ஆசிய எதிர்கால உச்சநிலை மாநாடு 2026: புதிய உலகளாவிய சூழலில் ஆசியாவின் பங்கு

ஆசிய எதிர்கால உச்சநிலை மாநாடு 2026: புதிய உலகளாவிய சூழலில் ஆசியாவின் பங்கு

படம்: எஸ்பிஎச் மீடியா

12 Nov 2026 - 5:29 am

3 mins read

அதிகரித்து வரும் உலகளாவிய நிச்சயமற்ற சூழலுக்கு மத்தியில் ஆசியாவின் மாறிவரும் பங்கை ஆராய ஆசிய எதிர்கால உச்சநிலை மாநாடு 2026 மீண்டும் நடைபெறவுள்ளது.

வட்டாரத்தின் கொள்கை வகுப்பாளர்கள், வர்த்தகத் தலைவர்கள், துறைசார் நிபுணர்களை ஒன்றிணைக்கும் இந்த மாநாடு வெள்ளிக்கிழமை (நவம்பர் 27) மரினா பே சேண்ட்ஸ் கண்காட்சி, மாநாட்டு மையத்தில் இடம்பெறும்.

ஐந்தாவது ஆண்டாக நடைபெறும் இந்த மாநாட்டை எஸ்பிஎச் மீடியா நிறுவனத்தின் முன்னணி ஊடகங்களான ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ், பிஸ்னஸ் டைம்ஸ், சாவ்பாவ், பெரித்தா ஹரியான், தமிழ் முரசு ஆகியவை முதன்முறையாக ஒன்றிணைந்து வழங்குகின்றன.

இம்மாநாட்டில் துணைப் பிரதமரும் எரிசக்தி, வர்த்தக, தொழில்துறை (வர்த்தகம்) அமைச்சருமான கான் கிம் யோங் சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்டு தொடக்க உரையாற்றுவார். அதோடு அவர் சிறப்புக் கலந்துரையாடல் ஒன்றிலும் பங்கேற்கவுள்ளார். மாநாட்டின் நிறைவுக் கலந்துரையாடலை வெளியுறவு அமைச்சர் விவியன் பாலகிருஷ்ணன் வழிநடத்துவார்.

‘எழுச்சிபெறும் ஆசியா: புதிய உலகளாவிய ஒழுங்கில் வட்டாரத்தின் பங்கை வடிவமைத்தல்’ (Asia Ascendant: Shaping the region’s role in a new global order) என்பது இவ்வாண்டின் கருப்பொருளாகும். 2027ல் ஆசியானின் 60வது ஆண்டு நிறைவை முன்னிட்டு அதன் தலைமைப் பொறுப்பை சிங்கப்பூர் ஏற்கவிருக்கும் நிலையில் இந்த மாநாடு கூடுதல் முக்கியத்துவம் பெறுகிறது.

நாள் முழுவதும் நடைபெறும் இந்த உச்சநிலை மாநாடு பொருளியல், தொழில்நுட்பம், புவிசார் அரசியல் ஆகிய மூன்று முக்கியக் களங்களில் கவனம் செலுத்தும்.

பொருளியல் விவாதங்களில் உலகளாவிய விநியோகத் தொடர் மறுசீரமைப்பு, பொருளியல் மந்தநிலை, அதிகரித்து வரும் வளத் தேசியவாதம் ஆகியவற்றுக்கு ஆசிய நாடுகள் எவ்வாறு பதிலளிக்க வேண்டும் என்பது ஆராயப்படும்.

தொழில்நுட்பத் துறையைப் பொறுத்தவரை, செயற்கை நுண்ணறிவின் எதிர்காலத்தை ஆசியா எவ்வாறு தீர்மானிக்கப் போகிறது என்பதும் வேகமான புத்தாக்கத்திற்கு நடுவே மக்கள் நம்பிக்கையைச் சமநிலையில் பேண வேண்டியதன் அவசியமும் விவாதிக்கப்படும்.

புவிசார் அரசியல் களத்தில், பெரிய வல்லரசுகளுக்கு இடையிலான போட்டிகளுக்கு நடுவே நடுத்தர நாடுகள் எவ்வாறு செயல்படுவது, பலதரப்பு அமைப்புகள் பலவீனமடைந்து வரும் சூழலில் வட்டார நிலைத்தன்மை எவ்வாறு உறுதி செய்வது போன்ற விரிவான பார்வைகள் முன்வைக்கப்படும்.

மலேசியப் பொருளியல் அமைச்சர் அக்மல் நசீர், இந்திய அரசின் தலைமைப் பொருளியல் ஆலோசகர் வி. அனந்த நாகேஸ்வரன், ஓசிபிசி குழுமத் தலைமை நிர்வாக அதிகாரி டான் டெக் லோங் உள்ளிட்ட பல முக்கியப் பேச்சாளர்கள் இம்மாநாட்டில் பங்கேற்கவுள்ளனர். அவர்களுடன் பல்வேறு பன்னாட்டு நிறுவனங்களின் தலைவர்கள், முன்னணி ஆய்வாளர்கள், கல்வியாளர்களும் கலந்துகொள்ளவுள்ளனர்.

தேசிய, வட்டார முக்கியத்துவம் வாய்ந்த விவகாரங்கள் குறித்துப் பொதுமக்களிடையே ஆக்கபூர்வமான விவாதங்களை உருவாக்குவது எஸ்பிஎச் மீடியாவின் பொறுப்பு என அதன் நிர்வாகத் தலைவர் சான் யெங் கிட் தெரிவித்தார்.

நிறுவனத்தின் ஐந்து முக்கியச் செய்தி வெளியீடுகளின் கூட்டு வலிமையைப் பயன்படுத்துவதன் மூலம் பலதரப்பட்ட கண்ணோட்டங்களை இணைத்து வட்டாரத்தின் எதிர்காலத்தை வடிவமைக்கும் உரையாடல்களை மேலும் ஆழப்படுத்த முடியும் என்று அவர் குறிப்பிட்டார்.

அழைப்பின் பேரில் மட்டுமே கலந்துகொள்ளக்கூடிய இந்நிகழ்ச்சிக்கு ஓசிபிசி வங்கி முதன்மை ஆதரவாளராகச் செயல்படுகிறது. அமேசான் வெப் சர்வீசஸ் அதிகாரபூர்வ ‘கிளவுட்’ பங்காளியாகவும் மரினா பே சேண்ட்ஸ் அதிகாரபூர்வ இடவசதி பங்காளியாகவும் இணைந்துள்ளன.

குறிப்புச் சொற்கள்