மின்சாரப் பேருந்து மின்கலன் தீப்பற்றல்

மின்சாரப் பேருந்து மின்கலன் தீப்பற்றல்

2 mins read
77a93e68-30dc-4673-9bb9-ab81143b2b8e
சம்பவம் சின் மிங் தொழில்துறை வட்டாரத்தில் நிகழ்ந்தது. - படம்: சாவ்பாவ்

சின் மிங் தொழில்துறை வட்டாரத்தில், டவர் டிரான்சிட் நிறுவனத்தின் மின்சாரப் பேருந்து ஒன்றின் மின்கலன் புதன்கிழமை (மார்ச் 25) தீப்பிடித்துக்கொண்டது.

அச்சம்பவம் குறித்து நிலப் போக்குவரத்து ஆணையம் விசாரணை நடத்தவுள்ளது. சம்பவம் நிகழ்ந்தபோது சம்பந்தப்பட்ட லித்தியம்-ஐயோன் மின்கலன் அந்த யுத்தோங் மின்சாரப் பேருந்திலிருந்து அகற்றப்பட்டதாக ஆணையம், ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்சிடம் தெரிவித்தது. சம்பந்தப்பட்ட பேருந்து சேதத்துக்கு உள்ளாகவில்லை என்று டவர் டிரான்சிட் பேச்சாளர் கூறினார்.

160 சின் மிங் டிரைவில் அமைந்திருக்கும் யுத்தோங் பேருந்துகளுக்கான பழுதுபார்ப்பு நிலையத்தில் இச்சம்பவம் நிகழ்ந்தது. யுத்தோங் நிறுவனம் பழுதுபார்ப்புப் பணிகளை மேற்கொண்டபோது தீ மூண்டது.

நிலப் போக்குவரத்து ஆணையம், யுத்தோங்குடன் இணைந்து விசாரணை மேற்கொள்ளும் என்று டவர் டிரான்சிட் சிங்கப்பூரும் மின்கலன் உற்பத்தி நிறுவனமான சிஏடிஎல்லும் தெரிவித்தன.

புதன்கிழமை பிற்பகல் 12.50 மணியளவில் தீ குறித்து தங்களுக்குத் தகவல் கிடைத்ததாக சிங்கப்பூர் குடிமைத் தற்காப்புப் படை, ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்சிடம் தெரிவித்தது.

தொழில்துறைக் கட்டடத்தின் கீழ்த்தளத்தில் பழுதுபார்ப்புக் கூடம் அமைந்துள்ளது. அதன் கீழ்த்தளத்தில் தீ மூண்டது. தண்ணீரைப் பீய்ச்சியடிக்கும் குழாய்கள் இரண்டைக் கொண்டு தீ அணைக்கப்பட்டது.

யாருக்கும் காயம் ஏற்பட்டதாகத் தகவல் இல்லை என்று சிங்கப்பூர் குடிமைத் தற்காப்புப் படைப் பேச்சாளர் ஒருவர் தெரிவித்தார். தீ மூண்டதற்கான காரணத்தை அறிய விசாரணை தொடர்கிறது.

சிங்கப்பூரில் இயங்கும் பொதுப் பேருந்துகளில் 20 யுத்தோங் மின்சாரப் பேருந்துகளும் அடங்கும். கூடுதல் எண்ணிக்கையில் மின்சாரப் பேருந்துகளைக் களமிறக்க சிங்கப்பூர் எடுத்துவரும் முயற்சிகளின் ஓர் அங்கமாக, இவ்வாண்டு இறுதிக்குள் மேலும் 100 யுத்தோங் பேருந்துகள் சேர்க்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

நிலப் போக்குவரத்துச் சேவைகளிடையே கரிமப் பயன்பாட்டைக் குறைக்க சிங்கப்பூர் முயற்சி எடுத்து வருகிறது.

கடந்த பிப்ரவரி மாத இறுதி நிலவரப்படி சிங்கப்பூரில் மொத்தம் 18,371 பொதுப் பேருந்துகளும் தனியார் பேருந்துகளும் செயல்பாட்டில் உள்ளன. அவற்றில் 830 பேருந்துகள் மின்சாரப் பேருந்துகளாகும்.

குறிப்புச் சொற்கள்