள் அமைக்கப்படுகின்றன என நிலப் போக்குவரத்து ஆணையம் ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்சிடம் அக்டோபர் 2ஆம் தேதி தெரிவித்தது.

மேலும், செயல்பாட்டுத் தேவைகள், சோதனையின் முடிவுகள் ஆகியவற்றைப் பொறுத்தே அத்திட்டத்தின் விரிவாக்கம் அமையும் என்றும் அது கூறியது.

தானியக்கமாக்க முறையில் தூய்மை, சுற்றுக்காவல், உணவு விநியோகம் ஆகிய பணிகளில் இயந்திர மனிதர்களை ஈடுபடுத்த அரசாங்கம் திட்டமிட்டது.

அதைச் செயல்படுத்த எட்டு நிறுவனங்களுடன் இணைந்து பணியாற்றவுள்ளதாக அது மே மாதம் அறிவித்தது.

கிராப், டிஎச்எல், செர்ட்டிஸ், குவிக்பாட், ஃபீல்ட்ஏஐ, தாட்பார்க்ஸ் உள்ளிட்ட நிறுவனங்களுடன் இயந்திர மனிதத் தயாரிப்பு நிறுவனங்களான ஸ்லாம்டெக், யூனிட்ரீ ஆகியவையும் அதில் அடங்கும்.

2026ஆம் ஆண்டின் இறுதிக்குள் இயந்திர மனிதர்களை மேற்குறிப்பிட்ட பணிகளில் ஈடுபடுத்துவதற்கான சோதனையோட்டம் தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

குறிப்புச் சொற்கள்