டிரம்ப்பைச் சாடிய பைடன்

1 mins read
4c701817-4544-47a4-869c-32313a71e23a
முன்னாள் அமெரிக்க அதிபர் ஜோ பைடன். - படம்: ராய்ட்டர்ஸ்

வா‌ஷிங்டன்: முன்னாள் அமெரிக்க அதிபர் ஜோ பைடன், தமது ஆட்சி காலம் முடிந்த பிறகு முதன்முறையாக ஆற்றிய உரையில் தற்போதைய அதிபர் டோனல்ட் டிரம்ப்பைத் தாக்கிப் பேசியுள்ளார்.

திரு டிரம்ப் அரசாங்கத் துறை சார்ந்த விவகாரங்களில் அவசர அவசரமாகக் கொண்டுவரும் மாற்றங்கள் அமெரிக்கர்கள் பெறக்கூடிய ஓய்வுக்கால சலுகைகளைப் பாதிக்கக்கூடும் என்று திரு பைடன் கூறினார்.

“ஆட்சிக்கு வந்து 100 நாள்களுக்குள் இந்த அரசாங்கம் நிலைமையை சீரழித்துவிட்டது. இவ்வளவு குறுகிய காலத்தில் அவ்வளவு நிகழ்ந்தது ஒருவகை அதிர்ச்சியைத் தருகிறது,” என்று சிகாகோ நகரில் உடற்குறையுள்ளோருக்குக் குரல் கொடுப்பவர்களுக்கான மாநாட்டில் திரு பைடன் சொன்னார்.

“அவர்கள், சமூகப் பாதுகாப்புத் துறையை உலுக்கி 7,000 ஊழியர்களை வெளியே அனுப்பிவிட்டனர்,” என்றும் அவர் எடுத்துரைத்தார்.

ஓய்வுக்கால மற்றும் உடற்குறையுள்ளோருக்கான சலுகைகளை வழங்கும் தேசிய அமைப்பைப் பற்றி திரு பைடன் பேசினார்.

உரையாற்றும்போது திரு பைடன் சில வேளைகளில் தடுமாறினார். அதைக் கிண்டல் செய்து திரு டிரம்ப், சமூக ஊடகத்தில் ஒரு சிறிய காணொளியைப் பதிவேற்றம் செய்தார். அந்தக் காணொளிக்கு அவர் கருத்து ஏதும் பதிவிடவில்லை.

குறிப்புச் சொற்கள்