ஆண்டுக்கு 60 மணிநேரம் பணிச்சுமையைக் குறைக்கும் புத்தாக்கத்துக்கு விருது

3 mins read
08b2262c-f5d2-40b1-aaa5-83359c949939
அமைச்சரின் புத்தாக்க விருதைப் பெற்ற பெய் ஹுவா உயர்நிலைப்பள்ளி ஆசிரியர்கள் ஷாலினி தாஷ்னாமூர்த்தியும் இயோ வெய் கியாங் கென்னத்தும். - படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

பெய் ஹுவா உயர்நிலைப்பள்ளியில் பெற்றோர்-ஆசிரியர் சந்திப்புக்கான திட்டமிடுதலை ஒரு மின்னிலக்க அட்டவணை (ஸ்பிரெட்ஷீட்) முற்றிலும் மாற்றியமைத்துள்ளது.

பள்ளி மாணவர்கள் அனைவரின் தரவுகளையும் ஒருங்கிணைத்து எளிதாக அணுகக்கூடிய ஒரு தனிப்பட்ட கருவியாகத் திகழ்கிறது இந்த ‘முழுமையான மாணவர் வளர்ச்சி டேஷ்போர்டு’.

2018ஆம் ஆண்டு அப்பள்ளியின் தனிப்பட்ட, அழகியல் மேம்பாட்டுத் துறைத் தலைவர் (Subject Head of Personal and Aesthetic Development) கென்னத் யியோ வெய் கியாங் இந்தக் கருவியின் முதல் மாதிரியை உருவாக்கினார்.

முன்னாள் கணக்காய்வாளராக இருந்தபோது கற்றுக்கொண்ட அடிப்படை ‘மைக்ரோசாஃப்ட் எக்செல்’ திறன்களைப் பயன்படுத்தி, தம் வகுப்பு தேவைக்காக இதை உருவாக்கியதாக அவர் கூறினார்.

அப்பள்ளியின் தகவல் தொடர்பு தொழில்நுட்பத் துறைத் தலைவர் ஷாலினி தாஷ்னாமூர்த்தியின் ஆதரவுடன், இந்த ‘ஸ்பிரெட்ஷீட்’ தற்போது பள்ளியின் 88 ஆசிரியர்களாலும் பயன்படுத்தப்படும் ஒரு முழுமையான மின்னிலக்கக் கருவியாக மேம்படுத்தப்பட்டுள்ளது.

“வகுப்பு ஆசிரியர்களுக்குத் தேவையான அனைத்தையும் ஒரே இடத்தில் வழங்கும் ஓர் ஒருங்கிணைந்த தளத்தை உருவாக்குவதே எங்கள் நோக்கம். கல்வி அமைச்சு தகவல்கள், தேர்வு முடிவுகள், ஆசிரியர்களின் கருத்துகள், இணைப்பாட நடவடிக்கைப் பதிவுகள், பள்ளிக்குப் பிந்தைய கல்வி வாய்ப்புகள் போன்ற அனைத்தும் இதில் உள்ளடக்கப்பட்டுள்ளன.

“ஆசிரியர்களின் நிர்வாகச் சுமையைக் குறைத்து, மாணவர்களுடனும் பெற்றோருடனும் அர்த்தமுள்ள உரையாடல்களில் அவர்கள் ஈடுபட்டு, கவனம் செலுத்த இது உதவுகிறது,” என்றார் குமாரி ‌‌‌ஷாலினி.

இந்தக் கருவி, பெற்றோர் ஈடுபாட்டை மேம்படுத்துவதோடு, ஒவ்வோர் ஆசிரியருக்கும் ஆண்டிற்கு கிட்டத்தட்ட 60 மணிநேர நிர்வாகச் செயல்பாடுகளை மிச்சப்படுத்துகிறது.

ஆசிரியர்களின் பின்னூட்டத்தின் அடிப்படையில், குறிப்புகளுக்கான சரிபார்ப்புப் பட்டியல், தரவுகளைப் படங்களின்வழி காட்சிப்படுத்தல் போன்ற அம்சங்கள் இணைக்கப்பட்டு, இந்தக் கருவி மேலும் வசதியான அனுபவத்தைப் பயனாளர்களுக்கு வழங்கும் விதத்தில் மேம்படுத்தப்பட்டுள்ளது.

தொடர்ச்சியான மேம்பாடுகளுடன், இக்கருவியை பிற பள்ளிகளுடன் பகிரும் பணியும் நடைபெற்று வருகிறது.

“மாணவர்களின் ஆக்ககரமான வளர்ச்சிக்கும் சுயமாக இலக்கு நிர்ணயிப்பதை ஆதரிப்பதற்கும் மாணவர்கள் பயன்படுத்தக்கூடிய கருவியாக இதை எவ்வாறு மேம்படுத்தலாம் என்பதை நாங்கள் தற்போது ஆராய்ந்து வருகிறோம்,” என்று குமாரி ‌‌‌ஷாலினி கூறினார்.

இந்தப் புதுமை முயற்சி, பெய் ஹுவா உயர்நிலைப்பள்ளிக்கு ‘ஆசிரியர்கள் மாநாடு, எக்‌செல் ஃபெஸ்ட் 2025’ நிகழ்ச்சியில் அமைச்சரின் புத்தாக்க விருதைப் பெற்று தந்தது.

ஈராண்டுகளுக்கு ஒருமுறை நடைபெறும் இம்மாநாடு, சிங்கப்பூர் எக்ஸ்போவில் செவ்வாய்க்கிழமை (ஜூன் 3) தொடங்கி வியாழக்கிழமை (ஜூன் 5) வரை கல்வி தொடர்பான பலதரப்பட்ட கற்றல், கற்பித்தல், அனுபவ பகிர்வுகளுடன் நடைபெறுகிறது.

ஆசிரியர்கள் மாநாடு, எக்‌செல் ஃபெஸ்ட் 2025 இவ்வாண்டு செவ்வாய்க்கிழமை (ஜூன் 3) தொடங்கி வியாழக்கிழமை (ஜூன் 5) வரை நடைபெறுகிறது.
ஆசிரியர்கள் மாநாடு, எக்‌செல் ஃபெஸ்ட் 2025 இவ்வாண்டு செவ்வாய்க்கிழமை (ஜூன் 3) தொடங்கி வியாழக்கிழமை (ஜூன் 5) வரை நடைபெறுகிறது. - படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

இவ்வாண்டு, மொத்தம் 18,000க்கும் மேற்பட்ட கல்வியாளர்கள் இதில் பங்கேற்பர் என எதிர்பார்க்கப்படுகிறது. முதன்முறையாக, சிறப்புக் கல்வி பள்ளிகளின் ஆசிரியர்களும் இதில் பங்கேற்கின்றனர்.

‘எதிர்காலத்திற்கு மாணவர்களைத் தயார்ப்படுத்துதல்’ என்ற கருப்பொருளுடன் இந்த நிகழ்ச்சி கல்வித்துறையில் புதுமையின் அவசியத்தையும் மாறிவரும் உலகில் மாணவர்களுக்குத் தேவையான திறன்களை வழங்குவதின் முக்கியத்துவத்தையும் வலியுறுத்துகிறது.

கல்வி அமைச்சர் டெஸ்மண்ட் லீ தொடக்க நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்டு, மூன்று முக்கியப் பிரிவுகளில் தலைசிறந்த ஆசிரியர்களுக்கு விருதுகளை வழங்கினார்.

அமைப்பு அளவிலான பெரிய தாக்கத்தை ஏற்படுத்திய 11 திட்டங்களுக்கு அமைச்சரின் புதுமை விருது வழங்கப்பட்டது.

புத்தாக்கத்தின்வழி பணியிடச் செயல்முறைகளுக்கு குறிப்பிடத்தக்க நன்மைகளைக் கொண்டு வந்த 24 குழுக்களுக்கு கல்வி அமைச்சு ‘இன்னர்ஜி’ விருது (தங்கம்) வழங்கப்பட்டது.

மேலும், கல்வி அமைச்சு சிறந்த புத்தாக்கத் திறனாளர் விருது கல்வித்துறையில் மாற்றத்தை ஊக்குவித்த 37 ஆசிரியர்களுக்கு வழங்கப்பட்டது.

மாநாட்டின் முதல் நாளன்று கற்றல் அறிவியலில் உலகப் புகழ்பெற்ற சிந்தனையாளரான பேராசிரியர் மனு கபூர் முத்தாய்ப்பு உரையை ஆற்றினார்.

அத்துடன், முதன்மை ஆசிரியர்களால் வழிநடத்தப்பட்ட ‘சமையலறையில் இடைதுறை அறிவியல்’, ‘கவனத்தை வளர்ப்பதன்மூலம் மாணவர்களை மேம்படுத்தும் உத்திகள்’ போன்ற தலைப்புகளில் சிறப்புக் கருத்தரங்குகளும் நடைபெற்றன.

குறிப்புச் சொற்கள்