லிட்டில் இந்தியாவில் பீமா ஜூவல்லர்சின் முதல் கடை

லிட்டில் இந்தியாவில் பீமா ஜூவல்லர்சின் முதல் கடை

1 of 2
படம்: சுந்தர நடராஜ்
படம்: சுந்தர நடராஜ்

21 Oct 2026 - 8:28 pm

2 mins read

லிட்டில் இந்தியாவின் சிராங்கூன் ரோட்டில் மேலுமொரு நகைக்கடை இடம்பிடித்துள்ளது.

இம்முறை தடம் பதித்திருப்பது ‘பீமா கோல்ட்’ நகைக்கடை. இது 1925ஆம் ஆண்டு பாரம்பரியக் கடையான ‘பீமா ஜூவல்லர்ஸ்’ நிறுவனத்தைத் தோற்றுவித்த பீமா குழுமத்தின் கர்நாடக மாநிலப் பிரிவான ‘பி. கிருஷ்ணன் குழுமத்தின்’ துணை நிறுவனம்.

மல்லிகை மொட்டு, கோயில் சார்ந்த வடிவமைப்புகளை உள்ளடக்கிய கேரள பாணியிலான ‘முல்லை மொட்டு’, ‘ஆராதனை’ அட்டிகைகள் போன்ற தென்னிந்திய பாணி வடிவமைப்புகளுக்குப் பெயர்பெற்றது இந்தக் கடை.

புதன்கிழமை (அக்டோபர் 21) எண்.202, சிராங்கூன் ரோட்டில் பீமா கோல்டின் முதல் சிங்கப்பூர்க் கிளையின் தொடக்க விழாவில் இந்த வடிவமைப்புகள் காட்சிக்கு வைக்கப்பட்டிருந்தன.

தொடக்க நிகழ்ச்சியில் கிட்டத்தட்ட 400 பேர் கலந்துகொண்டனர். பல அடுக்குகள் கொண்ட இந்த நகைக் கடையின் நுழைவாயிலில் சிங்க நடனக் கலைஞர்கள் மற்றும் செண்டை மேளக் கலைஞர்களின் நிகழ்ச்சிகள் இடம்பெற்றன.

பீமா கோல்டின் நிர்வாக இயக்குநர் விஷ்ணு பட்டும் அவரின் குடும்பத்தாரும் கடையைத் திறந்து வைத்தனர்.

கடையின் முகப்பில் ‘பீமா’ என்ற பெயர் ஆங்கிலத்திலும் மாண்டரினிலும் இடம்பெற்றுள்ளது.

பீமா கோல்ட் (சிங்கப்பூர்) மக்கள் தொடர்புப் பிரிவு மேலாளர் பத்மஜா எர்ரம்செட்டி, பலதரப்பட்ட நகைகள் கிடைக்கும் என்று ‘தப்லா!’ இதழிடம் தெரிவித்தார்.

“இந்திய வடிவமைப்புகள் தவிர, சீனர், மலாய்க்காரர், யூரேசியர் மற்றும் பிற இனச் சமூகத்தினருக்கான குறிப்பிட்ட வடிவமைப்புகளையும் கொண்டுவரத் திட்டமிட்டுள்ளோம், இதனால் ஒவ்வொருவருக்கும் பிடிக்கும் வகையில் நகைகள் இருக்கும்,” என்றார் அவர்.

“ஒவ்வொரு வயதினரையும் கவரும் வகையில், ‘சன்ஷைன்’ வகையின்கீழ் ஒரு மாதக் குழந்தைகளுக்கான வடிவமைப்புகளும் இளையர்க்கான ‘ஒய்’ வகை நகைகளும் எங்களிடம் உள்ளன,” என்று அவர் மேலும் சொன்னார்.

ஆஸ்திரேலியா, மலேசியாவை அடுத்த இலக்குகளாகக் கொண்டு அனைத்துலக அளவில் விரிவாக்கம் செய்யும் திட்டத்தின் முதல் படியே இந்த உள்ளூர்க் கிளை என்று விற்பனை, செயல்பாட்டுப் பிரிவுத் தலைவர் கே.ராஜேஷ் தெரிவித்தார். தற்போது, பீமா ஜூவல்லர்சுக்கு துபாயில் எட்டு கடைகள் உள்ளன. மேலும் மூன்று கடைகள் தொடங்கப்படவிருக்கின்றன.

இந்தப் புதிய கடை, கூடுதல் பாணிகளையும் வகைகளையும் எதிர்பார்க்கும் பண்டிகைக்கால வாடிக்கையாளர்களுக்கு வரப்பிரசாதமாக இருக்கும் என்று ‘லிஷா’ அமைப்பின் தலைவர் ரகுநாத் சிவா குறிப்பிட்டார்.

“ஒவ்வொரு நகைக்கடையும் தனித்துவமானது. இது சிங்கப்பூரர்கள் தங்களுக்கு வேண்டிய வடிவமைப்புகளைத் தேர்ந்தெடுத்து வாங்க கூடுதல் வாய்ப்புகளை வழங்குகிறது” என்று அவர் சொன்னார்.

குறிப்புச் சொற்கள்