பிரதமர் அலுவலகம், உள்துறைக் குழுவின் அறிவியல், தொழில்நுட்ப அமைப்பு (எச்டிஎக்ஸ்) ஆகிய இடங்களுக்குத் தனித்தனியாக இரு முறை வெடிகுண்டு மிரட்டல் விடுத்ததாக 40 வயது கோ ஜியே ஷியாங் மீது நீதிமன்றத்தில் வியாழக்கிழமை (ஜூலை 9) குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது.
கடந்த வாரம் ஜூலை 3ஆம் தேதி, மீடியாகார்ப் கட்டடத்தோடு ஒரே வளாகத்தைப் பகிர்ந்துகொள்ளும் எச்டிஎக்ஸ் அமைப்பின் அலுவலகத்தில் வெடிகுண்டு வைக்கப்பட்டுள்ளதாக இணையம் வழியாக ஒரு படிவத்தில் மிரட்டல் அனுப்பப்பட்டது.
செவ்வாய்க்கிழமை (ஜூலை 6) நாடாளுமன்றக் கட்டடத்தில் வெடிகுண்டு இருப்பதாகப் பிரதமரின் அலுவலகத்திற்கு அடையாளம் தெரியாதவரிடமிருந்து மின்னஞ்சல் ஒன்று பெறப்பட்டது.
மிரட்டல்களைத் தொடர்ந்து காவல்துறையினர் அந்த இடங்களை முழுமையாகச் சோதனையிட்டனர். சந்தேகத்திற்குரிய வெடிபொருள்கள் எதுவும் அங்கு கண்டெடுக்கப்படவில்லை.
குற்றப் புலனாய்வுத் துறை , மத்திய காவல் பிரிவு அதிகாரிகள் நடத்திய தீவிர விசாரணையில், இரு மிரட்டல்களையும் ஒருவரே அனுப்பியுள்ளார் என்பது தெரியவந்தது.
புதன்கிழமை ( ஜூலை 8) அவர் கைது செய்யப்பட்டு, மிரட்டலுக்குப் பயன்படுத்தப்பட்ட மின்னணு சாதனங்களும் பறிமுதல் செய்யப்பட்டன.
காணொளி வாயிலாக நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்ட அந்த ஆடவர், தமது கணினியைச் சரிபார்க்க இணையப் பாதுகாப்பு நிபுணர் ஒருவர் அமெரிக்காவிலிருந்து இங்கு வரவிருப்பதாகக் கூறினார்.
விசாரணைகள் தொடர்வதால், அவர் மேலும் ஒரு வாரத்திற்கு காவலில் வைக்கப்பட்டுள்ளார்.
பொதுமக்களை அச்சுறுத்தும் பொய்யான வெடிகுண்டு மிரட்டல்களைக் காவல்துறை மிக கடுமையாகக் கருதுகிறது. குற்றம் நிரூபிக்கப்பட்டால், ஒருவருக்கு அதிகபட்சமாக ஏழு ஆண்டுகள் வரை சிறை அல்லது $50,000 வரை அபராதம் அல்லது இரண்டு தண்டனைகளும் விதிக்கப்படலாம்.
ஜூலை 16ஆம் தேதி மீண்டும் வழக்கு நீதிமன்ற விசாரணைக்கு வரவுள்ளது.

