இவ்வாண்டின் கடைசி பெருநிலவு, நவம்பர் 15ஆம் தேதி மாலையிலிருந்து சிங்கப்பூரின் வானத்தை ஒளிர வைத்து பொதுமக்களையும் புகைப்பட ஆர்வலர்களையும் ஈர்த்தது.
‘பீவர்’ நிலவு என அழைக்கப்படும் இவ்வாண்டின் நான்காவது பெருநிலவு, இதற்கு முன்னதாக ஆகஸ்ட் மாதத்தின்போது காணப்பட்டது.
ஆனால், சில இடங்களில் அதிக மேகமூட்டமாக இருந்ததால், பெருநிலவைச் சரியாகக் காண இயலாமல் சிலர் வருத்தமடைந்தனர்.
வெள்ளி அம்புலியின் தெள்ளிய எழிலைப் படமெடுக்கப் பாய்ந்த சிங்கப்பூரின் புகைப்பட ஆர்வலர்கள், பின்னர் தங்கள் படங்களைத் திரளாகச் சமூக ஊடகங்களில் பதிவேற்றம் செய்தனர்.
மியன்மார், பாகிஸ்தான், எகிப்து, மெக்சிகோ போன்ற உலக நாடுகளிலும் இந்த பீவர் நிலவு காணப்பட்டது.
சிங்கப்பூர் அறிவியல் நிலையத்தின் விண்வெளி ஆய்வகத்தின் தகவல்படி, நவம்பர் மாதத்தில் காணப்படும் முழுநிலவுக்கு ‘பீவர் மூன்’ என்ற பெயர் வழங்கப்படுகிறது.
‘பீவர்’ எனப்படும் நீர் எலிகள், பனிப்பவருத்தை முன்னிட்டு நிர்நிலைகளில் அணை கட்டுவதுடன் உணவுப்பொருள்களையும் சேகரிக்கத் தொடங்குகின்றன. பருவ மாற்றத்தைக் குறிப்பதற்காக அமெரிக்கப் பழங்குடியினரும் அங்கு குடிபெயர்ந்த ஐரோப்பியர்களும் அந்தப் பெயரை நிலவுக்குப் பயன்படுத்தினர்.