இரண்டாம் உலகப் போருக்குமுன் கட்டப்பட்ட ஆடம் பார்க் 19ஆம் பங்களாக்களுக்கும் சிங்கப்பூரின் ஆகப் பழைமையான சீனக் கோயில்களில் ஒன்றும் பாதுகாக்கப்பட வேண்டிய கட்டடங்களாக அடையாளம் காணப்பட்டுள்ளன.
இந்த வீடுகளும் சீனக் கோயிலும் நகர மறுசீரமைப்பு ஆணையத்தின் 2025ஆம் ஆண்டுக்கான நகல் பெருந்திட்டத்தின்கீழ் பாதுகாக்கப்பட வேண்டியவையாக அடையாளம் காணப்பட்டதாக தேசிய வளர்ச்சி அமைச்சர் டெஸ்மண்ட் லீ, வெள்ளிக்கிழமை (நவம்பர் 8) கூறினார். அத்திட்டம் அடுத்த ஆண்டு ஜூன் மாதம் வெளியிடப்படும்.
சிங்கப்பூரின் அடுத்த 10 முதல் 15 ஆண்டுகளுக்கான மேம்பாட்டுக்கு, ஆணையத்தின் இந்த நிலப் பயன்பாட்டுத் திட்டம் வழிகாட்டும்.
ஆணையத்தின் இந்த ஆண்டுக்கான மரபுடைமை விருது நிகழ்ச்சியில் பேசிய அமைச்சர்,1920களின் பிற்பகுதியில் எஸ்ஐடி எனப்படும் சிங்கப்பூர் இம்புரூவ்மண்ட் டிரஸ்டினால் (SIT) கட்டப்பட்ட அந்த பங்களாக்கள், அதுபோன்ற வீட்டு மாதிரிகளுக்கு ஒரு நல்ல அடையாளமாகத் திகழும் என்று கூறினார்.
ஆடம் பார்க்கில் இரண்டாம் உலகப் போருக்குமுன் 1929ஆம் ஆண்டு கட்டப்பட்ட அந்த பங்களாக்களும் அதன் சுற்றுப்புறமும் இன்னமும் நல்லநிலையில் அப்படியே உள்ளன.
புலம்பெயர்ந்த கேன்டனிஸ் பிரிவினரால் 1860ஆம் ஆண்டு நிறுவப்பட்டது மன் சான் ஃபூக் டக் சீ கோயில். அதன் அறங்காவலர்கள் 1902ஆம் ஆண்டு காலாங் ஆற்றின் கரையில் அக்கோயிலைக் கட்டுவதற்கான நிலத்தை வாங்கிய பிறகு சிம்ஸ் டிரைவிற்கு அது இடமாறியது.
அரசாங்கம், கட்டடங்களையும் கட்டமைப்புகளையும் பாதுகாத்தாலும், அவற்றின் செயல்பாடுகள் “தற்போதைய, எதிர்கால சந்ததியினரின் தேவைகளுக்கு ஏற்ப சேவை ஆற்றக்கூடியதாக தொடர்ந்து மேம்பாடு காண்பதை,” உறுதிப்படுத்தும் என்று அமைச்சர் டான் கூறினார்.
அத்தகைய மரபுடைமை பகுதிகளின் “முக்கியக் கதைகளையும் மரபுகளையும்” சிறப்பாக மேம்படுத்துவது, பராமரிப்பது, வெளிப்படுத்துவது குறித்து அதிகாரிகள் தொடர்ந்து ஆய்வு செய்வார்கள் என்றும் அவர் குறிப்பிட்டார்.
தொடர்புடைய செய்திகள்
அத்தகைய சொத்துக்களைப் பாதுகாப்பது சிங்கப்பூர் தேசிய அடையாளத்தை வலுப்படுத்தவும் உதவுகிறது என்று அமைச்சர் டெஸ்மண்ட் லீ கூறினார்.
பாதுகாக்கப்பட வேண்டியவையாக அடையாளம் காணப்பட்ட கட்டடங்கள் குறித்து நகர மறுசீரமைப்பு ஆணையமும் வெள்ளிக்கிழமை (நவம்பர் 8) அறிவித்தது.
பாதுகாக்கப்படும் கட்டடங்களாக அறிவிக்கப்பட்டால், அவற்றில் மாற்றம் செய்வதற்குமுன் ஆணையத்தின் அனுமதியைப் பெறுவது கட்டாயம். அதேபோல் அந்த இடங்களைப் புதிதாக வேறெதற்கும் பயன்படுத்துவதற்கும் அனுமதி வாங்க வேண்டும்.
சான் ஃபூக் டக் சீ கோயிலில் வெகுசில பழுதுபார்ப்புப் பணிகளே மேற்கொள்ளப்பட்டன. கேன்டனிஸ் பாணிக் கட்டடம் என்பதற்கான அதன் அடிப்படைத் தகுதிகள் இன்னும் இருப்பதாக ஆணையம் கூறியது.
ஆடம் பார்க் நிலப்பகுதி இரண்டாம் உலகப் போரில் சிங்கப்பூர் வீழ்ச்சியடைவதற்குமுன் போர்க்களமாக இருந்தது.
பிரிட்டன் ஜப்பானிடம் சரணடைந்த பிறகு போர்க் கைதிகள் முகாமாக அது மாறியது. பிரிட்டனையும் ஆஸ்திரேலியாவையும் சேர்ந்த ஏறக்குறைய 3,000 போர்க் கைதிகள் அங்கு இருந்தனர்.
பின்னர் போர்க் கைதிகளை அப்புறப்படுத்தி, பெரிய ஜப்பானிய நிறுவனங்களின் ஊழியர்கள் அங்குக் குடியமர்த்தப்பட்டனர்.