சிங்கப்பூரில் எலும்பு மஜ்ஜை தானம்: பலர் முன்வருகை

சிங்கப்பூரில் எலும்பு மஜ்ஜை தானம்: பலர் முன்வருகை

படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

31 Oct 2026 - 6:27 pm

2 mins read

சிங்கப்பூரில் எலும்பு மஜ்ஜை தானம் செய்வதற்கு முன்வருவோரின் எண்ணிக்கை தொடர்ந்து கணிசமாக அதிகரித்து வருகிறது.

எலும்பு மஜ்ஜை நன்கொடையாளர் திட்டம், இவ்வாண்டில் இதுவரை 71 எலும்பு மஜ்ஜைத் தானங்களை ஒருங்கிணைத்துள்ளது.

இது சென்ற ஆண்டு முழுமைக்கும் பதிவான 57 தானங்களைவிட அதிகம்.

சனிக்கிழமை (அக்டோபர் 31) பிடாடாரி பூங்காவில் இத்திட்டத்தின் மூலம் ஏற்பாடு செய்யப்பட்ட ‘மேட்ச் ஃபார் லைஃப் 2026’ நடைப்பயண நிகழ்வில், திட்டத்தின் தலைமை நிர்வாக அதிகாரி சார்ல்ஸ் லோ இதனைத் தெரிவித்தார்.

அறுவைச் சிகிச்சைக்கான தேவைகள் அதிகரித்துவருவது, உள்ளூர் தானமளிப்போரின் பயன்பாடு அதிகரித்திருப்பது, நோயாளிகள் மாற்று அறுவைச் சிகிச்சைகளை எளிதாகப் பெறுவதற்குத் திட்டம் மேற்கொண்டுவரும் முயற்சிகள் ஆகியவற்றை இந்த உயர்வு பிரதிபலிப்பதாகக் கூறப்பட்டது.

எலும்பு மஜ்ஜை நன்கொடையாளர் திட்டம் என்பது லாபநோக்கமற்ற ஓர் அமைப்பு. இது, சிங்கப்பூரின் ஒரே தன்னார்வ எலும்பு மஜ்ஜை நன்கொடையாளர் பதிவேட்டை உருவாக்கி நிர்வகிக்கிறது.

பொருத்தம் கண்டறியப்பட்டதும், ரத்தப் புற்றுநோய் அல்லது மற்ற வகை ரத்த நோய்களால் பாதிக்கப்பட்டோருக்குத் தானம் செய்யுமாறு இந்த நன்கொடையாளர்களிடம் கோரப்படலாம்.

பதிவேட்டில் தற்போது 130,000க்கும் மேற்பட்ட பதிவு செய்யப்பட்ட நன்கொடையாளர்கள் உள்ளனர். ஆயினும், அவர்களில் சிலர் இடையில் பின்வாங்குவதே திட்டத்தின் மிகப்பெரிய சவாலாக இன்னமும் உள்ளது என்று திரு லோ கூறினார்.

பொருத்தமான நன்கொடையாளரைக் கண்டறிய மருத்துவமனைகளிலிருந்து ஆண்டுதோறும் ஏறக்குறைய 500 கோரிக்கைகள் வருவதாகத் தெரிவிக்கப்பட்டது. எனினும், அவற்றில் கிட்டத்தட்ட 20 விழுக்காடு மட்டுமே இறுதியில் மாற்று அறுவைச் சிகிச்சைக்கு வழிவகுக்கின்றன என்று திட்டத்தின் புரவலரும் எரிசக்தி, வர்த்தக, தொழில்துறை அமைச்சருமான டாக்டர் டான் சீ லெங் கூறினார்.

“மாற்று அறுவை சிகிச்சை நடைபெறாமல் போவதற்குப் பல காரணங்கள் உள்ளன. நோயாளியின் உடல்நிலையில் மாற்றம் ஏற்படலாம், நன்கொடையாளரால் தொடர முடியாமல் போகலாம் அல்லது பொருத்தமானவர் கிடைக்காமல் போகலாம்,” என்று சனிக்கிழமை நடைபெற்ற நிகழ்ச்சியில் அவர் தெரிவித்தார்.

“எனவே, தேவைப்படும் நோயாளிகளுக்குப் பொருத்தமான நன்கொடையாளரைக் கண்டறியும் வாய்ப்புகளை அதிகரிக்க, நமது நன்கொடையாளர் பதிவேட்டைத் தொடர்ந்து விரிவுபடுத்தவும் பன்முகப்படுத்தவும் வேண்டும்,” என்று அமைச்சர் டான் குறிப்பிட்டார்.

குறிப்புச் சொற்கள்