இலக்கை விஞ்சிய நிதி திரட்டு நிகழ்ச்சி

இலக்கை விஞ்சிய நிதி திரட்டு நிகழ்ச்சி

2 mins read
02381206-5988-4085-ac1d-a833ebbd0303
மலாய் நாளிதழான பெரித்தா ஹரியான், ‘ஏஎம்பி சிங்கப்பூர்’ சங்கம் ஆகியவை ஒருங்கிணைத்த ‘பிஎச்-ஏஎம்பி’ கோல்ஃப் - இரவு விருந்து நிகழ்ச்சியின் நிதி திரட்டில் ஏறக்குறைய $260,000 நன்கொடை திரட்டப்பட்டது. - படம்: பெரித்தா ஹரியான்
multi-img1 of 2
Google News Preferred Icon

மலாய் நாளிதழான பெரித்தா ஹரியான், ‘ஏஎம்பி சிங்கப்பூர்’ சங்கம் ஆகியவை ஒருங்கிணைத்த ‘பிஎச்-ஏஎம்பி’ கோல்ஃப் - இரவு விருந்து நிதி திரட்டு முயற்சியின் வாயிலாக நன்கொடைகள் குவிந்துள்ளன.

சிங்கப்பூரின் 60வது பிறந்தநாள் கொண்டாட்டத்தை முன்னிட்டு நடத்தப்பட்ட அந்த நிகழ்ச்சியின் மூலம் $300,000 நிதி திரட்ட இலக்கு முன்வைக்கப்பட்டது.

அந்த நிதி ‘ஏஎம்பி’ ஆதரவு அளிக்கும் திட்டங்களுக்கும், எளிதில் பாதிக்கப்படக்கூடிய சிறார், இளையோர், குடும்பங்கள் ஆகியோருக்கு உதவ சிங்கப்பூர் சிறார் சங்கத்திற்கும் வழங்கப்படும். மொத்த நன்கொடையின் மதிப்பு, நிர்ணயிக்கப்பட்ட இலக்கை தாண்டி, ஏறத்தாழ $400,000ஐ எட்டும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

ஆர்க்கிட் கன்ட்ரி கிளப்பில் செவ்வாய்க்கிழமை (ஜூலை 22) நடைபெற்றது ‘பிஎச்-ஏஎம்பி‘  கோல்ஃப் - இரவு விருந்து நிதித் திரட்டு நிகழ்ச்சி.  அந்த நிதி, எளியோரின் நல்வாழ்வைக் கட்டியெழுப்பவும், அவர்களின் கல்விக்கான தேவைகளைப் பூர்த்திசெய்யவும் அளிக்கப்படவுள்ளது.

மேலும், நிதியின் ஒரு பகுதி, குறிப்பாக உயர்கல்வியில் தொடர்பு, ஊடகம் அல்லது மலாய்க் கல்வியைப் பயிலவிருக்கும் தகுதியான மாணவர்களுக்குப் பரிசளிக்கவும் ஒதுக்கப்படவுள்ளது. ‘பிஎச்-ஏஎம்பி’ கோல்ஃப் - இரவு விருந்து நிதி திரட்டு வழியாக, $260,000க்கும் மேல் நிதி திரட்டப்பட்டுள்ளது. இதனுடன் மானியங்களும் இணைந்திடும் பட்சத்தில் திரட்டப்படும் ஒட்டுமொத்த நிதி $400,000ஐ எட்டும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த நிகழ்ச்சியில் தற்காப்பு, நீடித்த நிலைத்தன்மை சுற்றுப்புற மூத்த துணை அமைச்சர் ஸாக்கி முகம்மது, “தேவையில் உள்ளோரை ஆதரிக்க சமூகம் எவ்வாறு ஒன்றிணைந்துள்ளது என்பதைக் காண்பது மனத்திற்கு நிறைவாக உள்ளது,” என்று குறிப்பிட்டார்.

தொடர்ந்து பேசிய அவர், ‘பிஎச்-ஏஎம்பி’ நிகழ்ச்சி வெறும் நிதி திரட்டுக்கான விழா அன்று; அதையும் தாண்டி சமூகமாகக் கைகோத்துச் செயல்படுவதன் மூலம் நாம் என்ன சாதிக்க முடியும் என்பதற்கான வலுவான எடுத்துக்காட்டு,’’ என்று மேலும் சொன்னார்.

இந்த நிகழ்ச்சியில் ‘பிஎச்-ஏஎம்பி’ கோல்ஃப் நிதி திரட்டின் புரவலர் திருமதி ஹலிமா யாக்கோப் சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்டார்.

நிகழ்ச்சியின் முக்கியத்துவம் குறித்து பேசிய ‘பிஎச்’ செய்தி ஆசிரியர் நஸ்ரி மொக்தர், ‘‘உதவி தேவைப்படுவோரின் வாழ்வை உயர்த்தி, அவர்களை ஆதரிக்கும் இந்த அர்த்தமுள்ள நிகழ்ச்சியில் எங்களுடன் இணைந்து செயலாற்றிய ‘ஏஎம்பி’ சங்கத்திற்கு மிகவும் நன்றிக்கடன்பட்டுள்ளோம்,’’ என்றார்.

குறிப்புச் சொற்கள்