ஆஸ்திரேலியப் பிரதமர் ஆண்டனி அல்பனிஸ் வியாழக்கிழமை (ஏப்ரல் 9) சிங்கப்பூருக்கு அதிகாரத்துவ வருகையளித்தார். ஏப்ரல் 11ஆம் தேதிவரை அவர் இங்கு இருப்பார் என்று வெளியுறவு அமைச்சு தெரிவித்துள்ளது.
திரு அல்பனிஸ் ஜூரோங் தீவில் உள்ள சிங்கப்பூரின் எண்ணெய், எரிசக்தி வசதிகளையும் பார்வையிடவிருக்கிறார்.
சிங்கப்பூர்ப் பிரதமரும் நிதியமைச்சருமான லாரன்ஸ் வோங், ஏப்ரல் 10ஆம் தேதி திரு அல்பனிசுக்கு விருந்தளிப்பார்.
ஜூரோங் தீவில், சிங்கப்பூரின் திரவ இயற்கை எரிவாயு ஆலையையும் சிங்கப்பூரின் சுத்திகரிப்பு நிறுவனத்தையும் திரு அல்பனிஸ் காணவிருக்கிறார்.
திரவ இயற்கை எரிவாயு, பெட்ரோலிய எண்ணெய், டீசல் ஆகியவற்றின் பரிமாற்றம் இருநாடுகளுக்கும் இடையே தடையின்றி மேற்கொள்ள சிங்கப்பூரும் ஆஸ்திரேலியாவும் கடந்த மார்ச் மாதம் ஒப்பந்தம் செய்துகொண்டன.
தொலைபேசியில் இருநாடுகளும் ஒருங்கிணைந்த அறிக்கையை வெளியிட்ட பிறகு, மத்திய கிழக்கு நிலவரம் குறித்தும் வட்டாரத்துக்கு அதனால் ஏற்படக்கூடிய விளைவு குறித்தும் இருநாட்டுத் தலைவர்களும் கவலை தெரிவித்தனர்.
கடந்த ஆண்டு அக்டோபரில் சிங்கப்பூரும் ஆஸ்திரேலியாவும் விரிவான உத்திபூர்வப் பங்காளித்துவம் 2.0 உடன்பாட்டில் கையெழுத்திட்டன. அதன் அடிப்படையில் முக்கியப் பொருள்களின் விநியோகத்தைச் சிங்கப்பூரும் ஆஸ்திரேலியாவும் துரிதப்படுத்தும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
எதிர்காலத்தில் சட்டரீதியான ஒப்பந்தம் குறித்து ஆலோசிப்பதாகவும் இருநாடுகளும் குறிப்பிட்டன. இருதரப்புக் கலந்துரையாடல்கள், ஏற்பாடுகள் ஆகியவை அவற்றுள் அடங்கும்.
தொடர்புடைய செய்திகள்
சிங்கப்பூருக்கும் ஆஸ்திரேலியாவுக்கும் இடையிலான தலைசிறந்த இருதரப்பு உறவைத் திரு அல்பனிசின் வருகை பறைசாற்றுவதாகச் சிங்கப்பூர் வெளியுறவு அமைச்சு சொன்னது.
சிங்கப்பூருக்கும் ஆஸ்திரேலியாவுக்கும் இடையே குறிப்பிடத்தக்க எரிசக்தி வர்த்தகம் உள்ளது.
சிங்கப்பூருக்கான திரவ இயற்கை எரிவாயுவை விநியோகம் செய்யும் முக்கிய நாடுகளில் ஒன்றான ஆஸ்திரேலியாவுடன் ஒத்துழைப்பை இன்னும் வலுப்படுத்திக்கொள்ள இருப்பதாகப் பிரதமர் வோங் இதற்குமுன் கூறியிருந்தார்.
ஆஸ்திரேலியாவின் எண்ணெய் தேவைகளைப் பூர்த்திசெய்வதில் சிங்கப்பூரும் முக்கியப் பங்கு வகிக்கிறது.

