கூடைப்பந்துப் பயிற்றுவிப்பாளர் ஒருவர், ‘டிஎஸ்ஏ’ எனப்படும் நேரடி மாணவர் சேர்க்கைத் திட்டத்தின் மூலம் சிறந்த உயர்நிலைப் பள்ளிகளில் பிள்ளைகளைச் சேர்க்க அவர்களின் பெற்றோரிடம் பணம் வாங்கியதாகக் கூறப்படுவது குறித்து லஞ்ச, ஊழல் புலனாய்வுப் பிரிவு (சிபிஐபி) விசாரணை மேற்கொண்டுள்ளது.
தனது தொடர்புகளைப் பயன்படுத்தி அவர் புகழ்பெற்ற பள்ளிகளில் மாணவர்களைச் சேர்த்ததாகக் கூறப்படுவதாக ஷின் மின் நாளேடு ஜூலை 24ஆம் தேதி தகவல் வெளியிட்டிருந்தது.
தொடக்கப்பள்ளி 6ஆம் வகுப்பு மாணவர்கள், தொடக்க நிலை இறுதித் தேர்வுகளை எழுதுவதற்கு முன்பாகவே விளையாட்டு, கலை போன்ற கல்வி சாராத் திறன்களில் அடைந்த சிறப்பின் அடிப்படையில் உயர் நிலைப் பள்ளிகளில் சேர்க்கையை உறுதிசெய்துகொள்ள ‘டிஎஸ்ஏ’ திட்டம் உதவும்.
பயிற்றுவிப்பாளர் மீதான விசாரணை குறித்து அறிந்திருப்பதாக ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்சின் கேள்விக்கு ஜூலை 25ஆம் தேதி அளித்த பதிலில் கல்வி அமைச்சு குறிப்பிட்டது.
2024ஆம் ஆண்டு ஏப்ரல் முதல் அந்தப் பயிற்றுவிப்பாளரின் பதிவு நீக்கப்பட்டிருப்பதாகவும் அமைச்சின் பள்ளி எதிலும் தற்போது அவர் பணியில் இல்லை என்றும் அது கூறியது.
“இத்தகைய புகார்களைக் கல்வி அமைச்சு கடுமையாகக் கருதுகிறது. நேரடி மாணவர் சேர்க்கைத் திட்டத்தின் தெரிவுமுறை அமைச்சு அதற்காக வரையறுத்த வழிகாட்டிக் குறிப்புகளுக்கு ஏற்ப அமைந்திருப்பதை உறுதிப்படுத்த விசாரணை மேற்கொள்ளப்படும்,” என்றும் கல்வி அமைச்சு கூறியது.
நியாயமான முறையிலும் அனைத்து மாணவர்களும் அணுக இயலும் வகையிலும் ‘டிஎஸ்ஏ’ தெரிவுமுறை அமைந்திருப்பதை அமைச்சு தொடர்ந்து உறுதிசெய்யும் என்று கூறப்பட்டது.
தொடர்புடைய செய்திகள்
சில தொடக்கப் பள்ளிகளில் கூடைப்பந்துப் பயிற்றுவிப்பாளராகக் கூறப்படும் திரு லின் என்பவர் குறித்து பொதுமக்களில் ஒருவரான திரு டான் என்பவர் தகவல் தந்ததாக ஷின் மின் நாளேடு கூறியது.
அந்தப் பயிற்றுவிப்பாளர், ஒவ்வொரு மாணவர் சேர்க்கைக்கும் $45,000 முதல் $50,000 வரை பெற்றோரிடம் வாங்கிக்கொண்டதாக திரு டான் கூறினார். ஆனால் எந்தெந்தப் பள்ளிகளில் அந்த மாணவர்களை அவர் சேர்த்தார் என்ற தகவல் தெளிவாகத் தெரியவில்லை.
ரகசியம் காக்கும் பொருட்டு, ஊழல் விசாரணை குறித்துத் தகவல் தர இயலாது என்று லஞ்ச, ஊழல் புலனாய்வுப் பிரிவு கூறியுள்ளது.

