தமிழ் முரசு வாசகர்களுக்கு எங்கள் உளங்கனிந்த தீபாவளி வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

சிங்கப்பூரில் மாபெரும் புத்தகத் திருவிழா

2 mins read
எஸ்ஜி60 கொண்டாட்டத்தின் ஓர் அங்கமாக சமூக அமைப்புகளின் ஒத்துழைப்புடன் நடைபெறுகிறது
fd60564c-f79b-4422-a663-c7f1d147827a
தமிழ்ப் புத்தகத் திருவிழாவை நடத்த சிங்கப்பூர்த் தமிழ் எழுத்தாளர் கழகத்துடன் 16 அமைப்புகள் கைகோத்துள்ளன. - சித்திரிப்பு: பிக்சாபே

சிங்கப்பூர் சுதந்திரம் பெற்று 60 ஆண்டுகள் நிறைவுபெறுவதை முன்னிட்டு, சமூக அமைப்புகளின் ஆதரவுடன் சிங்கப்பூர்த் தமிழ் எழுத்தாளர் கழகம் மாபெரும் தமிழ்ப் புத்தகத் திருவிழாவிற்கு ஏற்பாடு செய்துள்ளது.

வரும் மே மாதம் 9ஆம் தேதி முதல் 11ஆம் தேதி வரை 100 விக்டோரியா ஸ்திரீட்டில் உள்ள தேசிய நூலக வாரியக் கட்டடத்தின் ‘த பிளாஸா’ கீழ்த்தளத்தில் அந்நிகழ்ச்சி நடைபெறும்.

நாள்தோறும் காலை 11.00 மணி முதல் இரவு 9.00 மணி வரை நடைபெறும் புத்தகத் திருவிழாவில் மொத்தம் 20 அரங்குகள் அமைக்கப்படும்.

இந்தியாவிலிருந்து டிஸ்வகரி புக் பேலஸ், சிக்த்சென்ஸ் பப்ளிகேஷன்ஸ், யாவரும் பதிப்பகம், புத்தகக் கடை டாட் காம் ஆகிய பதிப்பகங்களும் மலேசியாவிலிருந்து உமா பதிப்பகம், ஜெயபக்தி பதிப்பகம், தமிழ்க்கனி என்டர்பிரைஸ் ஆகியவையும் சிங்கப்பூரிலிருந்து கிரிம்சன் எர்த் பதிப்பகம், ஜீவஜோதி பதிப்பகம், சிராங்கூன் டைம்ஸ், ஆரியா கிரியேஷன்ஸ், தமிழ்கியூப், தமிழ் குரு, கவிமாலை, எழுத்தாளர் கழகம் ஆகியவையும் பங்கேற்கின்றன.

தமிழர் பேரவை, இந்திய முஸ்லிம் பேரவை, சிங்கப்பூர்த் தமிழாசிரியர் சங்கம், தமிழ்மொழி பண்பாட்டுக் கழகம், கவிமாலை, சிங்கப்பூர்த் தமிழ் இலக்கியக் களம், அண்ணாமலைப் பல்கலைக்கழக முன்னாள் மாணவர்கள் சங்கம் (சிங்கப்பூர்), அழகப்பா கல்வி நிலையங்களின் முன்னாள் மாணவர்கள் குழு, ஜமால் முகம்மது கல்லூரி முன்னாள் மாணவர்கள் சங்கம் (சிங்கப்பூர்), பெரியார் சமூக சேவை மன்றம், தமிழ்ப் பட்டிமன்றக் கலைக் கழகம், சிங்கப்பூர் இந்து சபை, அப்துல் கலாம் தொலைநோக்கு இயக்கம், சைவ சித்தாந்த சங்கம், அதிபதி அனைத்துலக நாடக மன்றம், சிற்பிகள் மன்றம் ஆகிய 16 அமைப்புகள் தமிழ்ப் புத்தகத் திருவிழாவை நடத்தச் சிங்கப்பூர்த் தமிழ் எழுத்தாளர் கழகத்துடன் கைகோத்துள்ளன.

சிங்கப்பூரில் இத்தகைய புத்தக விழா ஏற்பாடு செய்யப்படுவது இதுவே முதல் முறை. அமைக்கப்படும் அரங்குகளில் புத்தகங்கள் அனைத்தும் 10 விழுக்காட்டுக் கழிவு விலையில் விற்கப்படும்.

அத்துடன் மூன்று நாள்களும் இளையர்கள் ஏற்பாடு செய்யும் நிகழ்ச்சிகளுடன் பட்டிமன்றம், கவியரங்கம், வெளிநாட்டுப் பதிப்பாளர்கள் பங்கேற்கும் கலந்துரையாடல் ஆகியவையும் இடம்பெறும்.

மாணவர்களுக்குப் போட்டிகளும் ஏற்பாடு செய்யப்படுகின்றன.

கருத்தரங்கு

எழுத்தாளர் கழகம் ஏற்பாடு செய்யும் மற்றொரு நிகழ்ச்சி இலக்கியக் கருத்தரங்கு. இது, ‘60 ஆண்டு காலச் சிங்கப்பூர்த் தமிழ் இலக்கியம்’ என்னும் தலைப்பில் வரும் செப்டம்பர் 7ஆம் தேதி தேசிய நூலக வாரியத்தின் 5ஆம் தளத்தில் நடைபெறவிருக்கிறது.

காலை முதல் மாலை வரை நடைபெறவிருக்கும் அக்கருத்தரங்கில் ஐந்து அமர்வுகளும் ஒரு கலந்துரையாடலும் இடம்பெறும். அது பற்றிய மேல் விவரங்கள் பின்னர் அறிவிக்கப்படும்.

நூல் வெளியீடுகள்

மேலும், 60 சிறுகதைகள் அடங்கிய தொகுப்பையும் 60 கட்டுரைகள் அடங்கிய தொகுப்பையும் வெளியிட கழகம் ஏற்பாடு செய்துவருகிறது. செப்டம்பர் 7ஆம் தேதி நடைபெறும் கருத்தரங்கின் இறுதியில் அந்தத் தொகுப்புகள் வெளியிடப்படும்.

குறிப்புச் சொற்கள்