சித்தார்த் பிள்ளை
சிங்கப்பூரின் உயர்கல்வியில் செயற்கை நுண்ணறிவுப் பயன்பாட்டை வழிநடத்த புதிய சிறப்புக் குழு அமைக்கப்பட்டுள்ளது.
அந்தக் குழுவிற்குக் கல்வி அமைச்சர் டெஸ்மண்ட் லீ தலைமைதாங்குகிறார்.
‘தி ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் கல்விக் கருத்தரங்கு 2026’ புதன்கிழமை (ஏப்ரல் 1) சிங்கப்பூர் நிர்வாகப் பல்கலைக்கழகத்தின் யாங் புங் ஹாவ் சட்டப்பள்ளியில் நடைபெற்றது.
‘தி ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்’ நாளிதழும் சிங்கப்பூர் நிர்வாகப் பல்கலைக்கழகமும் இணைந்து அந்தக் கருத்தரங்கை நடத்தின.
“உயர்கல்வியில் செயற்கை நுண்ணறிவு: மிகைப்படுத்தப்பட்டதா நம்பிக்கையா?” என்பதே அக்கருத்தரங்கின் கருப்பொருள்.
கருத்தரங்கில் சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்டு உரையாற்றிய அமைச்சர் டெஸ்மண்ட் லீ, புதிய சிறப்புக் குழு பற்றி அறிவித்தார்.
உயர்கல்வியில் செயற்கை நுண்ணறிவுக்கான அந்தப் புதிய சிறப்புக் குழுவில், கல்விக்கான மூத்த துணை அமைச்சர் டாக்டர் ஜனில் புதுச்சேரி இடம்பெறுவார்.
தொடர்புடைய செய்திகள்
மேலும், தன்னாட்சிப் பல்கலைக்கழகங்களின் தலைவர்களும் பலதுறைத் தொழிற்கல்லூரிகள், தொழில்நுட்பக் கல்விக்கழகங்கள் ஆகியவற்றின் தலைமையாசிரியர்களும் அதில் அங்கம் வகிப்பார்கள்.
அனைத்து உயர்கல்வி நிலையங்களுக்கும் இடையே உத்திபூர்வ வழிகாட்டுதலை வழங்கவும் ஒத்துழைப்பை வலுப்படுத்துவதுமே அக்குழுவின் முக்கிய நோக்கங்களாகும்.
மேலும், சிங்கப்பூரைச் செயற்கை நுண்ணறிவுத் துறையில் உலகளவில் முன்னிலைப்படுத்த பிரதமர் லாரன்ஸ் வோங் வைத்திருக்கும் தேசிய இலக்கிற்கும் இக்குழு பெரும் துணையாக இருக்கும் என்று அமைச்சர் லீ பெருமையுடன் கூறினார்.
மாணவர்கள் செயற்கை நுண்ணறிவை ஒரு குறுக்குவழியாகப் பயன்படுத்தக் கூடாது என்று அமைச்சர் தமது உரையில் எச்சரித்தார். அவ்வாறு செய்தால், சிந்திக்கும் திறன் பாதிக்கப்பட்டு, கல்வியின் நோக்கத்தையே அது சிதைத்துவிடும் என்றார் அவர்.
மாறாக, கல்வியை மேம்படுத்தும் ஓர் உந்துசக்தியாகச் செயற்கை நுண்ணறிவைப் பயன்படுத்த வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார்.
இதற்கிடையே, முன்னாள் மாணவர்களுக்குத் தேர்ந்தெடுக்கப்பட்ட செயற்கை நுண்ணறிவுப் பாடத்திட்டங்களுக்குச் சிறப்புச் சலுகையாக ஓராண்டுக்குக் கட்டணக் கழிவுகள் வழங்கப்படும் என்று திரு லீ அறிவித்தார்.
செயற்கை நுண்ணறிவின் பயன்பாடு அதிகரித்துவரும் நிலையில், மாணவர்களை அவர்களின் முதல் வேலைக்கும், எதிர்காலப் பணி மாற்றங்களுக்கும் எவ்வாறு தயார்படுத்திக்கொள்வது என்பது குறித்து கருத்தரங்கில் ஆழமாகக் கலந்துரையாடப்பட்டது.
பல்கலைக்கழக வளாகங்களில் மாணவர்களின் கற்றல் அனுபவத்தை மேம்படுத்தவும் கல்வி வாய்ப்புகள் அனைவருக்கும் சமமாகக் கிடைப்பதை உறுதிசெய்யவும் செயற்கை நுண்ணறிவு எவ்வாறு உதவும் என்பது குறித்தும் விரிவாக ஆராயப்பட்டது.
நிகழ்ச்சியின் தொடக்கத்தில், ‘தி ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்’ நாளிதழின் இணை ஆசிரியர் கரம்ஜித் கோர் வரவேற்புரை ஆற்றினார்.
அதனைத் தொடர்ந்து, நாளிதழின் மற்றோர் இணை ஆசிரியரான ஜெரெமி அவ் யோங் பங்கேற்பாளர்களுக்காக ‘பொட் ஆர் நொட்’ (Bot or Not) எனும் சுவாரசியமான கேள்வி–பதில் அங்கத்தை நடத்தினார்.
திரையில் காட்டப்பட்ட படங்கள் செயற்கை நுண்ணறிவால் உருவாக்கப்பட்டவையா நிஜமானவையா எனப் பங்கேற்பாளர்களைச் சிந்திக்கவைக்கும் வகையில் அந்த அங்கம் அமைந்திருந்தது.
நிகழ்ச்சியின் முத்தாய்ப்பாகச் சிறப்பு கலந்துரையாடல் ஒன்று நடைபெற்றது.
அதில், கல்வி அமைச்சர் டெஸ்மண்ட் லீ, ‘ஓப்பன் ஏஐ’ நிறுவனத்தின் ஆசிய-பசிபிக் கல்விப்பிரிவுத் தலைவர் ராகவ் குப்தா, சிங்கப்பூர் நிர்வாகப் பல்கலைக்கழகத்தின் பேராசிரியர் ஆலன் சான் ஆகியோர் பேச்சாளர்களாகப் பங்கேற்றனர்.
சிங்கப்பூர் நிர்வாகப் பல்கலைக்கழகத்தின் பேராசிரியர் லிம் சன் சன் அச்சிறப்புக் கலந்துரையாடலை வழிநடத்தினார்.
கல்வித்துறையைச் செயற்கை நுண்ணறிவு எவ்வாறு மறுசீரமைக்கிறது என்பது குறித்து பல்வேறு கோணங்களில் நிபுணர்கள் தங்களின் ஆழமான கருத்துகளைப் பகிர்ந்துகொண்டனர்.
இந்நிலையில், அரசாங்கம், கல்வி நிலையங்கள், தொழில்துறையினர், ஆசிரியர்கள், மாணவர்கள் என அனைத்துத் தரப்பினரும் ஒன்றிணைந்துச் செயல்படவேண்டும் என்று அமைச்சர் லீ கேட்டுக்கொண்டார்.
அப்போதுதான், உலகளாவிய செயற்கை நுண்ணறிவு வளர்ச்சியில் சிங்கப்பூரால் தொடர்ந்து முன்னணி வகிக்கமுடியும் என்றார் அவர்.

