தமிழ் முரசு வாசகர்களுக்கு எங்கள் உளங்கனிந்த தீபாவளி வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

இருதரப்பு உறவுகளைப் புதிய உச்சத்துக்கு உயர்த்த சிங்கப்பூர், நியூசிலாந்து உறுதி

2 mins read
c66fd838-a5c3-4174-b389-0dfa6ab713dc
(இடது) பிரதமர் லாரன்ஸ் வோங்கும் நியூசிலாந்துப் பிரதமர் கிறிஸ்டஃபர் லக்சோனும் விரிவான உத்திபூர்வ பங்காளித்துவ உடன்பாட்டை மேம்படுத்திக்கொண்டனர். - படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

ஆக்லாந்து: பாதுகாப்பு, புத்தாக்கம், விநியோகத் தொடர் மீள்திறன் ஆகிய பற்பல அம்சங்களில் ஒத்துழைப்பை வலுப்படுத்திக்கொள்வதன் மூலம் இருநாட்டு உறவை அடுத்த கட்டத்திற்குக் கொண்டுசெல்ல சிங்கப்பூரும் நியூசிலாந்தும் இணக்கம் தெரிவித்துள்ளன.

இருநாடுகளும் 60 ஆண்டு அரசதந்திர உறவைப் பறைசாற்றும் நேரத்தில் விரிவான உத்திபூர்வ பங்காளித்துவ உடன்பாட்டை (சிஎஸ்பி) அவை மேம்படுத்திக்கொண்டன.

இருநாடுகளும் 25 ஆண்டுகளுக்குமுன் தாராள வர்த்தக ஒப்பந்தத்தைச் செய்துகொண்டன.

அந்த ஒப்பந்தம் சிங்கப்பூருக்கும் நியூசிலாந்துக்கும் இடையில் ஆக்ககரமான பாதைகளை அமைக்க உதவியது என்றார் பிரதமர் லாரன்ஸ் வோங்.

இருநாடுகளும் கடைசியாக 2019ஆம் ஆண்டு உறவுகளை மேம்படுத்திக்கொண்டன. அப்போது 40க்கும் அதிகமான திட்டங்கள் நிறைவேற்றப்பட்டன. அவற்றைக் குறிப்பிட்டு பேசிய திரு வோங், சிஎஸ்பி உடன்பாடு இன்னும் புத்தாக்கம் நிறைந்த திட்டங்களை ஒன்றிணைந்து செய்ய வழிவகுக்கும் என்றார்.

நாடுகளின் ஒத்துழைப்பு, கூடுதல் முதலீடு, முதலீட்டுச் சந்தைகளின் ஒத்துழைப்பு, உத்திபூர்வ பங்காளித்துவம் ஆகியவற்றை வழிநடத்த வருடாந்தரத் தலைவர்கள் கூட்டத்தை ஏற்பாடு செய்வது அவற்றுள் அடங்கும் என்று பிரதமர் வோங் கூறினார்.

ஆக்லாந்தில் நடைபெற்ற செய்தியாளர் கூட்டத்தில் பிரதமர் லாரன்ஸ் வோங்கும் நியூசிலாந்துப் பிரதமர் கிறிஸ்டஃபர் லக்சோனும் கலந்துகொண்டனர்.

இரு தலைவர்களும் அடுத்த பத்தாண்டுக்குரிய 72 திட்டங்கள் அடங்கிய கூட்டுத் தொலைநோக்கு அறிக்கையில் கையெழுத்திட்டனர்.

சிங்கப்பூரும் நியூசிலாந்தும் புதிய பன்னாட்டு பசுமைப் பொருளியல் பங்காளித்துவத்துக்கான பரிந்துரை பற்றியும் கலந்துரையாடின. அவை இரண்டும் ஏற்கெனவே மின்னிலக்கப் பொருளியல் பங்காளித்துவ உடன்பாட்டில் இணைந்து செயல்பட்டன.

சிஎஸ்பி உடன்பாட்டின்கீழ் சிங்கப்பூரும் நியூசிலாந்தும் அத்தியாவசியப் பொருள்களின் வர்த்தக உடன்பாட்டுக்கும் இணக்கம் தெரிவித்தன. அதன் மூலம் நெருக்கடி காலங்களிலும் உணவு, எரிபொருள், மருந்துகள் ஆகிய முக்கிய பொருள்களின் விநியோகம் தடையின்றி தொடர்வது உறுதிசெய்யப்படும்.

இருநாடுகளுக்கும் இடையிலான வலுவான நம்பிக்கையை அது குறிப்பதாக திரு லக்சோன் குறிப்பிட்டார்.

குறிப்புச் சொற்கள்