சிங்கப்பூர்க் குடும்ப அமைப்புகளுக்குள் சிறார்களுக்கு எதிராக நிகழ்த்தப்படும் கொடுமைகள் கவலையளிக்கும் வகையில் தொடர்ந்து பதிவாகி வருகின்றன.
சமுதாய, குடும்ப மேம்பாட்டு அமைச்சு வியாழக்கிழமை (அக்டோபர் 29) வெளியிட்டுள்ள ‘குடும்ப வன்முறைப் போக்குகள் அறிக்கை 2026’ அது குறித்த பல தகவல்களை வெளியிட்டுள்ளது.
அதன்படி, கடந்த 2025ஆம் ஆண்டில் சமூக அமைப்புகளால் நேரடியாகக் கையாளப்பட்ட சிறார் துன்புறுத்தல் முதல்நிலைச் சம்பவங்களின் (டியர் 1) எண்ணிக்கை 2,476ஆகக் கூடியது.
குறிப்பாக, 7 முதல் 12 வயதுக்குட்பட்ட தொடக்கப்பள்ளிப் பருவத்துச் சிறார்களே மிக அதிக அளவில், அதாவது 1,024 பிள்ளைகள் பாதிக்கப்பட்டனர்.
பள்ளிச் சூழலில் ஆசிரியர்கள், முன்களப் பணியாளர்கள் சுட்டும் கூடுதல் விழிப்புணர்வால் அத்தகைய சம்பவங்கள் தொடக்கத்திலேயே கண்டறியப்பட்டாலும், இச்சிறார் சொந்த வீட்டிலேயே அனுபவிக்கும் சொல்லொண்ணாத் துயரங்களை இத்தரவுகள் வெளிச்சத்திற்குக் கொண்டுவந்துள்ளன.
அவ்வகையில், சிறார் கொடுமை தொடர்பில் சமூக அமைப்புகளுக்கு வந்த வழக்குகளில் உடல்சார்ந்த துன்புறுத்தலே அதிகமாக இருந்தது.
பதிவான மொத்த வழக்குகளில் பாதிக்கும் மேலானவற்றில், அதாவது 1,421 சம்பவங்களில் சிறார்கள் உடல்சார்ந்த கடுமையான துன்புறுத்தலுக்கு ஆளானதாக அமைச்சு வெளியிட்ட அறிக்கை குறிப்பிட்டது.
அதற்கு அடுத்தபடியாக மனரீதியான துன்புறுத்தலால் 562 பேரும், பெற்றோரால் போதிய கவனிப்பின்றிப் புறக்கணிக்கப்பட்டதால் 317 பேரும், பாலியல் அத்துமீறலால் 126 பேரும் பாதிக்கப்பட்டனர்.
பெற்றோர்கள் தங்கள் பிள்ளைகளைக் கண்டித்து நல்வழிப்படுத்துகிறோம் என்ற பெயரில் வரம்புமீறித் தாக்கும் கொடூரங்களே அவற்றுள் அதிகம் என்பதைச் சுட்டிய அமைச்சு, கண்டிப்பது என்பது உடல் காயங்களை ஏற்படுத்துவதாக இருக்கக்கூடாது என்றும், அன்பு வழியிலான நல்லொழுக்க வளர்ப்பையே பெற்றோர்கள் பின்பற்ற வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளது.
அதேவேளையில், நிலைமை கைமீறிச் சென்று உயிருக்கு ஆபத்து ஏற்படும் சூழலில் வீடுகளிலிருந்து வெளியேற்றப்படும் சிறார்களின் எண்ணிக்கையில் சரிவு ஆறுதலளிப்பதாக அமைந்துள்ளது.
கடந்த 2024ஆம் ஆண்டில் 1,454 பேர் பாதுகாப்புக் காரணங்களுக்காக வீடுகளை விடுத்து மாற்று இடங்களில் தங்கவைக்கப்பட்டனர். அந்த எண்ணிக்கை 2025ஆம் ஆண்டில் 1,355ஆகக் குறைந்தது.
அப்படி மாற்றுப் பராமரிப்பில் உள்ள சிறாரில் 59 விழுக்காட்டினர், அதாவது 795 பிள்ளைகள் வளர்ப்புப் பெற்றோரின் ஆதரவிலும் உறவினர்களின் பொறுப்பிலும் குடும்பச் சூழலில் வளர்ந்து வருகின்றனர்.
மேலும், சமுதாயத்தின் கனிவான முகத்தை வெளிப்படுத்தும் தகவலும் அறிக்கையில் இடம்பெற்றுள்ளது. அதாவது, சிறார்க்குப் புகலிடம் அளிக்க முன்வரும் பதிவுபெற்ற வளர்ப்புக் குடும்பங்களின் எண்ணிக்கையும் 646ஆக உயர்ந்துள்ளது
இருப்பினும், மாற்று உறைவிடங்களில் வாழும் சிறாரில் பெரும்பான்மையோர் 13 முதல் 18 வயதுக்குட்பட்ட 315 பிள்ளைகள் என்பது கவலைக்குரியது.
சிக்கலான மனநிலையும் தேவைகளும் கொண்ட இந்த வயதுப் பிரிவினரைத் தங்கள் குடும்பத்தில் இணைத்து வளர்க்க வளர்ப்புப் பெற்றோர் பலர் தயக்கம் காட்டுவதே இதற்குக் காரணம் என்றும் அறியப்படுகிறது.
இந்தச் சவாலை எதிர்கொள்ளும் நோக்கில், பதின்ம வயதினரைத் தத்தெடுத்துப் பராமரிக்கும் வளர்ப்புப் பெற்றோருக்கான மாதாந்தரப் பராமரிப்புத் தொகையைக் கடந்த 2025 அக்டோபர் முதல் அரசு உயர்த்தி வழங்கிவருவது குறிப்பிடத்தக்கது.
குழந்தைகளின் எதிர்காலத்தைப் பாதுகாக்க ஒட்டுமொத்த சமூகமும் ஆதரவுக்கரம் நீட்ட வேண்டும் எனக் கேட்டுக்கொண்டுள்ள்அ அமைச்சு, குழந்தைகளின் அழுகுரல் வீட்டுச் சுவர்களுக்குள் அடங்கிவிடாமல் உடனடி நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளது.
