வாய் கொப்பளிக்கும் திரவத்தால் விளையும் நன்மை, தீமைகள்

வாய் கொப்பளிக்கும் திரவத்தால் விளையும் நன்மை, தீமைகள்

2 mins read
2424e74b-2274-406a-a114-210c3e19741e
ஒருவரின் பல்லீற்றின் தன்மையைப் பொருத்து அவர்கள் பயன்படுத்தும் வாய் கொப்பளிப்புத் திரவம் அமையும். - படம்: Getty Images
Google News Preferred Icon

வாய் கொப்பளிக்கும் திரவத்தை அடிக்கடி பயன்படுத்துவதால் நன்மையா தீமையா என்ற கேள்வி பலதரப்பட்டக் கருத்துகளை வெளிப்படுத்தியுள்ளது.

அதன் தொடர் பயன்பாடு ஒருவரின் வாயில் இயற்கையில் வாழும் நுண்ணுயிரிகளை அழிப்பதோடு, நீரிழிவு, உயர் ரத்த அழுத்தம், மூளைக்குச் செல்லும் ரத்தம் தடைப்படுதல் போன்ற பல நோய்களுக்கு வழிவகுக்கும் என்று அண்மையில் சமூக ஊடகங்களில் பலர் அதிர்ச்சியூட்டும் வகையில் அச்சம் தெரிவித்துள்ளனர்.

அந்த அச்சத்தை உறுதிப்படுத்தும் வகையில், நல்ல பயன்தரும் நுண்ணுயிரிகள் வாய் கொப்பளிப்புத் திரவப் பயன்பாட்டால் அழிந்துபோவதோடு நோய்களை உண்டாக்கி ஆரோக்கியத்துக்குப் பங்கம் விளைவிப்பதாகவும் சில ஆய்வுகள் வெளிவந்துள்ளன.

ஆய்வு குறித்து நிபுணர்களின் விளக்கங்கள்

கடைகளில் வழக்கமாக விற்பனையாகும் வாய்கொப்பளிப்புத் திரவங்களை வாரம் ஒருமுறை அல்லது மாதம் ஒருமுறை பயன்படுத்துவது ஒருவரின் பொது ஆரோக்கியத்துக்கும் வாய் நலனுக்கும் தீங்கு விளைவிக்காது என அமெரிக்காவின் மிச்சிகன் பல்கலைக்கழகப் பல்மருத்துவப் பள்ளியின் பல்திசு, வாய் சிகிச்சை மருத்துவப் பேராசிரியர் பூர்ணிமா குமார் கூறினார்.

ஆயினும் அவற்றில் குறிப்பிட்ட வகையானவற்றை ஒரு நாளில் பலமுறை என்ற அளவில் மாதம் அல்லது ஆண்டுக்கணக்காகப் பயன்படுத்தினால் அது சில பாதிப்புகளை வாயில் ஏற்படுத்தும் என்று அவர் எச்சரித்தார்.

“எனது பல் சுத்தம் செய்யும் தூரிகை (பிரஷ்) அருகில் வாய் கொப்பளிப்புத் திரவம் உள்ளதா? ஆம் உள்ளது, ஆனால் அதை அன்றாடும் பயன்படுத்துவேனா என்றால் நிச்சயமாக இல்லை,” என்று அவர் விவரித்தார்.

வாய்கொப்பளிப்புத் திரவங்கள் இருவகைப்படும். ஒன்று நுண்ணுயிரிகளை அழிக்கும் தன்மையுடையவை, மற்றொன்று அவ்வாறு அழிக்காமல் வாய் துர்நாற்றத்தை மட்டும் தடுப்பவை.

நல்ல முறையில் வாய் ஆரோக்கியத்தைக் கட்டிக்காப்பது என்பது தேவையற்ற பாதிப்பை ஏற்படுத்தும் நுண்ணுயிரிகளை வெளியேற்றுவதைக் குறிக்கும். அதேவேளையில் நன்மை பயக்கும் நுண்ணுயிரிகளை வாயில் தக்கவைத்துக்கொள்வதும் அவசியமே என்று வாஷிங்டனில் உள்ள மேரிலேன்ட் பல்கலைக்கழகத்தின் பல் மருத்துவப் பள்ளி பல்திசுப் பிரிவின் இணைப் பேராசிரியர் விவேக் டும்பிகேரே-மாட் தெரிவித்தார்.

வழக்கமாக பல் துலக்குதல், பல் இடைவெளிகளைச் சுத்தம் செய்தல், அடிக்கடி பல் மருத்துவரிடம் சோதனை செய்துகொள்ளுதல் போன்ற செயல்கள் வாய் நலத்துக்குப் போதுமானது என்று அவர் கருத்துரைத்தார்.

ஆயினும் கிருமிநாசினிகளை உள்ளடக்கிய சிலவகை வாய்கொப்பளிப்புத் திரவங்கள் வாயின் நுண்ணுயிரிகளைப் பாதித்து அவற்றின் செயல்பாட்டை மாற்றியமைக்கக்கூடியவை என்று அறியப்படுகின்றன. அவை அமெரிக்காவில் மருத்துவர்களின் பரிந்துரை இருந்தால் மட்டும் வாங்கமுடியும்.

குறிப்புச் சொற்கள்
பல்கலைக்கழகம்பல் மருத்துவம்சுகாதாரம்ஆரோக்கியம்நிபுணர்ஆய்வுசமூக ஊடகம்கருத்துமருத்துவக்கல்லூரிஅமெரிக்கா