சுவாசக் குழாயில் ஏற்படும் தொற்றால் உண்டாகும் மூக்கடைப்பு, சளிப் பிரச்சினைகளைப் போக்க வழங்கப்படும் 31 மருந்துகளில் இருக்கும் ‘சூடோஎஃபிட்ரின்’(pseudoephedrine) ரசாயனத்தின் நன்மைகள் அதன் பக்கவிளைவுகளைவிட அதிகம் என சுகாதார அறிவியல் ஆணையம் தெரிவித்துள்ளது.
இந்த ரசாயனம் அடங்கிய மருந்துகளை நீண்டகாலமாக பலதரப்பட்ட மக்கள் பயன்படுத்தி வருகின்றனர் என்றும் அவை குறித்து இதுவரை எந்தப் புகாரும் உள்ளூர் மக்கள் அளிக்கவில்லை என்றும் ஆணையம் ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்சிடம் ஜனவரி 1ஆம் தேதி கூறியது.
“ சூடோஎஃபிட்ரின் கொண்ட மருந்துகளை உட்கொண்ட பிறகு பயனீட்டாளர்களுக்குக் கடுமையான தலைவலி, குமட்டல், வாந்தி, பார்வைக் கோளாறுகள், வலிப்பு மனநலனில் மாற்றம் போன்றவை ஏற்பட்டால், அந்த மருந்தை உட்கொள்வதை நிறுத்திவிட்டு உடனடியாக மருத்துவ உதவியை நாட அறிவுறுத்தப்படுகின்றனர்,” என ஆணையத்தின் பேச்சாளர் கூறினார்.

