பாரம்பரியம், நவீனம், ‘பியூஷன்’ (Fusion) என யாவரையும் ஈர்க்கவல்ல உணவுவகைகளைக் கொண்டுள்ளது பெர்ச் ரோடு தீபாவளிச் சந்தை.
அங்கு பல்வேறு உணவுவகைகளுடன் பலதரப்பட்ட அலங்காரங்களும் இன்ன பிற பண்டிகைக்காலக் கடைகளும் பொருள் வாங்க வருவோருக்கு மேலும் உற்சாகமூட்டுகின்றன.
ஆண்டுதோறும் நடைபெறும் இந்தத் தீபாவளிச் சந்தையில் புதுமையாக என்ன இருக்கும் என்று எதிர்பார்த்து வருகின்றனர் மக்கள். அதற்கேற்ப வணிகர்களும் புதுமை கலந்த படைப்புகளை அறிமுகம் செய்கின்றனர்.
உணவில் புதுமை
நண்பர்கள், குடும்பத்தினருடன் நேரம் செலவிட வருவோர், சந்தையைச் சுற்றிப்பார்த்தபின் இளைப்பாறுவதற்கு ஏதுவாக அவரவரது விருப்பத்திற்கு ஏற்ப தீபாவளிச் சந்தையின் உணவுக் கடைகளை நாட முடிகிறது.
கடந்த 1990களில் இருந்து இறால் வடைக்குப் பேர்போன ‘தி ஒரிஜினல் வடை’ (The Original Vadai) தற்போது பல புதிய உணவு வகைகளை அறிமுகம் செய்துள்ளது. பொதுவாக மக்கள் விரும்பும் இறால் வடை, வெங்காய வடை, மசால் வடை, சுண்டல் தவிர இவ்வாண்டு ‘பட்டர் சிக்கன்’ (Butter Chicken) வடை அறிமுகம் கண்டுள்ளது.
“சாம்பார் வடை பாணியில் பட்டர் சிக்கனில் வடையைப் போட்டுக் கொடுக்கிறோம். இது இவ்வாண்டு மக்களிடம் அதிக வரவேற்பைப் பெற்றுள்ளது,” என்றார் ‘தி ஒரிஜினல் வடை’ கடையைச் சேர்ந்த சரவணன்.
‘மஞ்சூரியன் சாஸ்’ அல்லது சாம்பார் உள்ளிட்ட தேர்வுகளுடன் வரும் ‘இட்லி கோரெங்’ (Idly Goreng) இவ்வாண்டுச் சந்தையில் மக்களின் விருப்பமாக மாறியுள்ளது. இவை தவிர ‘ஸ்டேக்’ (Steak), கணவாய் (Calamari), பிரியாணி வகைகளை மக்கள் வாங்குவதாகச் சொன்னார் சரவணன்.
மேலும், காய்கறி பிரியாணி உள்பட ஆறு வெள்ளிக்கு விற்பனையாகும் பிரியாணி பிரபலமாக உள்ளதாகவும் சொன்னார்.
தொடர்புடைய செய்திகள்
அனைத்துலக உணவில் தமிழ் மணம்
தமிழ் மணம் கமழும் அனைத்துலக உணவுவகைகளை வழங்கும் ‘சாய் ஓ கிளாக்’ (Chai O’ Clock) கடையும் இனிதான உணவு அனுபவத்தை மக்களுக்கு வழங்கிவருகிறது.
பிரபல வட இந்திய உணவு வகையான ‘பானி பூரி’ (Paani Poori), மசாலா தேநீர் (Masala Chai) ஆகியவற்றுக்குப் பெயர் போன இக்கடை, இவ்வாண்டு ‘குனாஃபா’ (Kunafa) எனப்படும் மத்தியக்கிழக்கு நாடுகளின் உணவை விற்பனை செய்கிறது.
அதிலும் குறிப்பாக, அப்பளத்துடன் வரும் ‘பாயசம் குனாஃபா’ (Payasam Kunafa), தேங்காய்ப் பாலுடன் வரும் ‘ஆப்பம் குனாஃபா’ (Appam Kunafa), அதிக இனிப்பு விரும்புவோருக்கான ‘பால்கோவா குனாஃபா’ (Palkova Kunafa), சிறுவர்களின் விருப்பத்திற்கேற்றவாறு ‘சாக்லெட் குனாஃபா’ (Chocolate Kunafa), ‘பான்டான் குனாஃபா’ (Pandan Kunafa), ‘ரெட் வெல்வெட் குனாஃபா’ (Red Velvet Kunafa) என சுவைகள் ஏராளம்.
எப்போதும் ஏதேனும் புதுமையாகச் செய்ய வேண்டும் எனச் சிந்திப்பதன் விளைவே, இந்த வித்தியாசமான வகைகள் என்றார் மூன்றாண்டுகளாக இந்தத் தீபாவளிச் சந்தையில் கடை நடத்தி வரும் கிரிஷன் பிரகாஷ் நம்பியார், 27.
அம்மாவின் தனிச்சுவை கொண்ட வர்த்தகம்
மலேசியாவின் சிலாங்கூரைப் பூர்வீகமாகக் கொண்ட தமது தாயாரின் ‘நாசி லெமாக்’ (Nasi Lemak) உணவுக்குத் தனிச் சுவை உண்டு. அதனை அனைவரும் ருசிக்க வேண்டும் என்பதால் அண்மையில் வீட்டிலிருந்து உணவுத் தொழில் தொடங்கிய கஸ்தூரி, இந்தச் சந்தையில் முதன்முறையாகக் கடை வைத்துள்ளார்.
“வறுத்த கோழி, ஆட்டிறைச்சி, கணவாய் வகைகளுடன் வரும் தங்கள் ‘நாசி லெமாக்’ கடையில், உணவின் விலை $4.50ல் தொடங்குகிறது என்றார் திட்ட மேலாளராக இருந்து தொழில்முனைவராக மாறியுள்ள கஸ்தூரி, 39.
கடந்த அக்டோபர் 17ஆம் தேதியன்று கடை தொடங்கியுள்ள இவர், “எங்கள் உணவை மக்கள் விரும்புவார்கள் என நம்புகிறோம்,” என்றார்.
‘சிக்கன் பக்கோடா’ (Chicken Pakoda), ‘சிக்கன் விங்ஸ்’ (Chicken Wings) உள்ளிட்ட வகைகளை வழங்குகின்றனர் ‘டெவில்ஸ் கிச்சன்’ (Devil’s Kitchen) உணவுக் கடையினர். தங்கள் வீட்டின் விருப்ப உணவுகளை வணிகமாக்கும் முயற்சியின் முதல் படி இது என்றார் இதன் உரிமையாளர் ஹேமந்த், 27.
“தங்கள் சிக்கன் பக்கோடாவினை மக்கள் ஒருமுறை சுவைத்தால் தொடர்ந்து வாங்குவார்கள். எனவே, வருகை தருவோருக்குச் சில துண்டுகளைச் சுவைக்க வழங்குகிறோம்,” என்றார் இக்கடையச் சேர்ந்த நரேஷ்.
தெவிட்டா பலகாரச் சுவை
பலகாரங்களைச் செய்ய நேரமில்லாதோர் தீபாவளிச் சந்தையில் விற்கப்படும் வண்ண வண்ண ‘குக்கீஸ்’ (Cookies) வகைகளை வாங்குவது வழக்கம்.
அவ்வாறு விற்பனை செய்யும் ‘அலிசா மஹால்’ பலகாரக் கடையைச் சேர்ந்த பட்டாபி, இவ்வாண்டு ‘பிஸ்காஃப் குக்கீ’ (Biscoff Cookies) மிகப் பிரபலம் என்றார்.
தவிர ‘ஒண்டே ‘ஒண்டே’(Ondeh Ondeh), ‘டார்ட் நெனாஸ்’ (Tart Nenas), குழந்தைகளுக்கான ‘எம் & எம்’ (M&M) வகை குக்கீகள் அதிகம் வாங்கப்படுகின்றன என்றார். 10 வெள்ளியிலிருந்து 30 வெள்ளி வரை விற்கப்படும் குக்கீ வகைகளையும், பத்து வெள்ளியில் தொடங்கும் முறுக்கு வகைகளையும் இப்போதிலிருந்தே மக்கள் வாங்கிச் செல்வதாகவும் சொன்னார்.
“20 வகைகளுக்கு மேலான காரப் பலகாரங்கள் விற்பனை செய்யும் ‘அஜ்மீர் ஸ்டோர்ஸ்’ கடை கடந்த பத்தாண்டுகளாகவே 10 வெள்ளிக்கு மூவகை எனப் பலகாரங்களை விற்பனை செய்து வருகிறது. தரம், விலை இரண்டையும் தாங்கள் உறுதிசெய்வதாகக் கூறினார் கடையை நடத்தி வரும் சப்ரூதீன், 28.
இவ்வாண்டு ‘அஜ்மீர் ஸ்டோர்ஸ்’ அவர்களது தனித்துவமான பிரியாணியையும் இங்கே விற்பனை செய்யத் தொடங்கியுள்ளது. வெள்ளிக்கிழமை மட்டும் முதல் நூறு வருகையாளர்களுக்கு ‘மீ சியாம்’ (Mee Siam) கோழிப் பிரியாணி $5.90க்கு வழங்கப்படுவதாகச் சொன்னார் சப்ரூதீன்.
இவ்வாண்டு ‘சில்லி டாக்’ (Chili Dog) வகை உணவும் மக்களின் வரவேற்பைப் பெற்றுள்ளதாகக் கூறினார் ‘பார்ட்டி பூரி’ (Party Poori) கடையின் உரிமையாளர் ‘செப்’ அனில். அனைத்து தின்பண்டங்களும் ஆறு வெள்ளிக்கு விற்கப்படுவது இதன் சிறப்பு.
சைவப் பிரியர்களுக்குக் கொண்டாட்டம்
“சுத்த சைவம் விரும்புவோரின் விருப்பத்திற்கேற்ப சைவ அசைவ உணவுகளுக்குத் தனித்தனி எண்ணெய்ச் சட்டிகளைப் பயன்படுத்துகிறோம்,” என்றார் ‘தி ஒரிஜினல் வடை’ சரவணன். சைவப் பிரியர்களுக்கு ஏதுவாக ‘போலி இறைச்சி’ (Mock Mutton) மசாலா’ வடையையும் வழங்குவதாகக் குறிப்பிட்டார்.
“தீமிதி நேரம் என்பதால் பலர் சுத்த சைவமாக இருப்பார்கள். அவர்களுக்காகவும், பிற சைவப் பிரியர்களுக்காகவும் எங்கள் கடையில் அனைத்தும் சைவம். சுற்றுப்பயணிகளும் கடைக்கு வந்து விரும்பி உண்பதில் மகிழ்ச்சி,” என்றார் ‘சாய் ஓ கிளாக்’ கிரிஷன்.
உடல்நலம் குறித்த கண்ணோட்டம் அதிகரித்துள்ள நிலையில் எந்தவித கலப்படமும் இன்றி, முட்டை கலக்காமல் எல்லா பலகாரங்களையும் படைக்கிறோம் என்றார் இச்சந்தையில் நான்காண்டுகளாக ‘அலிசா மஹால்’ பலகாரக் கடை நடத்தி வரும் பட்டாபி.
இவ்வாண்டு முதன்முறையாக மிளகாய் பஜ்ஜி, இனிப்புச் சோளம், இனிப்பு போண்டா, மசாலா போண்டா, கேசரி என நீளும் தின்பண்ட வகைகளையும் விற்பனைக்கு வைத்துள்ளனர் ‘அஜ்மீர் ஸ்டோர்ஸ்’ கடையினர்.
“மூன்று வகை தின்பண்டம் இரண்டு வெள்ளி விலையில் தொடங்குவதால், அத்துடன் ஒரு தேநீரும் வாங்கி நண்பர்களுடன் பேசிக்கொண்டே சாப்பிட விரும்புகின்றனர். இது நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளது,” என்றார்.
இளமைத் துள்ளல்
ஆண்டுதோறும் இந்தச் சந்தைக்கு வருவது வழக்கம் என்றார் சமூக ஊடக மேலாண்மைத் துறையில் பணியாற்றும் வெனிசா, 38.
“பொதுவாக முதல் முறை வந்து உணவு சுவைத்துவிட்டு, கடைகளைச் சுற்றிப் பார்த்துவிட்டு, விலைகளை அறிந்துகொள்வேன். தீபாவளி நெருங்கும்போது மீண்டும் ஒரு முறை வந்து வாங்கிச் செல்வேன்,” என்றார்.
“இம்முறை பாரம்பரிய உணவுவகைகளும் நவீன உணவுவகைகளும் விற்பனை செய்யப்படுவது சிறப்பு. தேர்வுகள் பல இருப்பது மகிழ்ச்சி,” என்றார் தாதியாகப் பணியாற்றும் ஷாலினி, 29.
இம்முறை தோழிகளுடன் வருகையளித்திருப்பதாகவும், மற்றொரு முறை குடும்பத்தினருடன் வர உள்ளதாகவும் சொன்னார் மனிதவளத் துறை ஊழியர் ஷாலின், 31.
மலேசியாவிலிருந்து ஒரு நாள் பயணமாக சிங்கப்பூர் வந்த மாணவர்கள் கரிஷ்மா, ஜெய், திவ்யா, விக்னேஸ்வர், ஷெர்வின் ஆகியோர், இந்தச் சந்தையின் உணவு வகைகளை விரும்பிச் சுவைத்ததாகக் கூறினர்.
“தமிழர் மட்டுமன்றி பிறமொழி பேசும் இந்தியர்களையும் அங்கு காண்பதில் இன்பம்,” என்றனர்.
தம் மனைவி புஷ்ப ராணி, குழந்தையுடன் சந்தையைச் சுற்றிப்பார்க்க வந்திருந்தார் பகுதி மின்கடத்தித் துறை ஊழியர் மாணிக்கவாசகம்.
“கைப்பைகள், குழந்தைக்கான உடைகள் வாங்கியுள்ளோம். உணவைச் சுவைக்கவும் பொழுதைக் கழிக்கவும் இது நல்ல வாய்ப்பு,” என்றார்.
அலங்காரங்கள் பலவிதம்
மின் விளக்குகள், மெழுகுவர்த்திகள், தோரணங்கள், வண்ணப் பூக்கள், சுவரொட்டிகளுடன் இரண்டு வெள்ளிமுதல் தொடங்கும் அலங்காரங்களை மக்கள் வாங்கத் தொடங்கியுள்ளனர்.
“தீபாவளி வாழ்த்து அட்டைகளைத் தொடர்ந்து வாங்குவோர் இன்னும் இருக்கின்றனர். அவர்களுக்கென பத்து அட்டைகள் 4.50 விலையில் விற்பனை செய்கிறோம்,” என்றார் அலங்காரக் கடையைச் சேர்ந்த சசி.
வண்ணத் தோரணங்களை விரும்புவதால் இவ்வாண்டு பண்டிகைக்காக 25 வெள்ளி மதிப்புக்கு அலங்காரங்கள் வாங்கியுள்ளதாகவும் தீபாவளி வந்துவிட்டதை உணர முடிவதாகவும் கூறினார் ‘ஹில் வியூ’ பகுதியைச் சேர்ந்த ராஷி.
தங்கள் அலுவலக தீபாவளி கொண்டாட்டத்துக்காக அலங்காரங்கள் வாங்கிய சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் ஊழியர் ரேவதி, “சிறு சிறு பொம்மைகள், விளக்குகள் கண்ணைப் பறிக்கின்றன,” என்று கூறினார்.
இது தவிர மருதாணிக் கடைகளிலும் இளையர் கூட்டம் குவிகிறது. இச்சந்தையில் ஐந்தாண்டுகளாக மருதாணிக் கடை நடத்தி வரும் சந்தியா, 29, “மக்கள் கூட்டத்தைப் பார்ப்பது மகிழ்ச்சி,” என்றார். “கடந்த ஆண்டைவிட பல புதுமையான கடைகள், உணவுவகைகள் குவிந்துள்ளது சிறப்பு,” என்றும் சொன்னார்.